6.6 நாடக நிகழ்வுகள்

சின்னத்திரையின் அளவு, குடும்ப சாதனமாக இருப்பது முதலான காரணங்களால் நாடகக் கதையின் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது.

6.6.1 அரசு தொலைக்காட்சி நாடகங்கள்

அரசு தொலைக்காட்சியில் கால்மணி, அரைமணி, முக்கால்மணி, ஒருமணி, ஒன்றரை மணி என ஒளிபரப்புக் கால அளவை அமைத்துக் கொண்டு நாடகங்களை ஒளிபரப்பினார்கள். தொழிலாளர் நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி, கிராமத்து நிகழ்ச்சி முதலானவற்றில் இவை இடம்பெற்றன. சமூக நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என்று தூர்தர்ஷன் பலவகையாக ஒளிபரப்பு நிகழ்த்தியுள்ளது. சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், இலட்சியக் கருத்துகள், ஒழுக்க நெறிகள் முதலான பல செய்திகளை உள்ளடக்கிய நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை முதலான கதைகளையும் அலையோசை, சித்திரப்பாவை முதலான புதினங்களையும் நாடகங்களாக்கி ஒளிபரப்பியிருக்கிறது.

முதல் நாடகம்

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் நேற்று இன்று நாளை என்பது. இதன் ஆசிரியர் மௌலி. இதில் யு.ஏ.ஏ. நாடகக் குழுவைச் சேர்ந்த ஒய்.ஜி. பார்த்தசாரதி, ஒய்.ஜி. மகேந்திரன், ஏ.ஆர். சீனிவாசன் முதலானவர்கள் நடித்தனர். அது தற்கால, எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளைச் சித்திரித்தது. அது அரைமணி நேரம் ஒளிபரப்பானது.

வண்ண நாடகம்

சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் திருமலை நாயக்கர் என்னும் வரலாற்று நாடகம். இதன் ஆசிரியர் ஆறு. அழகப்பன். ஹெரான் நாடகக் குழுவினர் இதில் நடித்தனர். இந்நாடகம் 1.30 மணி நேரம் ஒளிபரப்பானது. தேசிய அலைவரிசையிலும் இது ஒளிபரப்பப் பட்டது.

மொழிபெயர்ப்பு நாடகம்

இந்தியில் தயாரிக்கப்பட்ட ஜுனூன், நுக்கத், ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் முதலான நாடகத் தொடர்களைத் தமிழாக்கம் செய்து தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. ஜுனூன் தொடரின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழ்மொழியைச் சிதைப்பதாக அமைந்ததுடன் நகைப்பையும் உண்டாக்கிற்று. இதை ‘ஜுனூன் தமிழ்’ என்றே குறிப்பிட்டார்கள்.

இப்பொழுது தனியார் தொலைக்காட்சி போலவே விளம்பரதாரர் நிகழ்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பலவற்றை தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.

6.6.2 தனியார் தொலைக்காட்சி நாடகங்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மூன்று வகையான நாடகங்களை ஒளிபரப்புகின்றன.

வாரம் முழுதும் ஒளிபரப்பாவன

ஒரே கதை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் திங்கள் முதல் வெள்ளி வரை அரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படுகின்றது. சக்தி, குடும்பம், சித்தி, அண்ணாமலை, மெட்டிஒலி, அலைகள், காவ்யாஞ்சலி, சொந்தம், அண்ணி, ரெக்கை கட்டிய மனசு, குங்குமம், சொர்க்கம் முதலான தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் வகையைச் சார்ந்தவை. காலையில் சில தொடர்களும் மாலையில் சில தொடர்களும் ஒளிபரப்பாகின்றன. இரவு 11.00 மணி வரை இவை ஒளிபரப்பாகின்றன. இத்தகைய தொடர்கள் வணிக நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. விளம்பரங்களைப் பெறுகிற வாயில்களாக இவை அமைகின்றன. தொடரில் ஒவ்வொரு முக்கியக் காட்சியையும் தொடர்ந்து விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பரிசுக் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பெண் மையக் கதைகளாகவே இருக்கின்றன. மர்மக் கதைகளும் வீட்டுக்குவீடு லூட்டி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நகைச்சுவைக் கதைகளும் இடம் பெறுகின்றன.

வாரம் ஒருமுறை ஒளிபரப்பாவன

ஒரே கதை பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு வாரம் ஒருநாள் மட்டும் ஒளிபரப்பப்படுவதும் உண்டு. சூலம், வேலன், ருத்ரவீணை, ராஜராஜேஸ்வரி முதலானவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவற்றில் கணினி வரைகலை (Graphics) நுட்பங்கள் மூலம் மாயாஜாலக் காட்சிகள் காட்டப்படுகின்றன. அறிவியலின் துணையால் மூடநம்பிக்கைகளைப் பரப்புகிற முரண்பாடு இதில் இடம் பெறுகிறது. பேய் பிசாசுகளையும், மறுபிறவி நம்பிக்கைகளையும், செய்வினைகளையும், சாபம், சாப விமோசனம், மந்திர தந்திரங்களையும் இவை காட்டி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

தனிக்கதைத் தொடர்கள்

ஒளிபரப்பாகும் நாடகம் அன்றே முடிவதாக அமைவதுடன், அது போன்ற கதைகள் ஒரு தொடராகக் காட்டப்படுவது இன்னொரு வகை, தனித்தனியான இக்கதைத் தொடர்கள் தினந்தோறுமோ வாரம் ஒரு முறையோ ஒளிபரப்பாகின்றன. பாலுமகேந்திராவின் கதைநேரம் என்ற நிகழ்ச்சியில் வாரத்தில் ஒரு நாள் ஒரு தனிக்கதை வீதம் ஒரு தொடராக ஒளிபரப்பானது. இதுபோன்ற அமைப்பில் வெளியாகும் நாடகங்கள் ரசிக்கத் தக்கவை.

தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு உரையாடலைக் குறைத்துக் காட்சி வடிவில் நல்ல கதைகளைச் சொன்னால் தொலைக்காட்சி நாடகக் கலை வளர்ச்சியடையும்.