3.3 நாடக வகைகளின் எடுத்துக்காட்டுகள்

முன்னர் விளக்கிக் காட்டப்பட்டுள்ள நாடக வகைகள் அனைத்துக்கும் எடுத்துக் காட்டுகளை அளித்தால் இக்கட்டுரை மிகவும் விரிந்து விடும். எனவே முக்கியமான சிலவற்றுக்கு மட்டும் எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

3.3.1 இன்பியல் நாடகம்

நாடகத்தின் முடிவு மகிழ்ச்சியாகவோ இன்பமாகவோ கொண்டு முடிவது இன்பியல் நாடகமாகும். பல சோதனைகளைக் கடந்து இறுதியில் மன்னன் மணிமுடி சூடுவதாகவோ, பல இன்னல்களைக் கடந்து காதலர்கள் தம் காதலில் வெற்றி பெறுவதாகவோ, மக்களுக்காகப் போராடும் தலைவன் தோல்விகளை மீறி இறுதியில் வெற்றி பெறுவதாகவோ காட்டுவது இன்பியல் நாடகமாகும்.

பொதுவாக இந்திய நாடகங்களுக்குத் துன்பியல் முடிவு இல்லை. துன்பமே முடிவாக அமையும் என்றால்கூட நாடக இறுதியில் தலைமைக் கதைமாந்தர்க்கு மோட்சம் தந்து இன்பியலாக்குவது இந்திய நாடக மரபு.

வாலி மோட்சம், கர்ண மோட்சம் போன்ற புராணப் பின்னணி நாடகங்கள் இன்பியலாகவே முடிவு பெறுகின்றன. தமிழ்ச் சூழ்நிலையில் உருவான நொண்டி நாடகம் இன்பியலாகவே முடிவுறுகிறது.

3.3.2 துன்பியல் நாடகம்

துன்பியல் நாடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாமல் இந்திய நாடக வரலாற்றில் கூடப் புதுமையான ஒன்றாகும். மேலைநாட்டு நாடகச் செல்வாக்கினால் தமிழில் முழுத் துன்பியல் நாடகம் உருவானது. அதுவரை தமிழில் இருந்த நாடக மரபும் துன்பியலுக்கேற்ப நெகிழ்வடைந்தது.

தமிழில் உருவான முதல் துன்பியல் நாடகமாக, கள்வர் தலைவன் என்னும் நாடகம் கருதப்படுகிறது. இதன் ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். நல்லவர் நலிவு, தீயவர் வெற்றி, இன்பத்தின் வீழ்ச்சி, துன்பத்தின் எழுச்சி, நன்மையின் தோல்வி, தீமையின் வெற்றி, இரக்கத்தின் இழிவு, அரக்க குணத்தின் மேன்மை என்னும் முரண்களின் முழு வெளிப்பாடாக இந்த நாடகம் அமைந்துள்ளது. நாடகத்தில் சாவுகளின் எண்ணிக்கையை மிகுதியாகக் கொண்ட இந்த நாடகம் 1894 ஆம் ஆண்டு எழுதி நடிக்கப்பட்டது.

பம்மல் சம்பந்த முதலியாரைப் பின்பற்றிப் பல நாடகாசிரியர்கள் துன்பியல் நாடகங்களை எழுதினர். ஆ.பழனி எழுதிய அனிச்ச அடி அருமையான துன்பியல் நாடகமாகும். அரங்கசாமி எழுதிய கனகை அவலம் பொதிந்த நாடகம். சூ.இன்னாசி எழுதிய தேசத் தியாகி நல்ல உள்ளம் கொண்டவரின் மரணத்தைச் சுட்டும் அவல நாடகம். ஏ.என். பெருமாள் எழுதிய பனிமொழி என்னும் கவிதை நாடகம் பெண்ணின் தியாகத்தைச் சுட்டும் அவல நாடகம்.

3.3.3 இசைப்பாட்டு நாடகங்கள்

தமிழில் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் உருவான நாடகங்கள் அனைத்தும் பாடல் நாடகங்களே ஆகும். பாடல் நாடகங்களை இசைப்பாட்டு நாடகங்கள் என்றும் கூறுவர். இவ்வகை நாடகங்களில் உரைநடைப் பேச்சு மிகமிகக் குறைந்து இருக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகம், மேடை அமைப்பு சார் கலையாக மாறத் தொடங்கிய போது, இசைப்பாட்டு நாடகம் குறையத் தொடங்கியது. காலப் போக்கில் நாட்டுப்புறச் சிற்றூர்களில் மட்டும் இத்தகைய நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன.

அரிச்சந்திரன் நாடகம், பிரகலாதன் நாடகம், திரௌபதி வஸ்திராபஹரணம் மற்றும் காசி விசுவநாத முதலியாரின் டம்பாச்சாரி விலாசம் ஆகிய நாடகங்கள் இசைப்பாட்டு நாடகங்களே ஆகும்.

3.3.4 இசைப்பாட்டு உரைநடை நாடகங்கள்

மொழியில் உரைநடைப் பயன்பாடு வளர வளர, நாடகத்திலும் அவை இடம்பெறத் தொடங்கின. காலப்போக்கில் இசைப் பாடல்களே மறைந்து போகும் அளவுக்கு உரைநடை முழுவதுமாக நாடகத்தில் இடம் பெற்றது. ஆனாலும் இசைப்பாடல் வழியாக நாடகத்தை நடித்துப் பழகிய கலைஞர்கள் எளிதில் இசைப்பாட்டை விட முடியாது தவித்தனர். எனவே இசைப்பாட்டு, உரைநடை என்ற இரண்டின் கலவையாக நாடகம் உருவாயின.

1877 ஆம் ஆண்டு தி. இராமசாமி ராஜூ என்பவர் எழுதிய பிரதாபச் சந்திர விலாசம் என்னும் நாடகம் உரைநடையும் பாடலும் கலந்து எழுதியதாகும். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், கோவலன் நாடகம், சதி அனுசூயா, பிரகலாதா ஆகிய நாடகங்களும் இவ்வாறு உருவானவையே ஆகும்.

3.3.5 உரைநடை நாடகங்கள்

கதை மாந்தர்களின் உரையாடல், எதிர் உரையாடல் ஆகியவற்றில் இசைப்பாடலே கலவாமல் முழுக்க முழுக்க உரைநடை மட்டுமே அமைந்த நாடகங்கள் உரைநடை நாடகங்கள் ஆகும். பம்மல் சம்பந்த முதலியார் 1891 ஆம் ஆண்டு எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகம் உரைநடை நாடகம் ஆகும். தமிழில் இப்போது ஆயிரக்கணக்கான உரைநடை நாடகங்கள் உள்ளன.

இசைப் பாட்டுக்களையே கேட்டு மகிழ்ந்த இரசிகர்களை மகிழ்விப்பதற்காகச் சில பாடல்கள் மட்டும் உரைநடை நாடகங்களில் சேர்க்கப்பட்டன.

3.3.6 கவிதை நாடகங்கள்

உரையாடல், எதிர் உரையாடல் என அனைத்தும் கவிதையிலேயே அமைந்து உருவான நாடகம் கவிதை நாடகமாகும்.

கவிதை நாடகம் யாப்பு நெறிகளுக்குக் கட்டுப்பட்டது; செய்யுள் வடிவில் அமைந்தது. கவிதை வகை நாடகங்களும் மேலை நாட்டு நாடக வகையைப் பின்பற்றி எழுந்தனவே ஆகும்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

தமிழில் எழுந்த முதல் கவிதை நாடகம் மனோன்மணீயமாகும். இதை எழுதியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். 1891 ஆம் ஆண்டு இந்த நாடகம் எழுதப்பட்டது. சுந்தரம் பிள்ளையைத் தொடர்ந்து பலர் கவிதை நாடகங்களை எழுதினர். மறைந்த மாநகர், புகழேந்தி, புலவர் உள்ளம், அன்னி மிஞிலி எனப் பல கவிதை நாடகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன.

தமிழ் இலக்கியச் செய்திகளும், தமிழக வரலாற்றுச் செய்திகளும் கவிதை நாடக ஆசிரியர்களுக்குக் கருப்பொருள் ஆகின.

கனகை, புகழேந்தி, அனிச்ச அடி, ஆபுத்திரன், வேங்கையின் வேந்தன், நெடுமான் அஞ்சி, இரவிவர்மன், இராஜாதேசிங்கு, சாகுந்தலை, தமயந்தி போன்ற கவிதை நாடகங்கள் இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பின்புலங்களிலிருந்து உருவானவையாகும்.

உரைநடைக் கலப்பு

இசைப்பாட்டு நாடகத்தில் சிற்சில இடங்களில் உரைநடை கலப்பதைப் போல் கவிதை நாடகத்தில் உரைநடை கலப்பதும் உண்டு. இந்த உரைநடை கதைமாந்தர் தன்மைக்கேற்பவும் நாடகாசிரியரின் தேவைக்கேற்பவும் இடம் பெறும். பேராசிரியர் க. பெருமாள் எழுதிய மாபெரும் அறம், பெரிய வெற்றி ஆகிய கவிதை நாடகங்களில் உரைநடை சிறிதளவு கலந்துள்ளது. வேறு சிலரின் நாடகங்களிலும் உரைநடைக் கலப்பு உண்டு.