5.1 சங்கரதாஸ் சுவாமிகள்

சங்கரதாஸ் சுவாமிகள்

சங்கரதாஸ் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி என்ற சிற்றூரில் 7.9.1867ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் தாமோதரன், தாயார் பேச்சியம்மாள் ஆவர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே தம் வாழ்நாளை வாழ்ந்து முடித்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதனாலேயே இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவையாகத் திகழ்ந்தன.

சிறுவயதில் தம் தந்தையாரிடமும், பின்னர்ப் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தம் 24ஆம் வயதில் முழுநேர நாடகக் கலைஞர் ஆனார். அப்போது நாடகத்துக்கு இசையும் பாட்டும் இன்றிமையாதவைகளாக இருந்த காரணத்தால் சங்கரதாஸ் சுவாமிகள் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியப் பயிற்சி, இசைப் பயிற்சி ஆகிய தகுதிகளுடன்தான் சங்கரதாஸ் சுவாமிகள் முழுநேர நாடக் கலைஞர் ஆனார்.

 • மறைவு
 • இவ்வாறு தமிழ் நாடக உலகில் பெரும் தொண்டாற்றித் தமிழ்நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்தித் தந்த சங்கரதாஸ் சுவாமிகள் தம் 55ஆம் வயதில் காலமானார். 13.11.1922ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் மரணம் அடைந்தார். தூத்துக்குடிக்கு அருகில் காட்டு நாயக்கன் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்து தமிழகம் எங்கும் கலைச் சேவை புரிந்து புதுவை (பாண்டிச்சேரிக்குப் புதுவை, புதுச்சேரி என்ற பெயர்கள் உண்டு) மண்ணில் அடங்கிய சுவாமிகளின் புகழ்மிக்க வரலாறு தமிழ்நாடக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒன்று.

  5.1.1 நாடக நடிகரும் நாடக ஆசிரியரும்

  சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராகவே தம் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இரணியன், இராவணன், எமதருமன், சனீஸ்வரன், கடோற்கஜன் போன்ற வேடங்களையே ஏற்று நடித்து வந்தார். சிறிது காலத்துக்குப் பின்னர், நாயுடு நாடகக் குழுவில் நாடக ஆசிரியராகப் பணியாற்றினார். சிறிது காலத்துக்குப் பிறகு அவரே நாடகம் எழுதி, இயக்கி, அரங்கேற்றி நாடகத்துக்குப் பெருமை சேர்த்தார்.

  சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்றாக அவர் வாழ்க்கையில் அமைந்தது. இவர் சனீஸ்வரன் நாடகத்தில் சனிபகவான் வேடம் தாங்கி நடித்தார். விடியும் வரை நாடகத்தில் நடித்துவிட்டு விடியற்காலையில் வேடத்தைக் கலைப்பதற்காக ஏரிக்குச் சென்றார். அங்கே சலவை செய்து கொண்டு இருந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி சனீஸ்வரன் வேடத்தில் இருந்த சுவாமிகளைக் கண்டாள்; அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். இந்த நிகழ்ச்சி சுவாமிகளின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. இதன் பின்னர் சுவாமிகள் வேடம் தரிப்பதை நிறுத்தி விட்டார்.
   

  5.1.2 இயற்றிய நாடகங்கள்

  சுவாமிகள் மொத்தம் 50 நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் சிம்பலைன், ரோமியோ ஜூலியட், ஜூலியஸ்சீசர் ஆகியன ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள் ஆகும்.

  சுவாமிகள் எழுதிய, இயக்கிய அனைத்து நாடகங்களுமே சிறப்புடையனவாகும். எனினும் பின்வரும் நாடகங்களை மிகவும் சிறப்புடையனவாகச் சுட்டிக் காட்டலாம்.

  1. சத்தியவான் சாவித்திரி
  2. பவளக்கொடி சரித்திரம்
  3. வள்ளி திருமணம்
  4. அரிச்சந்திர மயான காண்டம்
  5. கோவலன் சரித்திரம்
  6. இராம ராவண யுத்தம்
  7. வீரபாண்டிய கட்டபொம்மன்
  8. மதுரை வீரன்
  9. சித்திராங்கி விலாசம்
  10. நளதமயந்தி

  ஆகிய நாடகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

  சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் ஆயிரக்கணக்கில் அரங்கில் நடிக்கப் பெற்றவை ஆகும். சுவாமிகள் இயற்றிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் ஆகும்.

  தமிழ் நாடகக்கலையைப் பொறுத்தவரையில் சுவாமிகள் காலத்துக்கு முன், சுவாமிகளின் காலத்துக்குப் பின் என்று பகுத்துப் பார்க்கும் அளவிற்குச் சுவாமிகளின் நாடகக்கலைத் தொண்டு அமைந்துள்ளது.

  கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டிருந்த நாடகக் கலையை உயர்த்திப் பிடித்தது மட்டும் அல்லாமல் தம் காலத்துக்குப் பின்னரும் உயர வேண்டிய நாடகக் கலையைத் தம் நாடகங்கள் மூலம் நிலை நிறுத்தினர். உண்மையில் சுவாமிகளின் நாடகங்கள் தாம் அவர் காலத்துக்குப் பின்னரும் நாடகக் கலைக்கு உயிரூட்டி வந்தன.

  சென்னையில் ஒருமுறை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு விழா நடந்தது. அவ்விழாவில் பேசிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சுவாமிகளை நாடக உலகின் இமயமலை என்று குறிப்பிட்டார். அந்த அளவிற்குச் சுவாமிகளின் நாடகத் தொண்டு அமைந்திருந்தது.
   

  5.1.3 சுவாமிகளின் மாணவர்கள்
  தலைசிறந்த மொழி அறிவும் நாடக உருவாக்கப் புதுமையும் சுவாமிகளிடம் மிகவும் கூடுதலாக இருந்ததால் நாடகத்துக்குப் புதுமெருகு ஏற்றினார். அதனால் இவரிடம் பெரிய மாணவர் கூட்டம் இருந்தது. வண்டுகள் மலரை மொய்ப்பது போல் மாணவர்கள் சுவாமிகளைச் சூழ்ந்து கொண்டே இருந்தனர்.

  ஜி.எஸ்.முனுசாமி நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், எம்.ஆர்.கோவிந்தசாமிப் பிள்ளை, சி.கன்னையா, சி.எஸ்.சாமண்ணா, சுந்தரராவ், சூரிய நாராயண பாகவதர், மதுரை மாரியப்ப சுவாமிகள், எஸ்.ஜி.கிட்டப்பா, ஆர்.வி.மாணிக்கம், தி.க.சண்முகம் சகோதரர்கள் ஆகியோர் ஆண் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

  திருமதி பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, கோரங்கி மாணிக்கம், டி.டி.தாயம்மாள் போன்றோர் மாணவிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

  திரைப்படங்களில் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய கே.சாரங்கபாணி, ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் சுவாமிகளின் மாணவர்களே ஆவர்.