1.5 சமய நாடகங்கள்

தமிழ்நாட்டில் இந்து, கிறித்துவம், இஸ்லாம் முதலான சமயங்கள் செல்வாக்குடையவை. இந்து சமயத்தில் சைவம் வைணவம் முதலான பிரிவுகளும் உள்ளன. இச்சமயங்கள் சார்ந்த புராணக் கதைகள் ஏராளமாக உள்ளன. மக்களிடையே பரவியுள்ள இக்கதைகளைப் பல விதங்களில் படைப்பாளர்கள் நாடகங்களாக ஆக்கினார்கள். முனிவர்களின் தவ வலிமை, பெண்களின் தெய்வீக ஆற்றல், மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களின் செயல்பாடுகள் எனப் பல வகையாகப் படைத்திருக்கிறார்கள். பாத்திரங்களின் பண்புகளும் மக்களுக்குப் பல செய்திகளை உணர்த்தும் வண்ணம் நாடகங்களைப் படைத்திருக்கிறார்கள். சிறந்த பல கருத்துகளைப் படைத்து மக்களைச் செம்மைப்படுத்தும் நோக்கிலும் படைத்திருக்கிறார்கள்.

1.5.1 இந்து சமய நாடகங்கள்

இந்து சமயம் நீண்ட காலமாய் நிலைத்திருப்பது. பெரும்பாலான மக்கள் இச்சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இச்சமயத்தில் இறைக் கதைகள் ஏராளமாக உள்ளன. இந்து சமய நாடகங்களில் இதிகாசக் கதைகளும் புராணக் கதைகளும் தத்துவ விளக்கக் கதைகளும் இடம் பெறுகின்றன. சமயவாதிகளின் வரலாறும் நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறும் தெய்வ வணக்கக் கதைகளும் சமயக் கொள்கைகளின் விளக்கங்களும் நாடகங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

புராணக் கதை நாடகங்கள்

தமிழில் பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலானவை சமயக் கருத்துகளையும் சமயப் பெரியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கொண்டு எழுதப்பட்டவை. இவற்றில் சைவ சமயம் சார்ந்தவை, வைணவ சமயம் சார்ந்தவை என்ற பாகுபாடுகள் உள்ளன.

சைவ நாடகங்கள்

சமயக் குரவர்களின் வரலாறுகள் நாடகமாக்கப்பட்டுள்ளன. செ.மு.வேலு முதலியார், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாடகம் என்று நாடகம் படைத்துள்ளார். தஞ்சை. வீ. ஆறுமுகம் சேர்வையும் வே. இராமசாமி வன்னியரும் சேர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாடகத்தைப் படைத்துள்ளனர். எஸ்.கே.பார்த்தசாரதி ஐயங்கார், திருஞான சம்பந்தர் சரித்திர நாடகம் எனப் படைத்துள்ளார். எஸ். குற்றாலம், திருநாவுக்கரசர் நாடகத்தை எழுதியுள்ளார். தெள்ளூர் மு.தருமராசனும் திருநாவுக்கரசர் வரலாறு என்ற நாடகத்தை எழுதியுள்ளார். எஸ். சங்கர குற்றாலமும் திருநாவுக்கரசர் நாடகத்தை எழுதியுள்ளார். தெள்ளூர் மு.தர்மராசன் அனைத்துத் தலைவர்களின் வாழ்வையும் விளக்கும் வகையில் தேவாரம் என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

நாயன்மார்களின் வரலாற்றையும் நாடகங்களாகப் படைத்துள்ளனர். அடையாறு கலாட்சேத்திராவின் படைப்பான காரைக்கால் அம்மையார், மு.வரதராசனார் அவர்களின் படைப்பான திலகவதி முதலானவை பெண் பெரியார்களின் வரலாற்றை உணர்த்துவன. இந்திரா பார்த்தசாரதி, நந்தன்கதை என்ற நாடகத்தைப் புராணப் புதுக்கலாக எழுதியுள்ளார். பார்ப்பனர் சூழ்ச்சியில் நந்தன் எரிக்கப்பட்டதாக எழுதியுள்ளார்.

சைவக் கடவுளர் பற்றிய நாடகங்களும் படைக்கப்பட்டன. வேங்கடசாமி தீட்சிதர் படைத்த பார்வதி பரிணயம், பார்வதி திருமண நிகழ்வின் பின்னணியைப் புலப்படுத்துகிறது. சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார் முதலானவர்கள் முருகக் கடவுள் வள்ளியை, வேடன் விருத்தன் முதலான கோலங்களில் வந்து மணந்து கொள்ளும் நிகழ்வை நாடகங்களாக்கினர். வெங்கடேச எட்டப்ப மகாராஜாவும் வள்ளி நாடகம் எழுதியுள்ளார். ராம் ஐயர், வள்ளி பரிணயம் என்று படைத்துள்ளார். சூரசம்காரம் நாடகம் முருகக் கடவுள் தேவர்களைக் காக்கச் சூரனை வதைத்த நிகழ்வைப் புலப்படுத்தியது.

திருவிளையாடற் புராணத்திலுள்ள செய்திகளும் நாடகமாக்கப்பட்டுள்ளன. கோவிந்தசாமி நாட்டார், நக்கீரர் நாடகம் எழுதியுள்ளார்.

வைணவ நாடகங்கள்

பன்னிரு ஆழ்வார்களின் கதைகள், திருமாலின் பெருமை முதலானவை வைணவ நாடகங்களாக ஆக்கப்பட்டுள்ளன. எஸ்.கே. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய தொண்டரடிப் பொடியாழ்வார் நாடகம் மகாலட்சுமி தத்துவத்தையும், நாராயணனிடம் மக்களுக்கு இருக்க வேண்டிய பக்தியையும், திருமாலின் பெருமையையும், திருமால், பக்தர்களுக்கு அருளுகின்ற தன்மையையும் உணர்த்துகிறது.

திருமலை நல்லான் எழுதிய மார்கழி நோன்பு அல்லது ஸ்ரீ ஆண்டாள் திருமணம், ஆண்டாளின் வரலாற்றை உணர்த்தியது. வைணவத் தத்துவமும் திருமாலின் பெருமையும் பக்தியால் ஆண்டாள் திருமாலுடன் சேர்வதும் காட்டப்படுகிறது. பரமாத்மாவை ஜீவாத்மாவை அடைவதை இந்நாடகம் விளக்குகிறது.

சமயத் தலைவர் பற்றிய நாடகங்கள்

வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகளின் வரலாற்றை நாரண துரைக்கண்ணன் திருவருள் பிரகாச வள்ளலார் என்று நாடகமாக எழுதியுள்ளார். சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கையை அவர் பரப்பிய செய்தி புலப்படுத்தப்படுகிறது. விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பரப்பிய இராமாநுசரின் வரலாற்றை ஸ்ரீராமாநுசர் என்ற பெயரில் சி.எம்.வெங்கட்ராமன் நாடகமாகப் படைத்துள்ளார்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய நாடகங்கள்

தமிழ்நாட்டில் நாட்டுப்புறத் தெய்வ வணக்கம் நிலவுகிறது. வீரவாழ்வு வாழ்ந்தவர்களுக்குக் கோயில் எடுத்துத் தெய்வமாகக் கருதி விழா எடுப்பது தமிழ்நாட்டு வழக்கம். விழாக்களின் போது அந்த வீரர்களின் வரலாறுகளை மக்களிடம் நாடகமாக நடத்திக் காட்டுவர். மதுரை வீரன். காத்தவராயன் முதலானோர் கதைகள் நாடகமாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

1.5.2 கிறித்தவ நாடகங்கள்

கிறித்தவர்களின் விவிலிய விளக்கக் கதைகள், இயேசுநாதர் வரலாறு முதலானவை கிறித்துவ சமய நாடகங்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் பல கிறித்தவ நாடகங்கள் இசை நாடகங்களாக எழுதப்பட்டுள்ளன. ஆதாம் ஏவாள் விலாசம், பூதத்தம்பி விலாசம், நல்ல சமார்த்தன், ஞான சௌந்தரி அம்மாள் விலாசம், எஸ்காத்தியர் நாடகம் முதலான நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் ஞானசௌந்தரி நாடகத்தையும், நவாப் ராஜமாணிக்கம் ஏசுநாதர் நாடகத்தையும் சிறப்பாக நடத்தி, மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படு்த்தினார்கள். எஸ்.பொன்ரத்தினம் இதோ நமக்கு ஒருவர் என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

1.5.3 இசுலாமிய நாடகங்கள்

இசுலாமிய நாடகங்களும் இசை நாடகங்களாக இருந்தன. அலிபாதுஷா நாடகம், தையார் சுல்தான் நாடகம், அப்பாஸ் நாடகம், லால் கௌஹர் நாடகம் முதலானவை இவ்வாறு எழுதப்பட்டவை. அகமது பஷீர், சே.மு.மு.முகமதலி, சாயபு மரைக்காயர் முதலானோர் இசுலாமிய நாடகங்களைப் படைத்துள்ளனர்.