1.5 தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பு

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டை ‘உரைநடை வளர்ச்சிக்காலம்’ என்று குறிப்பிடுதல் வேண்டும். இந்தக் கால கட்டத்தில் தமிழ் உரைநடையில் நூல்களை இயற்றிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அளவில் நின்று உரைநடை வளர்ச்சிக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அத்தகைய பங்களிப்புகளுள் சேதுப்பிள்ளையின் பங்களிப்புக் குறிப்பிடத் தகுந்ததாகும்.

கொட்டிக் கிடக்கும் செங்கற்களை ஒழுங்காக அடுக்கி வைத்தால் அது கோபுரமாக உருவம் பெறும். அதைப் போலவே குவிந்திருக்கும் செந்தமிழ்ச் சொற்களை அழகுற அமைக்கும் போது கருத்தில் இருக்கும் காட்சிகளை நம் கண்முன் கொண்டுவர முடியும். இந்தச் சாதனையை இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நிகழ்த்தியிருக்கிறது எனலாம். எனவே இரா.பி. சேதுப்பிள்ளை தமிழ் உரைநடைக்குத் தந்திருக்கும் பங்களிப்புகளில் காட்சி வருணனை என்பதும் ஒன்றாகும். இதற்கு எடுத்துக் காட்டாக ஆற்றொழுக்காய் அமைந்த அவரது உரைநடை ஒன்றைக் காணலாம்.

“மலையிலே மழை பொழிந்து வெள்ளம் எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆறாய்ப் பாய்கின்றது; ஆற்றுநீர் கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர்பச்சைகளையும் செடி கொடிகளையும் வளர்க்கின்றது” எனவரும் தொடர்களில் அமைந்துள்ள சொற்கள் ஆற்று வெள்ளத்தை, அழகிய அருவியை நம் கண்முன் நிறுத்தி விடுகின்றன.

உரைநடையில் மிடுக்கும், வருணனையில் எடுப்பும் கொண்ட சேதுப்பிள்ளையின் பங்களிப்பைக் கண்ட நாம் உரைநடையின் ‘பொருள்’ அடிப்படையில் அவரது பங்களிப்பையும் காணலாம். அவரது உரைநடையின் பெரும்பகுதியும் தமிழகத்து ‘ஊர்ப் பெயர்களில்’ பொதிந்திருக்கும் வரலாற்றுச் செய்திகளை வடித்துத்தரும் பணியைச் செய்துள்ளன. இதனையும் சேதுப்பிள்ளை உரைநடையின் நிகரில்லாப் பங்களிப்பாகக் கொள்ளலாம். இதற்கும் ஓர் எடுத்துக் காட்டைக் காண்போம்.

தொண்டை நாட்டின் பெருமைகளை உணர்த்தும் அவரது உரைநடை பின்வருமாறு:

சான்றோர் பலரை ஈன்றெடுத்த தொண்டை நாட்டில் நெடியோன் குன்றமாகிய திருவேங்கடம் உண்டு; கண்ணப்பன் பணிசெய்த காளத்தி மலையுண்டு; தமிழ் முருகன் அருள்புரியும் தணிகைமலை உண்டு; களிறும் பிடியும் வலஞ்செய்து வணங்கும் கழுக்குன்றம் உண்டு; மாநிலம் கண்டு மகிழும் கலைக்கோயில்களை உடைய மாமல்லபுரம் உண்டு; வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வீரப்பெருமக்கள் வாழ்ந்த பழையனூரும் உண்டு. இன்னும் தென்னாட்டின் அணிகலனாய்த் தமிழகத்தின் தலைநகராய்த் திகழும் சென்னை மாநகரமும் உண்டு.”

மேற்காணும் பத்தியில் அமைந்த ‘உண்டு’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, சேதுப்பிள்ளை உணர்த்த வந்த கருத்தோடு ‘உணர்ச்சி’யையும் கலந்து தருவதற்கு ஏதுவாக அமைகின்றது.

தமிழகத்தில் இருக்கும் சிற்றூர்கள் முதல் பேரூர், நகரங்கள் வரையில் அவற்றின் பெயர் இன்று திரிந்தும் மருவியும் வழங்கிவரும் நிலையினை நீக்கி அவற்றிற்கு நம்முன்னோர் முதற்கண் இட்டு வழங்கிய செந்தமிழ்ப் பெயர்களை ஆய்ந்தறிந்த பெரும்பணியைச் சேதுப்பிள்ளையின் சிறப்பான பங்களிப்பாகக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கியச் செய்திகளை அறியவும் செல்வங்களைத் துய்க்கவும் மூல நூல்களைத் தேடிப் படிக்கும் நிலை இருந்தது; அப்போது, சேதுப்பிள்ளை தமது செம்மை நிறை தமிழ் நடையால் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்னும் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் பெருமைகளை அனைவரும் உணரும் வண்ணம் வெளிப்படுத்தினார். இதனால் மூல இலக்கியங்களைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாத தமிழர்கள் சேதுப்பிள்ளையின் உரைநடையைப் படித்துப் பயன் பெற்றனர். இவரது ‘தமிழின்பம்’ என்னும் நூல் இத்தகைய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைகின்றது.

எனவே தமிழ்ப் புலவர்களும் தமிழ் அறிஞர்களும் மட்டுமே துய்த்துவந்த தமிழ் இலக்கிய இன்பத்தைப் பாமரர்களும் துய்ப்பதற்கு வழி வகுத்தவர்களுள் தலைமை நிலை பெறுபவர் சேதுப்பிள்ளை ஆவார். எழுதப் படிக்கத் தெரிந்த தமிழனைத் தமிழின் கவிதை நயத்தையும் காப்பியச் சுவையையும் துய்க்கத் தூண்டியது இரா.பி. சேதுப்பிள்ளையின் எடுப்பான பேச்சும் எழிலான உரைநடையும் ஆகும்.

எனவே இவரது பங்களிப்பை, 

காட்சி வருணனையை வடித்துக் காட்டியது.
தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் ஒளிந்திருந்த வரலாற்றுச் செய்தியைப் புலப்படுத்தியது.
கற்றவர் மட்டுமன்றி எல்லோரும் இலக்கிய இன்பத்தை நுகர்வதற்கேற்ற வகையில் இலக்கியப் புதையலைப் புலப்படுத்தியது.
என அடுக்கிக் கூறலாம்.