உரைநடை எழுதும் ஒவ்வொருவரும் அவர்களின் படைப்புகள் வழியாகத் தமிழுக்கு இலக்கியக் கொடை வழங்குகின்றனர் என்பதை நாம் அறிவோம். அத்துடன் அவர்களது உரைநடையும் தமிழுக்குப் புதுமையைக் கொண்டு வரும் பணியைச் செய்திருக்கும் எனில் அதுவும் அவர்களின் கொடையாகவே கருதப்படுதல் வேண்டும். அந்த வகையில் கண்ணதாசனும் அவரது உரைநடையின் வழியாக உரைநடைத் தமிழுக்குக் கொடை வழங்கியுள்ளார். அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காணலாம். அவை,
என்பன. உரைநடை என்பது தொடர்களின் தொகுப்பு என்பதை நாம் நன்கறிவோம். இந்தத் தொடர்கள் எவ்வாறு அமைந்தால் அந்த உரைநடை படிப்பதற்கு ஏற்ற வரிசையில் அமையும் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் அந்த ஆசிரியரின் மொழிநடை வெளிப்படும். இந்த அடிப்படையில் நோக்கும் போது தொடர்கள் சிறு சிறு தொடர்களாகவும் அமையலாம்; நீண்ட தொடர்களாகவும் அமையலாம். இவ்விரண்டு வகையில் சிறு தொடர்களாக அமையும் உரைநடை, படிப்பவரைக் கருத்தோடு நெருக்கமாகப் பிணைக்கும் தன்மையுடையதாகும். கண்ணதாசன் சிறு சிறு தொடர்களை எழுதுவதில் வல்லவர். பின்வரும் அவரது உரைநடையைப் படியுங்கள். “தூக்கம் ஒரு வகை லயம், ஒருவகை சுகம், ஈடு இணையில்லாத போகம். நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது அவன் செய்த தவம். அவன் பெற்ற வரம். ஆனால் கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல, ரோகம்!” சிறுசிறு தொடர்களாக அமைந்த கண்ணதாசனின் இந்த உரைநடை எழுத்தாளனுக்கும் படிப்பவருக்கும் இடையே ஒரு நெருக்கத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. கவிதையில் மட்டும் அல்லாமல் உரைநடையில் புனைவுகள் (புதினம், சிறுகதை) எழுதுகின்ற போதும் வருணனைகள் இடம்பெறுதல் வேண்டும். இயற்கை அழகை, காலைக் கதிரவனை, மாலை மதியத்தை விவரித்து எழுதுவதற்கு இந்த வருணனை மிகவும் இன்றியமையாதது ஆகும். உரைநடையில் வருணனை வருகின்ற இடங்களில் மொழிநடையின் சுவை குறைந்து விடுதல் கூடாது. கண்ணதாசன் உரைநடை வருணனையைத் தமிழுக்குக் கொடையாக வழங்கியுள்ளது எனலாம். “வசந்த காலம் வந்து விட்டதென்பதற்கு அறிகுறிகள் தோன்றுகின்றன. இலைகள் உதிருகின்றன. மீண்டும் தழைக்கின்றன. சமயங்களில் மழை வெள்ளக் காடாகிறது. வெயில் நெருப்புக் கோளமாகிறது.” இந்த வருணனை வசந்தத்தின் வருகையை நம் கண்முன் நிறுத்துகிறது அல்லவா? கண்ணதாசன் தமிழகத்தில் தமிழ் மொழியின் பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணி நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர். இழந்த பழம்புகழைத் தமிழுக்கு ஈட்டித் தர வேண்டும் என்று முனைந்த தமிழ்க் கவிஞர்களுள் கண்ணதாசன் குறிப்பிடத் தக்கவர். இவரது தமிழ்மொழிப் பற்று கவிதைகளில் வீறுகொண்டு எழுந்ததைப் போலவே உரைநடையிலும் நன்கு வெளிப்பட்டது. கண்ணதாசனின் உரைநடையில் காணப்படும் தமிழ்ப் பற்றுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் காணலாம். அவற்றுள், ஒன்று, ‘குமரி மலையின் பூக்களைவிட அதிக மணம் பரப்பும் நமது மொழி’ என்று கண்ணதாசன் தமிழ்மொழியின் புகழை மலரின் மணத்திற்கு ஒப்பிட்டுக் காட்டுவது குறிப்பிடத் தக்கதாகும். தமிழர் முச்சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த செய்திகளும், தமிழின் காப்பியச் செய்திகளும் அவரது உரைநடையில் பல இடங்களில் பதிவாகியுள்ளன. கண்ணதாசனின் உரைநடையில் காணப்படும் நாட்டுப்பற்று என்பதில் இரு நிலைகள் அமைந்துள்ளன. ஒன்று அவரது தமிழ் நாட்டுப் பற்று; மற்றொன்று இந்திய நாட்டுப் பற்று. கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த போது அவரது படைப்புகளில் தமிழ்நாட்டுப் பற்று தலைதூக்கி நின்றது. அவர் தேசிய இயக்கத்தில் இணைந்த போது அவரது உரைநடையில் இந்திய நாட்டுப் பற்று பரவலாகக் காணப்பட்டது.
சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில் முத்தழகின் தூக்குமேடை உரை கண்ணதாசனின் தமிழ்நாட்டுப் பற்றுக்குத் தக்கதோர் சான்றாகும். “செந்தமிழ் நாட்டாரே, தென்னகத்து வீரர்களே, பொங்கும் பெருங்கருணைப் புகழ் வளர்க்கும் அன்னையரே! பூமி பிறந்த பொழுதினிலே நாம் பிறந்தோம். போர்க்களமே வீடாக, பொழுதெல்லாம் புகழ் வளர்த்தோம்” என்று அமையும் இந்த வீர உரையில் தமிழ் நாட்டின் பழமையும் தொன்மையும் வெளிப்படுகின்றன. தமிழர்கள் ‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்’ என்னும் சங்கத் தமிழ்ப் புலவரின் பாடலை இந்த வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன, ‘பாரத நாடு பழம்பெரு நாடு’ என்ற பாரதியின் பாட்டில் கண்ணதாசனுக்குப் பெருமிதம் உண்டு. இந்தியத் தலைவர்களில் பண்டித ஜவஹர்லால் நேருவின் மீது கண்ணதாசனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கண்ணதாசனின் இந்திய நாட்டுப்பற்றுக்கு ஓர் எடுத்துக் காட்டினைக் காண்போம். சிவகங்கைச் சீமை நாடகத்தில் சின்னமருது பேசுவதாக அமைந்த உரையாடலில் ஆங்கிலேயர் தமிழ்நாட்டு மன்னர்களைச் சிறைபிடித்துச் செல்வதை எதிர்க்கும் வகையில் வசனங்கள் அமைகின்றன. அவர் ஆங்கிலேயரை நோக்கி, “எங்கள் மாளிகையில் எங்கள் நண்பர்களைக் கைது செய்ய நீங்கள் யார்? வெல்ஷ், மார்டின்! உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் என்ன உறவு? பிச்சை எடுக்க வந்த நாடோடிக் கூட்டமே, சோப்பும் சீப்பும் விற்க வந்ததை மறந்து எங்கள் தோழனுக்கே காப்புப் போடத் துணிந்தாயா?” என்று கேட்கிறார். இந்த உரையில் சின்னமருதுவின் வீரம் வெளிப்படுகின்றது. அதன்வழி தென்தமிழ்நாட்டார் ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்குப் போராடிப் புகழ்பெற்ற தகவலும் புலப்படுகின்றது. கண்ணதாசன் உரைநடையில் இன்றியமையாச் சிறப்பாக விளங்குவது அவரது உருவக நடையாகும். இந்த உருவக நடையைக் கண்ணதாசன் கூற விரும்பும் கருத்தை உறுதிபடக் கூறுவதற்கு ஏற்றதோர் உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம். நம்பிக்கை மலர்கள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளில் முடியும் போதெல்லாம் விடியும் என்னும் தலைப்பிலான கட்டுரை குறிப்பிடத் தக்கதாகும். இக்கட்டுரை தன்னம்பிக்கையை வளர்க்கும் தகுதி வாய்ந்த கட்டுரை ஆகும். இதில், ‘வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் வருகின்ற போது வருந்தக் கூடாது’ என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறுவதற்குக் கண்ணதாசன் உருவக நடையைக் கையாண்டுள்ளார். “கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது. மீண்டும் மழைக்காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது. அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது” இந்த உரைநடைப்பகுதி இன்பத்தில் மட்டும் மகிழ்வதும் துன்பத்தில் துவண்டு போவதும் வாழ்க்கையில் செம்மை சேர்ப்பதில்லை என்பதையும் வலியுறுத்துகிறது அல்லவா? |