4.6 சமூக விழிப்புணர்வு நாடகங்கள் |
மன்றம், அகாதமி, சபா, கிளப் முதலான பல பெயர்களில் நாடக சபாக்கள் தோன்றின. நாடகங்களைப் பொழுதுபோக்காகக் கருதி இவை மேடையேற்றின. இதனால் நாடகக் குழுக்கள் புதிதாகத் தோன்றின. சபாக்களின் காரணமாக நுகர்வோரைத் தேட வேண்டிய தேவை குறைந்தது. ஒரு சில நாடகக் குழுக்கள் தவிரப் பிற குழுக்கள் சமூக நாடகங்களையே நடத்தின. அவற்றில் பல நகைச்சுவை நாடகங்களாகவும் இருந்தன. மேடைக்கு என்றில்லாமல் படிப்பதற்காகவும் நாடகங்கள் பல எழுதப்பட்டன. |
சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்தியதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களுள் டி.கே.எஸ்.சகோதரர்களும் சேவாஸ்டேஜ் குழுவினர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். |
|
டி.கே.எஸ் சகோதரர்கள் தாங்கள் நடத்தும் நாடகங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார்கள். வரதட்சணைக் கொடுமையைக் கண்டிக்கும் இராஜேந்திரன், மடாதிபதிகளின் திரைமறைவுத் தீய வாழ்வை அம்பலப்படுத்தும் சந்திரகாந்தா, விதவை மறுமணத்தை ஆதரிக்கும் குமாஸ்தாவின் பெண், ஜம்புலிங்கம், குடிபோதையின் கொடுமையைச் சாடும் பதிபக்தி, மனச்சாட்சி தண்டிக்கும் என்பதை உணர்த்தும் மனிதன், பொருந்தா மணம் கூடாது என்னும் உயிரோவியம், குடும்பச் சிக்கலைத் தீர்க்க வழிசொல்லும் அந்தமான் கைதி முதலான நாடகங்களை நடத்தினார்கள். முள்ளில் ரோஜா, கள்வனின் காதலி, ரத்தபாசம், மனைவி, வாழ்வில் இன்பம், எது வாழ்வு?, அப்பாவின் ஆசை முதலான பல நாடகங்களின் மூலமாகவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். |
|
பொது வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் உடைய மனிதர்கள் அரிதாகி விட்டார்கள். இலட்சியமான மனிதர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எஸ்.வி.சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். வடிவேலு வாத்தியார், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் முதலான நாடகங்களின் மூலமாகச் சமூகம் உருப்படும் வகையில் இலட்சிய மனிதர்களைப் படைத்துக் காட்டினார். |
|
ஆர்.எஸ்.மனோகர், ஹெரான் ராமசாமி முதலான சிலரைத் தவிரப் பிறர் சமூக நாடகங்களை ஏராளமாக நடத்தினார்கள். சோ, பாலசந்தர் முதலானோர் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடை கூறுவது போல நாடகங்களை அமைத்தார்கள். காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் முதலானோர் நகைச்சுவையாக மட்டுமே நாடகங்களை அமைத்தார்கள். பல்வேறு குழுவினர் நடத்திய நாடகங்களையும் எழுதிய நாடகங்களையும் உள்ளடக்கம் கொண்டு பகுக்க முடியும். குடும்பம், அலுவலகம், அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சமுதாயச் சீர்திருத்தம் என இந்நாடகங்களின் உள்ளடக்கங்கள் அமைந்தன. |
பெரும்பாலும் நாடகம் நடுத்தர மக்களின் சாதனமாகவே இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் உகந்ததாக நாடகம் இருக்கிறது. நடுத்தர மக்களுக்குக் குடும்பம்தான் ஆதாரம். குடும்பச் சிக்கல்களையும் கணவன் மனைவி உறவையும் காதலர்களையும் மையமாக வைத்து நாடகங்கள் உருவாயின. உறவினர்களிடையேயான சிக்கல்கள் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் சிக்கல் போலத் தோன்றினாலும் பல குடும்பங்களின் நடைமுறை வாழ்விற்கு ஒத்திருப்பனவாக இருக்கின்றன. |
ஆண்டி எழுதிய மாங்கல்யம் நாடகம் மணவாழ்வின் மாண்பை உணர்த்துகிறது. கே.அரங்கராஜனின் குடும்பக் கட்டுப்பாடு குடும்பத்தின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைக் கூறுகிறது. தாமரைக் கண்ணனின் குடும்பம், ஆண்களின் நயவஞ்சகப் பண்பைக் காட்டுகிறது. நெல்லை நம்பியின் மலர் சிரித்தது பெண்கள் படும் பாட்டை உணர்த்துகிறது. மெரீனாவின் அடாவடி அம்மாக்கண்ணு ஆண்களை அதிர வைக்கும் பெண்ணைப் புலப்படுத்துகிறது. |
தற்கால வாழ்க்கையில் குடும்பத்தின் கௌரவத்திற்காக ஏழைகள் தங்கள் சக்திக்கு மீறிச் செலவுகள் செய்யும் போலித் தனத்தை அம்பலப்படுத்தும் நாடகங்களும் உள. நாடோடி எழுதிய குடும்ப ரகசியம் நாடகத்தில் இத்தகைய போலித்தனங்கள் நகைச்சுவையாக அம்பலப்படுத்தப் படுகின்றன. ஆர்.வி.எழுதிய போலி நாடகம் ஓர் இடத்தில் பல மாடிக் கட்டிடங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு நாளைய நிகழ்வுகளைக் காட்டுகிறது. இம்மக்களும் இவர்களின் வாழ்வு மதிப்புகளும் போலியாக இருப்பதை நாடகம் உணர்த்துகிறது. ரேணுகா தேவியின் ஆசைகள் பலவிதம் மெரீனாவின் ஸ்கைலாப் சம்பந்தி முதலான நாடகங்களும் இத்தகையனவே. |
பெண்கள் நிலை குறித்தும் நாடகங்கள் விளக்கியுள்ளன. வரதட்சணைக் கொடுமை பற்றிச் சில நாடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஏமாந்தவர் யார்?, பெண்சாதி, வளமான வாழ்வு முதலான நாடகங்கள் இதை உணர்த்துகின்றன. விலைமகளிரின் அவல வாழ்வைச் சில நாடகங்கள் சித்திரிக்கின்றன. சோவின் யாருக்கும் வெட்கமில்லை இத்தகையது. |
|
அலுவலக நடைமுறைகள், அவற்றால் ஏற்படும் சிக்கல்கள், அலுவலகச் சீர்கேடு முதலானவையும் நாடகங்களில் கூறப்பட்டுள்ளன. கல்கியின் பாங்கர் கிருஷ்ணாராவ் வங்கித் தொழில் பற்றிக் கூறுகிறது. ஆறு அழகப்பனின் முத்துச்சிப்பி நாடகமும் எஸ்.பொன்னுரத்தினத்தின் தாசில்தார் நாடகமும் அலுவலக நடைமுறைகளை மையப்படுத்தியவை. நாகர்கோயில் கிருஷ்ணன் எழுதிய சிதம்பர ரகசியம் நாடகம் மருத்துவத்துறைச் சீர்கேடுகளைக் கூறுகிறது. பொன்.பரமகுருவின் வினை விதைத்தவர்கள் காவற்பணி அனுபவங்களைக் கூறுகிறது. |
|
அரசியல் நடைமுறைகளைக் காட்டுகிற நாடகங்கள் உள்ளன. எம்.ஏ.அப்பாஸின் கள்ளத்தோணி இலங்கைத் தமிழர் படும்பாட்டை உணர்த்துகிறது. நான் ஜனநாயகனானால் நாடகம் அரசியல் தூய்மையை விளக்குகிறது. பறம்பைச் செல்வனின் புல்லுருவிகள் அரசியல் போக்கைக் காட்டுகிறது. கே.மருதநாயகத்தின் மாண்புமிகு முருகன், தமிழ்நாட்டு அரசியல், தி.மு.க, அ.தி.மு.க பிளவு பற்றிக் கூறுகிறது. நம்நாட்டின் அரசியல் அவலத்தைக் கோமல் சுவாமிநாதனின் கறுப்பு வியாழக்கிழமை உணர்த்துகிறது. |
|
சமுதாய நடைமுறையைக் கூறும் நாடகங்களும் உள்ளன. மு.வரதராசனாரின் ஏமாற்றம், காதல் எங்கே? முதலானவை சமுதாயப் பிரச்சனைகளைக் கூறுகிற நாடகங்கள். வ.சுப.மாணிக்கத்தின் உப்பங்கழி, கோ.விஜயராகவனின் நெருஞ்சிப்பூ முதலாயின சமூகச் சீர்திருத்தத் தேவையை உணர்த்துவன. ஏ.நடராஜனின் ஆதார சுருதி சமுதாய நடைமுறைகளைக் காட்டுகிறது. |
|
பொதுவாகத் தமிழினத்தின் பண்பாட்டையும் குறிப்பிட்ட சில சாதியினரின் பண்பாட்டையும் விளக்கும் நாடகங்களும் உள. ம.பொன்னுசாமி பிள்ளையின் விஜய சுந்தரம் பொதுவாகத் தமிழர் பண்பாட்டைப் புலப்படுத்துகிறது. சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண் தேவர் சாதி மக்களின் குடும்பச் சிக்கல்களை உணர்த்துகிறது. ஆறு.அழகப்பனின் கறிவேப்பிலை செட்டிநாட்டு வாழ்வைக் காட்டுகிறது. |
|
சமுதாயச் சீர்திருத்தத்திற்கு உதவும் வகையில் நாடகங்கள் நடத்தப்பட்டன. சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மக்களுக்கு உண்மையை உணர்த்தின. தீயதை விட்டு நல்லதைப் பேண வழி காட்டின. சாதி பொருளற்றது என்றும் கலப்பு மணம் சிறந்தது என்றும் பொருளியல் மேம்பாடு குறித்தும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட வேண்டியது பற்றியும் நாடகங்கள் எழுதப்பட்டன. கிராமப்புறப் பிரச்சினைகள் குறித்தும் சமூகத்திற்குத் தேவையான அறிவுரைகள் குறித்தும் நாடகங்கள் எழுதப்பட்டன. |
|
அ.மு.பரமசிவானந்தம் எழுதிய சாதிவெறி என்ற நாடகம் சாதிவேறுபாட்டை எதிர்த்தது. இதே போன்றதுதான் எம்.எஸ்.அருள்சாமி எழுதிய சேரிப்பெண் நாடகம். தா.ஏ.ஞானமூர்த்தியின் பெண்மலர் நாடகமும், செ.உலகநாதனின் யாருக்கு யார் சொந்தம் நாடகமும், சே.மு.மு.முகமதலியின் இங்கே சாதி சாகுது நாடகமும் சாதி எதிர்ப்பை உணர்த்தின. நாரண துரைக்கண்ணனின் தீண்டாதார் யார்? நாடகமும் கலப்பு மணத்தை ஆதரிப்பதாக அமைந்தது. |
|
பொருளியல் மேம்பாட்டை வலியுறுத்துவன சில நாடகங்கள். எல்லார்வியின் பூங்குளம் பண்ணையார் உழைப்பவர் நிலை உயர்தலைக் கூறுகிறது. ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் பணம் பணம் பணம் நாடகம் பொருளாதாரச் சிக்கலைப் பேசுகிறது. வளவனூர் சித்தி வினாயகரின் பொதுவுடைமைப் பொன்னாடு அரசியல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது. மீனராஜனின் தர்மகர்த்தா பொதுவுடைமைக் கருத்தை வலியுறுத்துகிறது. ஏ.என்.பெருமாளின் பனிமொழி முதலாளி தொழிலாளி பிரச்சினையைப் பேசுகிறது. ஆலந்தூர் மோகனரங்கனின் சேமிப்பு, வாழ்க்கையில் தித்திப்பு என்ற நாடகங்கள் சேமிப்பின் தேவையை உணர்த்துகின்றன. |
|
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் நாடகங்கள் உள்ளன. ஜெயந்தனின் இயக்கவிதி குறிப்பிடத் தக்க நாடகம். பி.பி.செல்லப்பாவின் வேலை காலியிருக்கு நாடகம் வேலை வாங்கப் படும் பாட்டை உணர்த்துகிறது. சுஜாதாவின் வந்தவன் நாடகம் வேலையின்றி இருப்போர் சூழ்நிலை காரணமாகத் தவறு செய்து விடுவர் என்று கூறுகிறது. கரு.நாகராஜனின் சும்மாதானே இருக்கீங்க சுயமுயற்சியை வலியுறுத்துகிறது. |
|
கிராமப்புறப் பிரச்சினைகளை மையப்படுத்தியும் நாடகங்கள் எழுதப்பட்டன. கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைப் பேசுகிறது. எம்.எஸ்.பெருமாளின் அம்மன் தாலி கிராமங்களின் பின்தங்கிய நிலையை உணர்த்துகிறது. |
|
மக்களுக்குக் கடமை, ஒழுக்கம், போலித்தமின்றி வாழ்தல், தூய அன்பு கொள்ளல், மனச்சாட்சியை மதித்தல், அஞ்சாதிருத்தல், பொறுப்புணர்வுடன் இருத்தல், ஆன்மிக உணர்வு கொள்ளல் முதலான பண்புகள் குறித்து விளக்கும் நாடகங்கள் உள்ளன. |
மு.வ.வின் கடமை எங்கே? கடமை தவறாமையை வலியுறுத்துகிறது. சுத்தானந்த பாரதியின் ஆனந்தம் ஒழுக்கமாக வாழவேண்டும் என்கிறது. நாடோடியின் வாழ்க்கைச் சக்கரம் போலித்தனமின்றி இருக்க வலியுறுத்துகிறது. ஆர்.சூடாமணியின் அன்பின் அற்புதம் தூய அன்பின் இயல்பை விளக்குகிறது. மு.வ.வின் மனச்சான்று மனிதன் தன் மனச்சாட்சியை மீறக்கூடாது என்று உணர்த்துகிறது. சி.இராமசாமியின் இருளின் ஒளி வாழ்க்கையில் துன்பத்தைக் கண்டு அஞ்சக்கூடாது என அறிவுறுத்துகிறது. அகிலனின் வாழ்வில் இன்பம், வாழ்வில் பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதன் தேவையைப் புலப்படுத்துகிறது. சுத்தானந்த பாரதியின் காலத்தேர் ஆன்மிக உணர்வு நல்லது எனக் காட்டுகிறது. |