3.4 சொல்லாக்கங்கள்

தமிழில் புதிய கருத்துகளை எழுதும்போதோ அல்லது தமிழில் முன்னரே கலந்துவிட்ட ஆங்கிலம் அல்லது வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேடும்போதோ தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் தேவை எழுகிறது. அத்தகைய தேவைக்கேற்பப் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவதையே சொல்லாக்கம் என்கிறோம். 

பாவாணர் தனித்தமிழில் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் இரு சிக்கல்கள் எழுந்தன. ஒன்று, முன்னரே தமிழில் எழுதி வந்தோர் தமிழ் உரைநடையில் புகுத்தியிருந்த வடசொற்களை நீக்குதல். அவ்வாறு வடசொற்களை நீக்கிட வேண்டுமானால் அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் புகுத்த வேண்டும். இப்பணியில் இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அந்த வடமொழிச் சொற்களுக்கு இணையாகத் தமிழ் இலக்கியங்களிலும் அல்லது மக்கள் வழக்குகளிலும் தமிழ்ச் சொற்கள் இருக்குமானால் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு தமிழில் இருந்த சொற்கள் வழக்கற்றுப் போயிருக்குமானால் புதிய சொற்களை உருவாக்க வேண்டும். எனவே இதற்குத் தமிழில் சொல்லாக்கம் என்னும் பணியை மேற்கொள்வது பாவாணரின் தமிழ்ப் பணிகளில் முதன்மையாக அமைந்து விட்டது எனலாம்.

இரண்டாவதாக, மானிடவியல், மொழியியல் குறித்து எழுதும் இடங்களில் சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் சொற்கள் அமைந்திராதபோது புதிய சொற்களை உருவாக்குதல் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விடுகின்றது.

எனவே, தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேடும் போதும், ஆங்கில நூற் கருத்துகளைத் தமிழில் எழுதும் போதும் தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் தேவை எழுகிறது என்பதை நாம் அறியலாம்.

ஆங்கிலத்தில் இருந்து புதிய சொற்களை உருவாக்கியமைக்குத் திரவிடத் தாய் என்ற நூலில் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கது.

“தமிழையும் பிற திராவிட மொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையும் அறிவதுடன் மனித இன வகை வேறுபாடுகளைப் பற்றிய ஆய்வு நூல் (Ethnology), வரலாற்று நூல் (History) மொழி நூல் (Philology) ஆகிய முக்கலைகளின் திறவுகோலையும் காணப் பெறுவதாயிருந்தனர். இனிமேலேனுந் தமிழர் தம் கடமையுணர்ந்து கடைப்பிடிப்பாராக.”

தமிழரின் பேச்சிலும் எழுத்திலும் வட சொற்கள் பலவும் தமிழ் வடிவம் பெற்று வழங்கி வருகின்றன. அவற்றைத் தமிழர்கள் வடசொற்கள் என்ற எண்ணம் இல்லாமலே கையாண்டு வருகின்றனர். இத்தகைய நிலையைப் பாவாணர் மாற்ற வேண்டும் என்று கருதினார். எனவே இவற்றிற்கும் தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்குதல் தமிழின் தனித்தன்மையைப் பாதுகாத்திட மிகவும் தேவை என்பதை உணர்ந்தார். புதிய சொல்லாக்கங்களை உருவாக்கினார். அவ்வாறு அவர் உருவாக்கியிருக்கும் சொற்கள் குறித்து அவர் எழுதிய திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

உபசரித்தல் என்னும் வடசொல் சார்த்திக் கூறுதல் என்னுந் தென் சொல்லாலும், ‘காரணம்’ என்னுஞ் சொல் கரணியம் அல்லது கரணகம் என்னும் வடிவினாலும், ‘காரியம்’ என்னுஞ் சொல் கருமகம் அல்லது கருமியம் என்னும் வடிவினாலும் குறிக்கப்பட்டுள” என்று பாவாணர் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். 

இன்றைய நாளில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களில் பலரும் தமது பேச்சிலும் உரையாடலிலும் ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுகின்றனர். இவ்வாறு பேசுவதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. படிப்பறிவு பெறாத மக்களும் சில ஆங்கிலச் சொற்களை அவை ‘தமிழ்ச் சொற்கள்’ என்று கருதியே பேசிவரும் நிலை இன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது. இதனைக் கண்ட பாவாணர் பேச்சு வழக்கில் பெருவழக்காய் இருக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக அருந்தமிழ்ச் சொற்களை உருவாக்கியுள்ளார். அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம். 

ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
Socialism - கூட்டுடைமை
Ice cream - பனிக்கூழ்
Fruit salad - பழக் கூட்டு

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பாவாணர் உருவாக்கி அவரது உரைநடையில் பயன்படுத்தி இருப்பதைக் காண்கிறோம். அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. 

வடசொல் தமிழ்ச்சொல்

(1)

சங்கம் - கழகம்
(2) சமுதாயம் - குமுகாயம்
(3) சைவம் - சிவனியம்
(4) சித்தாந்தம் - கொண்முடிபு
(5) வைணவம் - திருமாலியம்
(6) நாத்திகம் - நம்பா மதம்
(7) முடியாட்சி - கோவரசு
(8) ஜாதகம் - பிறப்பியம்
(9) பஞ்சாங்கம் - ஐந்திறம்