2.2 முற்காலமும் இடைக்காலமும்

சங்கம் மருவிய காலம் வரையில் சிறப்பாக இருந்த நாடகக் கலை களப்பிரர் காலத்தில் வீழ்ச்சியுற்றது. சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழ்நாட்டில் நன்கு பரவிய காலம் களப்பிரர் காலம். நாடகம் கூத்து போன்ற கலைகளை இச்சமயங்கள் புறக்கணித்தன. இக்கலைகள் மனிதர்களின் கீழ்த்தரமான இச்சைகளைத் தூண்டுவன என்று சமணரும் பௌத்தரும் கூறினர்.

2.2.1 வளர்ச்சி நிலை
பல்லவர் காலத்தில் நாடகக் கலை மீண்டும் புத்துயிர் பெற்றது. பல்லவ வேந்தன் மகேந்திர வர்மன் ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகத்தை எழுதினார். கி.பி..ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும், நம்மாழ்வாரும் தம் பாடல்களில் நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். ஆனால் குறிப்பிட்டுக் கூறும்படியான நாடக வளர்ச்சியை அக்காலத்தில் காண முடியவில்லை.
 
  • சோழர் காலம்
  • கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டை அடுத்து, சோழர் ஆட்சிக் காலத்தில் நாடகம் நன்கு போற்றப்பட்டது. இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அவனது பிறந்த நாளன்று நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இராசராசேசுவரம், இராசராச விசயம் ஆகிய நாடகங்கள் இராஜராஜன் பிறந்தநாள் அன்று நடித்துக் காட்டப்பட்டன; இந்த நாடகங்களில் நடித்த கலைஞர்களுக்கு மானியங்கள் அறிவிக்கப்பட்டன. கி.பி.1119இல் கமலாலய பட்டர் என்பவர் பூம்புலியூர் நாடகம் என்ற நாடகம் ஒன்றை எழுதியுள்ளார்.
     

  • சிற்றிலக்கியக் காலம்
  • இதன் பின்னர், சிற்றிலக்கியக் காலங்களில் அதாவது 17, 18 ஆம் நூற்றாண்டுகளில்தான் நாடகம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. தமிழ் இலக்கண இலக்கியங்களில் பயிற்சியும், இசைப்பாட்டுப் பயிற்சியும் உடைய பல புலவர்கள் நாடகங்கள் எழுதினர்; சீர்காழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, அசோமுகி நாடகம் ஆகியவற்றை எழுதினார்; கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார்சரித்திரக் கீர்த்தனை எழுதினார்; திரிகூடராசப்பக் கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சியை எழுதினார்; என்னயினாப் புலவர் முக்கூடற்பள்ளு நாடகம் எழுதினார். மாரிமுத்துப் பிள்ளை நொண்டி நாடகம் எழுதினார். புலவர்கள் படித்தும், பாமர மக்கள் பார்த்தும் இன்புறும் அளவிற்கு இந்த நாடகங்கள் அமைந்திருந்தன. இசைப்பாட்டு வடிவத்தில் இந்த நாடகங்கள் அமைந்திருந்ததால் படிப்போரையும் பார்ப்போரையும் இந்த நாடகங்கள் வெகுவாகக் கவர்ந்தன.