|
5.4 நாடக வகைகள் |
|
வானொலியில் கால்மணி நாடகம், அரைமணி நாடகம், ஒருமணி நாடகம், சில நாட்களுக்கு ஒலிபரப்பாகும் தொடர் நாடகம் என்று பகுத்து ஒலிபரப்புகின்றனர். இவை இசை நாடகங்களாகவும், கவிதை நாடகங்களாகவும், தழுவல் நாடகங்களாகவும், மொழிபெயர்ப்பு நாடகங்களாகவும், தமிழிலேயே எழுதப்படும் உரைநடை நாடகங்களாகவும் இருக்கின்றன. நாடகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நேரம் தவிரப் பிற நிகழ்ச்சிகளிலும் அவை தொடர்பான நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அந்நிகழ்ச்சிகள் குழந்தைகள், கிராம மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்காக உருவாக்கப்படுகின்றன. |
|
|
|
கால்மணி நேர நாடகங்கள் சிறுகதைகள் போன்றவை. இவற்றில் சின்ன நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. நான்கு அல்லது ஐந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. பாத்திர எண்ணிக்கை குறைவாக இருக்கும். வருணனைகள் இருக்காது. உரையாடல் சுருக்கமாக இருக்கும். முன் கதை சொல்லும் பின்நோக்கு உத்தி இவற்றில் இருக்காது. |
|
அரை மணி நேர நாடகங்கள் குறுநாவல்கள் போன்றவை. இவற்றில் காட்சிகள் மிகுதிப்படுத்தப் படுகின்றன. ஆறு அல்லது ஏழு காட்சிகள் இடம்பெறுகின்றன. பாத்திர எண்ணிக்கை, உரையாடல் ஆகியவற்றின் தன்மைகள் கால்மணி நேர நாடகத்தில் போலவே இருக்கின்றன. ஓரளவு பின்நோக்கு உத்தி பயன்படுத்தப்படும். |
|
ஒரு மணி நேர நாடகங்கள் நாவல்கள் போன்றவை. இவற்றில் பாத்திர மிகுதிக்கும் காட்சி மிகுதிக்கும் இடம் தருகிறார்கள். உரையாடல்கள் ஓரளவு நீண்டவையாக அமைகின்றன. |
|
தொடர் நாடகங்கள் என்பவை இதழ்களில் வெளிவரும் தொடர்கதைகள் போன்றவை. நேயரைத் தொடர்ந்து ஈர்த்து வைப்பவை. ஒவ்வொரு தொடரிலும் அடுத்த தொடரைப் பார்க்க வைக்கும் வகையில் நேயரின் ஆர்வம் தூண்டப்படுகிறது. தொடர் நாடகங்கள் பற்றித் தனியாகப் பின்னால் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற செய்திகள் ஏனைய நாடகங்கள் குறித்தவை. |
|
கவிதை நாடகங்களைப் பொறுத்த அளவில் அவை ஒரு மணி நாடகங்களாக ஒலிபரப்பப் படுவதில்லை. அவ்வாறு செய்யின் வெற்றி கிடைப்பது இல்லை. ஆகவே கால்மணி அல்லது அரைமணி நாடகங்களாக அமைக்கப்படுகின்றன. பாரதியாரின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் குடும்ப விளக்கு போன்ற புதுமைப் படைப்புகள் ஒலி பரப்பாயின. தஞ்சை வாணன் எழுதிய களம் கண்ட கவிஞன் நாடகம் ஒலிபரப்பாயிற்று. அதில் சிவாஜி கணேசன் குரல் கொடுத்திருந்தார். கவிஞர் கருணானந்தம் படைத்த நறுமணம் என்னும் கவிதை நாடகமும் ஒலிபரப்பப்பட்டு வெற்றி பெற்றது. விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கருத்தை அது வலியுறுத்தியது. இவை போன்ற நாடகங்கள் பல ஒலிபரப்பாகின்றன. |
|
நந்தனார் சரித்திரம், இராம நாடகம், குற்றாலக் குறவஞ்சி போன்ற இசை சார்ந்த கதைகளை நாடகமாக்கி வெளியிட்டனர். இசைக் கலைஞர்களைக் கொண்டு இவை நிகழ்த்தப்பட்டன. கவிதை நாடகங்கள் போன்றே இவையும் கால்மணி அல்லது அரைமணி நாடகங்களாக நடத்தப்படுகின்றன. |
|
வானொலியில் பெரும்பான்மையாக ஒலிபரப்பாவன உரைநடை நாடகங்கள்தாம். இவை வரலாற்று நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், புராண நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள், குடும்ப நாடகங்கள் என ஒலிபரப்பாகின்றன. சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். |
|
|
|
வானொலிக்கென்றே எழுதப்பட்டும், வரலாற்று நாவல்களை நாடகமாக்கியும் இவை ஒலிபரப்பாகின்றன. பி.எஸ்.ராமையாவின் தேரோட்டி மகன், குகன் எழுதிய ராஜராஜ சோழன் ஆகியன வெற்றி பெற்ற நாடகங்கள். மதுரை வானொலி நிலையம் கல்கியின் வரலாற்று நாவலான சிவகாமியின் சபதத்தை நாடகமாக்கி வெற்றிகரமாக ஒலிபரப்பியது. |
|
|
|
வள்ளுவர், ஒளவையார், வள்ளல்கள் போன்றோரின் வரலாற்றை இலக்கியம் தழுவி நாடகமாக்கி ஒலிபரப்புகின்றனர். ஒளவையார் அதியமான் உறவை விளக்கும் கவியின் கருணை குறிப்பிடத்தக்க நாடகம். திருமுறைகள் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் திருமுறை கண்ட சோழன் என்னும் நாடகத்தில் புலப்படுத்தினர். |
|
|
|
புராணக் கதைகளை விரும்பி ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தெய்வங்களின் ஆற்றலையும் அறிவையும் அருளையும் உணர்த்தும் வகையில் புராண நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. ஸ்ரீ சக்ரதாரி என்ற நாடகம் திருமாலின் வரலாற்றை எடுத்துக் காட்டியது. |
|
|
|
நகைச்சுவை நாடகங்களும் நேயர்களால் விரும்பப்படுகின்றன. நகைச்சுவை நாடகங்களுக்கு மோதல், உச்சக் கட்டம் என்ற வளர்ச்சி நிலைகள் கிடையாது. சிரிப்பூட்டும் உரையாடல்களே முக்கியம். மக்களுக்குத் தேவையான கருத்துகளை நகைச்சுவையாகத் தருகிறார்கள். லேடி பயில்வான், ஜிகினா சுல்தான், செல்லாதுரை, T.N.F.P 120 முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. |
|
|
|
உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் குடும்ப நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குடும்ப உறவுகளில் சிக்கல்கள், குடும்பப் பொருளாதார நிலைகளினால் வரும் சிக்கல்கள், நல்ல குடும்பத்தின் இயல்புகள் போன்றன நாடகமாக ஒலிபரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு நாடகங்களைக் காண்போம். |
|
|
|
அம்மா உன் வயிற்றினிலே என்ற தலைப்பைக் கொண்ட நாடகம் நேரடியாகக் கருத்தைச் சொல்லாமல் புதுமையான முறையில் கருத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது. ஏற்கெனவே நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருத்தி மீண்டும் கருவுறுகிறாள். கருவில் இருக்கும் குழந்தை கடவுள் அருளால் தாயுடன் பேசுகிறது. முன்பு அவள் பெற்ற குழந்தைகளை வளர்க்கப் படும்பாட்டை அறிகிறது. தானும் பிறந்து தாயின் சுமையை அதிகமாக்க விரும்பாமல் கடவுளிடம் வேண்டி இறந்தே பிறக்கிறது. இதில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நேரடிப் பிரச்சாரம் இல்லை. ஆனால் மறைமுகமாகக் கருத்துக் கூறப்பட்டுள்ளது. |
|
|
|
டியூசன் டீச்சர் என்ற நாடகம் மேற்கண்ட நாடகம் போன்றதுதான். நிறையக் குழந்தைகளைப் பெற்ற ஆசிரியை, குடும்ப வறுமையைப் போக்க ஒரு பணக்காரக் குழந்தைக்கு டியூசன் எடுக்கிறாள். அந்தக் குழந்தை நன்கு படித்து நிறைய மதிப்பெண் வாங்குகிறது. குழந்தையின் பெற்றோர்கள் பாராட்டி ஆசிரியைக்குப் பரிசு தருகின்றனர். ஆனால் ஆசிரியை மகிழ்ச்சியடையாமல், வருத்தப்படுகிறாள். வறுமையைப் போக்கும் ஆவலில் டியூசன் எடுத்து உழைத்த அவள், தன் குழந்தையின் படிப்பைக் கவனிக்க முடியாமல் போனாள். இதனால் அவளுடைய குழந்தை தேர்வில் தோல்வி அடைந்து விடுகிறது. |
|
|
|
சராசரி மனிதனைப் பாதிக்கும் எல்லாமே சமூக நாடகங்களில் இடம்பெறுகின்றன. சமூகக் கட்டமைப்பின் கோளாறு, கருத்து மோதல், மனித உறவுச் சிக்கல், பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முதலானவை நாடகங்களாக ஒலிபரப்பப் படுகின்றன. வானொலியில் சமூக நாடகங்களே மிகுதி எனலாம். பிற நிகழ்ச்சிகளில் வரும் நாடகங்களில் பெரும்பான்மையானவை சமூக நாடகங்களே. தொடர் நாடகங்களாகவும் இவை ஒலிபரப்பாகின்றன. சமூகத்தில் உருவாகும் புதிய விழிப்புணர்ச்சிகளுக்கு ஏற்பச் சமூக நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக சு.சமுத்திரத்தின் வாடாமல்லி நாடகத்தைக் குறிப்பிடலாம். அலிகள் பிரச்சினை தற்போது விரிவாக விவாதிக்கப்படுகிறது. அவர்களும் ஆண், பெண் போல மதிக்கப்பட வேண்டும்; சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்ற கருத்து வளர்ந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு அமைந்தது வாடாமல்லி நாடகம். இதுபோன்று பல நாடகங்களைச் சொல்லலாம். |
|
வானொலி நாடக வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கது தொடர் நாடகம் என்று பார்த்தோம். தொடர் நாடகங்கள் வானொலி நேயர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. தொடர் நாடகங்களைப் படைப்பாளர் பலரைக் கொண்டும் தனி ஒரு படைப்பாளரைக் கொண்டும் எழுதச் செய்து ஒலிபரப்புகின்றனர். |
|
|
|
காப்புக் கட்டிச் சத்திரம் என்ற தொடர் நாடகம் பலரால் படைக்கப்பட்டது. இது புறநகர்ப் பகுதியில் வாழும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தது. கிராமத்துக்கு வாங்க என்ற நாடகம் 13 ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்டது. கிராமங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்து, வாழ வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு வழிசொல்லும் வகையில் இந்நாடகம் ஒலிபரப்பப் பட்டது. பெண்ணாய்ப் பிறந்தவள் என்ற நாடகம் பெண் எழுத்தாளர் பலரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் தன் குறைகளைத் திருத்திக் கொண்டு செம்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்நாடகம் வலியுறுத்தியது. |
|
|
|
கறைபடிந்த கரங்கள் என்ற நாடகம் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த பொன். பரமகுரு அவர்களால் எழுதப்பட்டு ஒலிபரப்பானது. சமுதாயப் பகைவர்களாக நடமாடும் சிலரது பண்புக் கேடுகளையும், கொடுமைகளையும் 24 தொடர்களாக எடுத்துக் காட்டினார். இவற்றில் பெரும்பாலும் உண்மை நிகழ்ச்சிகளே நாடகமாக ஆக்கப் பெற்றிருந்தன. இதே போல உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு என்.சி. ஞானப்பிரகாசம் நுகர்வோருக்காக பகுதியில் நுகர்வோர் உரிமைகள் குறித்துத் தொடர் நாடகம் எழுதியிருந்தார். இது 15 தொடர்களாக ஒலிபரப்பாயிற்று. |
|
நகர மக்களின் சிக்கல்களைப் பற்றிய குயில்தோப்பு நாடகம் குறிப்பிடத் தக்கது. குப்பத்தில் முன்னேற வழியின்றி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது பற்றி இந்நாடகம் எடுத்துரைத்தது. நல்ல சுகாதாரம், கல்வி வளர்ச்சி, கூட்டுறவு, தொழில் வளர்ச்சி போன்றன குறித்தும் இந்நாடகம் எடுத்துரைத்தது. நகர மக்களின் நலவாழ்வு பற்றிப் பட்டுக்கோட்டை குமாரவேலு எழுதிய புதிய வேதாளம் நாடகமும் குறிப்பிடத் தக்கது. துபாஷ் வீடு என்ற தொடர் நாடகமும் வெற்றிகரமாக ரசிக்கப்பட்டது. |
|
பிற மொழிகளிலுள்ள நல்ல கதைகளைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்றி அமைத்து நாடகங்களாக ஒலிபரப்புகிறார்கள். இத்தகைய தழுவல் நாடகங்கள் வானொலியில் நிறைய இடம்பெறுவதில்லை. எனினும் நல்ல எழுத்தாளர்களின் படைப்பை அறிந்துகொள்ள இந்நாடகங்கள் உதவுகின்றன. |
|
அகில இந்திய அளவில் பல மொழிகளில் எழுதப்படும் வானொலி நாடகங்களில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிறமொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். நாடகப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்களையும் இவ்வாறு மொழிபெயர்த்து ஒலிபரப்புகிறார்கள். சிவாஜி வரலாற்றை மையமாகக் கொண்ட தேசத்தின் குரல் என்ற நாடகம் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. |
|
வானொலியில் நாடகத்திற்காக நேரம் ஒதுக்கி நாள்தோறும் ஒலிபரப்புகிறார்கள். அதையும் தவிரச் சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சி, கிராம நிகழ்ச்சி, தொழிலாளர் நிகழ்ச்சி, பெண்களுக்கான பெண்ணுலகம் நிகழ்ச்சி, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி ஆகியவற்றில் சிறுசிறு நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. |
|
|
|
சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சியில், சிறுவர்களின் பண்புகளை வளர்க்கக் கூடிய வகையில் நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். சிறுவர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெரும்பாலும் சிறுவர்களையே பங்குபெறச் செய்கிறார்கள். சொல்ல வேண்டிய செய்திகளை நாடகத்தில் அழுத்தமாகச் சொல்கிறார்கள்; அதே நேரத்தில் எளிமையாகச் சொல்கிறார்கள். அன்பு, இரக்கம், வீரம், உதவும் பண்பு, முயற்சி, நாட்டுப்பற்று, பகுத்தறிவு முதலான செய்திகளை நாடகக் கருவாகக் கொள்கிறார்கள். ராமன், சீதை, சிவாஜி, அலெக்ஸாண்டர், அசோகர், ராணி மங்கம்மாள் முதலானோரின் வரலாறுகளும் நாடகங்களாக ஒலிபரப்பப்படுகின்றன. அறிவியல் கருத்துகள் குறித்தும் அறிவியல் மேதைகள் குறித்தும் நாடகங்கள் தரப்படுகின்றன. பீர்பால், தெனாலி ராமன் முதலானோரின் அறிவூட்டும் நகைச்சுவைக் கதைகளையும் நாடகமாக்கித் தருகின்றனர். |
|
|
|
கிராம மக்களுக்கான கிராம நிகழ்ச்சிகளில் பசுமைப் புரட்சி, பயிர்ப் பாதுகாப்பு, குடும்ப நலம், முதியோர் கல்வி முதலானவற்றைப் பற்றிய நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நிகழ்ச்சி என்னும் வடிவத்திலும் சிறு நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். |
|
|
|
தொழிலாளர் நிகழ்ச்சிகளில் தொழிலாளர் நலம், தொழிலாளர் முன்னேற்றம், தொழிலாளர் கடமை முதலான செய்திகளை நாடகமாக்கி ஒலிபரப்புகிறார்கள். தொழிலாளி முதலாளி உறவு குறித்தும் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன. |
|
|
|
பெண்களுக்கான பெண்ணுலகம் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு, குடும்பக்கலை, பிள்ளை வளர்ப்பு, பெண்களுக்குப் பயன்தரும் தொழில்கள், கல்வி வளர்ச்சி, வரதட்சணைக் கொடுமை முதலியன குறித்துச் சிறு நாடகங்களை ஒலிபரப்புகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சினைகளும், குடும்ப உறவுச் சிக்கல்களும், விலைவாசி உயர்வுச் சிக்கலும் தீர்வு பெறும் வகையில் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன. |
|
|
|
இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், வேலையில்லாத் திண்டாட்டம், தலைமுறை இடைவெளி, வாழ்க்கை அணுகுமுறை, மதிப்பீடுகள் முதலானவை குறித்து நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். |