5.5 அடிகளார் உரைநடையின் தனித்தன்மை

தனித்தமிழ் நடை கண்டதோடு தமக்கெனத் தனி நடையையும் மறைமலை அடிகளார் உருவாக்கிக் கொண்டார். இலக்கியச் சொற்களைப் பெய்தல், பழஞ்சொற்களையே ஆளுதல், நீண்ட வாக்கியங்களாக அமைத்தல், விளக்கமாகக் கூறுதல், வருணித்துக் கூறுதல் என்பன அவரது நடையின் தனித்தன்மையை உணர்த்துவன எனலாம். சில எடுத்துக்காட்டுகள் மூலம் அவரது நடையில் தனித்தன்மையைக் காண்போம்.

5.5.1 தனிநடை

திரும்பத் திரும்ப நடந்து போவதால் தடம் உருவாவது போல், பழகப் பழக நடை உருவாகும். தனிநடை என்பது ஓர் ஆசிரியரின் அகமன வெளிப்பாடு. ஆளுமையின் மலர்ச்சி. தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் நாட்டம் கொண்டால் தனிநடை, தானே உருவாகும். தனிநடை என்பது தம் பண்பு (ஆத்மகுணம்) தோன்ற எழுதுவதேயாம். சொல்வதற்கென்று புதிய சொற்களை வைத்திருப்போர் அவற்றை வெளிப்படுத்த முனையும் போது அதற்கேற்ற மொழிநடையைத் தேடுகின்றனர். கிடைக்காத போது அந்நடையைத் தாமே உருவாக்குகின்றனர். ‘முயன்றால் நாமும் இதுபோல் எழுதலாம்’ என்னும் உணர்வை எந்த உரைநடை தூண்டுமாயினும் அது தனித்தன்மை உடையதே. அவ்வகையில் அடிகளாரின் எழுத்து நடை தனித்தன்மை உடையதாக விளங்கியது.

மறைமலையடிகள் தாம் எழுதிய முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலின் முன்னுரையில்,

"முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப் புலவர்கள் தமதருமைச் செந்தமிழ் மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமியதாக ஓம்பிப் பொய் சிறிதும் கலவா அறிவுரையே பகரும் தமது நாவால் மெய்ப்பொருள்களே நிரம்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்து வந்தனர். அதனால், அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்களையும் விளங்க விளங்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாய்த் தோன்றிய தமிழ்ப்புலவர்களோ பெரும்பாலுந் தம் முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப் பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களோடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல்லாதனவும் முழுப்பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய்வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ்விரு திறமும் பிரித்து நனி விளங்கக் காட்டினாலன்றி, இனித்தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம் படுத்தாரெனக் கருதியே இந்நூலை இயற்றலானேம்.

மேற்குறிப்பிட்ட பத்தியில் மிக நீண்ட வாக்கிய அமைப்பையும், இலக்கியச் சாயம் ஏறிய பழந்தமிழ்ச் சொற்களையும், சொல்லணி மிடைந்த அலங்காரங்களையும் நாம் காணுகிறோம். இவை மறைமலை அடிகளாரின் இலச்சினையை நம் கருத்தில் பதிக்கின்றன.

5.5.2 படைப்பு விளக்கம்

படைப்பு என்பதனை விளக்க நினைக்கும் மறைமலையடிகளார் முதற்கண் நுண்மை நடையிலேயே பேசி, அதை விளக்கப் பருமையை எடுத்தாளுவதைக் கீழே காண்க (from subtle to gross).

"படைப்பு எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்கு படுத்தலெனின் உறுப்பின்றிப் பிண்டமாகக் கிடந்த ஒரு பொருளை உறுப்புடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும்பேராற்றலால் நிகழ்த்தும் படைப்புக்கு ஒப்பாக எடுத்துக் காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகிலில்லையாயினும், ஈண்டெடுத்துக் கொண்ட தருக்கம் இனிது விளங்குதற் பொருட்டு ஓருதாரணம் எடுத்துக் காட்டுவாம். தச்சுத் தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பல துண்டுகளாக ஈர்த்து அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும், மிகுத்தும் பலவேறு படுத்திப் பின் அத்துண்டுகளையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலி செய்யக் காண்கிறோம். இங்ஙனம் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து உறுப்புக்களையுடைய நாற்காலியாக ஒழுங்குபடுத்து முயற்சியே படைப்பென்பதாம். இதுபோல் இறைவனும் உறுப்பின்றி வடிவமற்றுக் கிடந்த மிகுநுட்பப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கடலுமாகிய உறுப்புடைய பருப்பொருளுலகமாக ஒழுங்குபட அமைத்து உயிர்களுக்கு உதவியாக வைத்தருளினான். இங்ஙனம் செய்யப்படுவதாகிய படைப்பும் மிகு நுண்ணிய உள்பொருண்மாயையிற் செய்யப்படுவதல்லது வெறும்பாழின்கட் செய்யப்படுவதன்றாம். ஆகவே, படைப்பு என்பது எக்காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து அமைக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவற்றான் இனிது விளங்கும்

என்று படைப்புப் பற்றி வர்ணித்துள்ளார்.

5.5.3 பாட்டு விளக்கம்

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையில் அடிகளார் பாட்டு என்பதற்குத் தரும் விளக்கம்.

"மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை என்னும் மலைக்குகைகளிலே அரித்து எடுத்து வந்த அருங் கருத்துகளான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி யெடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்று அறிதல் வேண்டும்

என்று அடிகளார் பாட்டிற்கு விளக்கம் தந்துள்ளார்.

5.5.4 வைகறை வருணனை

"பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் போர்த்தியிருந்த நீலப்பட்டாடையினைச் சிறிது சிறிதாக நீக்கி, பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து, ஒளி விளங்கு தன் நளிமுகம் காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டம் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கி விடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற்றிரளை போலத் தளதளவெனக் கீழ்த்திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை, பொன்மை, நீலம், சிவப்பு, வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் திகழவும்.

அடிகளாரின் மேற்கண்ட வைகறை வருணனை வண்ணப் பகட்டோடு செம்மாந்த நடையில் விரைந்து நடக்கிறது.

5.5.5 மணிதிருநாவுக்கரசு மரணம்

அடிகளாரின் வாக்கியங்கள் நீளமானவை. அவற்றில் அருஞ்சொற்கள் பலவற்றை ஆங்காங்கே காணலாம். எனினும் படிப்பதற்கு இனிமையாக இருக்கும். அவருடைய நடைக்குப் பின்வரும் மேற்கோளைத் தரலாம்.

“நமது பொதுநிலைக் கழக முதன் மாணவரும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியருமான மணி.திருநாவுக்கரசு முதலியார் பிரசோற்பத்தி வைகாசி 12ஆம் நாள் சனிக்கிழமை (23.05.1931) முற்பகலில் திடீரென இம்மண்ணுலக வாழ்வு நீத்து விண்ணுலகு புகுந்த செய்தி இத்தமிழ் நாட்டவர் எல்லாரையும் திடுக்கிடச் செய்து, அவருக்குப் பெருந்துயரைத் தருவதொன்றாய் எங்கும் பரவலாயிற்று. முகிழ்ந்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ அதனருமையறியான் ஒருவனாற் கிள்ளியெறியப்பட்டு அழிந்தாற் போலவும், மறை நிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக்காட்டுதற்கு ஏற்றி வைத்த ஒரு பேரொளி விளக்குச் சடுதியில் வீசிய சூறைக் காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்டநாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வனொருவனாற் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ்நாட்டுக்கு ஒரு கல்வி மலராய், ஓர் அறிவு விளக்காய், ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 43ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது ஒரு பெருங்கொடுமையன்றோ?”

என்று எழுதியுள்ளார்.

5.5.6 கடிகாரம் பழுதடைதல்

“நிலைக் கடிகாரத்தில் மணி முள் நிமிடமுள்ளை அழுத்தும் பித்தளைச் சிறுகுமிழ் முறிந்து போனதற்கு வேறு நல்லதொன்று பொருந்தவில்லை. மணி முள்ளும் கழன்று கீழே தொங்குகின்றது. அதனை இறுகப் பொருத்த வேண்டும்” என்று தம் இல்லத்தில் இருந்த கடிகாரத்தைச் செப்பனிட நேரிட்டபோது உரிய தொழிலாளிக்கு மறைமலையடிகளார் எழுதினார்.

5.5.7 மக்கள் கடமை

“உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதைவிட மக்களால் அடையத்தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள். அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றைச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்தது என்பதை நாம் கண்டு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும். மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாய் இருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனால் தான் நமது பிறவி மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிறந்தது ஆகும் என்று அறிகின்றோம். விலங்குகளுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன் பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால் நாம் எல்லையில்லாத இடர்க்கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதுப்புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம்.

இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசை வல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத்தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியினுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப் போனாலும், அவர்களுடைய அருமைக்குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை. எப்படியெனில் அமெரிக்கா தேசத்தில் அறிவியலிற் சிறந்து விளங்கிய எடிசன் என்னுந் துரைமகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப்பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலிகளையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றோம் அல்லோமோ? நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத்துணர்ச்சியை, நாம் பல வகையான உயர்ந்த வழிகளிலும் வளரச் செய்து அதனால் அழியாப் பெரும்பயனை அடைதல் வேண்டும். இதுவரையிலுமே பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும், அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா. வெள்ளைக்காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியால் பல்வேறு நூல்களும், பல்வேறு புதினத்தாள்களும், ஒவ்வொரு நொடியுங் கோடி கோடிகளாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையாயிருப்பவர்களும் சிறிது பொருள் செலவு செய்து, தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். இத்தனைப் பெரும்பேறுகளும் காக்ஸ்டன் (Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப் பொறியைக் கண்டு பிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ? பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும், அவற்றால் தாமும் பயன் பெற்று மற்றையோரையும் பயன்பெறச் செய்து வருதல் போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மலோன இன்பங்களை அடையக் கடமைப் பட்டிருக்கின்றோம்.”

இவ்வாறு மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது பற்றியும், மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

5.5.8 கடவுள் உணர்ச்சியின் இன்றியமையாமை

“எல்லாம் வல்ல இறைவன்றன் அருளியக்கத்தை எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்கும் அம்பலவாணன் திருவுருவ வழிபாட்டைவிடச் சிறந்ததும், சிற்றுயிர்களாகிய நமக்கு இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எளிதிற் பயப்பதும் வேறு ஏதுமே இல்லை. இவ்வுடம்பையும் இவ்வுடம்பிலுள்ள கண், கால், கை முதலான உறுப்புகளையும் படைத்துக் கொடுத்த முதல்வனுக்கு, அவ்வுடம்பையும் அவ்வுறுப்புகளையும் பயன்படுத்தி நெஞ்சம் நெக்கு நெக்குருகுதலால் மட்டுமே அவன் திருவருட்பேற்றிற்கு உரியராகலாம். இதுபற்றியே இராமலிங்க அடிகளார் சமரச சன்மார்க்க சங்கம் அல்லது பொதுநிலைக் கழகம் என்பதனை வகுத்து எல்லாத் தேயத்தார்க்கும் பொதுவாய் நின்று அருள் வெளியிலே ஆடல் புரியும் அம்பலவாணனாகிய ஒரு தனித்தலைமைக் கடவுளின் வழிபாட்டை வலியுறுத்தினார். எல்லாம் வல்ல இறைவன் அறிவும் அன்பும் அருளுமே உருவாய்க் கொண்டு விளங்குகின்றானென்பது அவன் அமைத்த அமைப்புகளில் நன்கு புலனாகிறது. இவ்வாற்றால் கடவுளிடத்துப் பேரன்பு பூண்டு ஒழுகுவதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பினால் அகங்கரைந்து ஒழுகுவதும் ஒன்றைவிட்டொன்று பிரியாத அத்துணை ஒருமைப்பாடுடையவாகும். உயிர்களிடத்து இரக்கம் காட்டுதலென்பது உயிர்களைக் கொல்லாமையும் அவற்றின் ஊனை உண்ணாமையும் ஆகும். உயிர்களைக் கொல்வோரும் அவற்றின் ஊனை உண்போரும் கொடிய வன்னெஞ்சமுடையராதலால் அவர்க்கு அன்பும் அருளும் உண்டாகா.”

எல்லாச் சாதியாரும், எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேற்றுமையுமின்றி வழிபட்டு உய்யும் பொருட்டு அம்பலவாணர் திருவுருவம் வைத்த கோயிலொன்று மறைமலை அடிகளாரால் அமைக்கப்படலாயிற்று. அம்பலவாணர் திருக்கோயிலுடன் மணிமொழி நூல் நிலையமும் சேர்த்துப் பொதுநிலைக் கழக நிலையத்தில் அடிகளார் அமைத்தார்.