கவிதைக்குரிய இலக்கியக் கூறுகளான எதுகை, மோனை, உவமை, உருவகம் முதலியவை உரைநடையிலும் அமைகின்றன. இவற்றை அமைத்து எழுதுவது அந்த உரைநடைக்கு அழகு சேர்க்கும் என்பது உறுதி. உரைநடையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருக்கும் கோவி.மணிசேகரனின் படைப்புகளில் அமைந்துள்ள இலக்கியக் கூறுகளில் பின்வருவனவற்றைக் காண்போம். அவை,
என்பவை.
எதுகையும் மோனையும் கவிதைக்குச் சொல்நயம் சேர்ப்பவை. கவிதையைப் படிப்பவர் உள்ளத்தில் ஓசை நயத்தை உருவாக்குவதில் எதுகைக்கும் மோனைக்கும் ஏற்ற பங்கு உண்டு என்பர். இந்த எதுகையும் மோனையும் உரைநடையில் அமையுமானால் அந்த உரைநடை கவிதையின் தரத்திற்கு உயரக் கூடும். கோவி.மணிசேகரனின் உரைநடையின் நெடுகிலும் எதுகை, மோனைகள் நிறைந்து காணப்படுகின்றன. முதலில் எதுகைக்கு ஓர் எடுத்துக் காட்டுக் காண்போம்.
(தென்னங்கீற்று) இந்த உரையாடலில் வரும் எதுகைச் சிறப்பைக் கண்டு மகிழுங்கள். கோவி.மணிசேகரனின் தமிழ் மொழி ஆளுமைக்கு அவரது உரைநடை யெங்கும் சான்றுகள் மிளிர்கின்றன. ‘அவனுக்குப் பெண்டாட்டியின் மீது அப்படி ஒரு மோகம்; அபாரமான தாகம்; அசுரத்தனமான வேகம்’ என்றும், உங்கள் உணர்வுகளை நான் உணருகிறேன் என்றும் வரும் மோனை அழகின் சிறப்பை நினைவில் நிறுத்துங்கள். படைப்பாளர் தாம் புதியதாகத் தெரிவிக்க விரும்பும் செய்தியை எளிதில் எடுத்துரைக்க ஏதுவாகப் பயன்படும் உத்தியே உவமை ஆகும். கோவி.மணிசேகரனின் உவமைத் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம். “மனித தெய்வமான நேருவைக் காணத் தணலிடை அகப்பட்ட புழுவைப் போலவும், தரையிடை வீசப்பட்ட மீனைப் போலவும் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தார்.” இந்தப் பத்தியில் அமைந்திருக்கும் உவமைகள் ஆசிரியரின் படைப்புத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன அல்லவா? உவமையின் செறிவையே உருவகம் என்பர். உவமையைவிட உருவகம் சற்று ஆழமானது என்பது அறிஞர் கருத்து. உருவகமும் ஆசிரியர் கூற விரும்பும் கருத்தை அணிநயத்தோடு விளக்குவதற்குப் பயன்படுகின்றது. காதலன் காதலி இருவருக்கும் இடையே நிகழும் உரையாடலில், காதலி காதலனிடம் தன் காதலைப் பற்றித் தன்விளக்கம் தரும் சூழலில் பின்வரும் பத்தி அமைகின்றது. “நான் கலைந்த கோலம். முற்றுப்பெறாத கவிதை. அதனை மீண்டும் பளிச்சிடச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? - இலக்கணச் சுத்தமில்லாத என் காதல் கதை, தட்டெழுத்துப் பிரதிகளின் எட்டாவது கார்பன் காபி.” மேலே காணும் எடுத்துக்காட்டில், 'அந்தக் காதல் மங்கலானது; மற்றவருக்குப் புரியாதது' என்பதை விளக்குவதற்குக் கோவி.மணிசேகரன் கையாண்டிருக்கும் உருவகங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அறிஞர் அண்ணாவைத் தன்னுடைய தமிழுக்கு ஆசான் என்று அறிவித்திருக்கும் கோவி.மணிசேகரனின் உரைநடையில் அடுக்குமொழிகள் மிகுந்திருப்பதில் வியப்பில்லை. அண்ணாவின் உரைநடைச் சிறப்பிற்கு அடுக்கு மொழியே பெரும் பங்கு வகித்துள்ளது. “சிவராமனால் அடிபொறுக்க முடியாது; கதறிக் கதறிப் பதறுவான்; பதறிப் பதறிக் கதறுவான்.” என்றும் “இந்தத் தவிப்பெல்லாம் அந்தக் கிழவிக்கு-பாஞ்சாலிக்கு என்ன தெரியப் போகிறது? அவளுடைய தவிப்பே வேறு. அது உயிர்த்தவிப்பு; உணர்வுத் தவிப்பு; ஏன் ஒருவிதத்தில் மரணத் தவிப்பு என்றும் சொல்லலாம்.” என்றும் வருகின்ற அடுக்குமொழிகள் உணர்ச்சிப் பெருக்கை நம் உள்ளத்தில் பாய்ச்சுகின்றன அல்லவா?
பழமொழிகள் தமிழர்தம் வாழ்வின் பட்டறிவில் உருவான உணர்வுப் பிழிவுகள். அவை ஒரு பத்தியில் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டிய செய்திகளை ஒரே தொடரில் உணர்த்திக் காட்டும் வல்லமை படைத்தவை. இத்தகு பழமொழிகளைக் கையாளுவதில் கோவி.மணிசேகரன் ஆற்றல் மிக்கவர் என்பதற்குச் சான்றுகள் கணக்கில; அவற்றுள் ஒன்றை மட்டும் இங்குக் காண்போம். “கட்டியவனுக்கு ஒரு வீடு என்றால், கட்டாதவனுக்குப் பல வீடுகள் என்ற தத்துவத்தின் அடிப்படைதானே கடிவாளமில்லாத - பிரீலான்ஸ் - எழுத்தாளன் - கதை.” இந்தப் பத்தியில் அமைந்திருக்கும் கட்டியவனுக்கு ஒரு வீடு கட்டாதவனுக்குப் பல வீடு என்னும் பழமொழியைப் பத்திரிகை உலகிற்கு முற்றிலும் பொருந்துமாறு அமைத்துக் காட்டியிருக்கும் கோவி.மணிசேகரனின் உரைநடை உயர்ந்து நிற்கக் காண்கிறோம். |