மு.வ.வின் ஆசிரியப்பணி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கியது. அப்பணி கல்லூரிப் பேராசிரியர் என்னும் உயர்வினை அடைந்தது. அது மேலும் சிறந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற நிலையை எட்டியது. நிறைவாகப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் என்னும் உச்ச நிலையை அடைந்தது. வளர்பிறை போல் வளர்ந்து வந்த அவரது பதவிகள், அவரது படைப்புகள் பல்கிப் பெருகித் தோன்றுவதற்கு வாய்ப்பாக அமைந்தன. மு.வ. 1940 ஆம் ஆண்டு முதல் நூல்களை எழுதத் தொடங்கினார். 1940 முதல் 1970 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய முப்பதாண்டுகள் அவரது எழுத்துப்பணி அமைந்தது. மு.வ. 62 ஆண்டுகள் மட்டுமே (1912-1974) உயிர் வாழ்ந்தவர், ஏறக்குறைய முப்பதாண்டுகளாக நூல்களைப் படைத்தவர். அவர் படைத்த நூல்கள் 85 ஆகும். என்ன! மாணவர்களே, மு.வ.வின் நூல்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்கும் போது வியப்பு எழுகின்றதல்லவா?. மு.வ.வின் படைப்புகளில் பலவகை உண்டு. சில படைப்புகளைத் தமிழுக்குப் புதியதாக அறிமுகப்படுத்தியும் உள்ளார். மு.வ.வின் 85 நூல்களையும் இங்குப் பட்டியலிடுதல் வேண்டியதன்று. அப்படைப்புகள் எந்தெந்த வகைகளில் அடங்குவன என்று காண்பது மட்டும் இங்குப் பொருத்தமாகும். மு.வ.வின் 85 நூல்களையும் 15 தலைப்புகளில் வகைப்படுத்திக் காட்டலாம்.
மு.வ. எழுதிய 85 நூல்களில் அவரது உரைநடையின் சிறப்பு வெளிப்படுகின்றது. இந்தச் சிறப்பிற்காக மு.வ.விற்குப் பல பரிசுகள் கிடைத்தன. மு.வ.வின் அகல்விளக்கு என்னும் நாவலுக்கு இந்திய அரசின் சாகித்திய அக்காதமியின் விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ என்னும் நாவலுக்கும், அரசியல் அலைகள் என்னும் அரசியல் சிந்தனை நூலுக்கும், மொழியியற் கட்டுரைகள் என்னும் நூலுக்கும் தமிழக அரசின் பரிசுகள் கிட்டின. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசினை மு.வ.வின் ஆறு நூல்கள் பெற்றுள்ளன. மு.வ.வின் பல நூல்கள் தமிழகம் முழுவதும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பயிலும் பட்டப் படிப்பு மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் பாடங்களாக வைக்கப்பட்டன. இன்றும் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் தோன்றிய வேறு எந்தத் தமிழ் அறிஞர் படைப்புகளையும் விட மு.வ.வின் படைப்புகளே அதிக அளவில் பாடநூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இது மிகப்பெரும் சிறப்பு என்பதில் ஐயமில்லை. அமெரிக்கப் பல்கலைக் கழகம் (ஊஸ்டர்) ஒன்றில் ‘டி.லிட்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கதாகும். இனி, இத்தகைய பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் உரியதாக அமையும் மு.வ.வின் உரைநடையின் சிறப்புக் கூறுகளைக் காண்போம். |