5.3 தமிழுணர்வு

பயிர், செடி, கொடி, மரம், மனித உயிர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கு அடிப்படை ஆதாரமாக எப்படி நீர் இருக்கின்றதோ, அதுபோல உயிரை இயக்க மொழி அவசியமாகின்றது. அந்தச் சக்தியைத் தருவது தாய்மொழி. தாய்மொழியாம் தமிழ்மொழியை அமிழ்தம் என்று பாவேந்தர் பாடியதைப்போல (தமிழுக்கும் அமுதென்று பேர்) நாமக்கல் கவிஞரும்,

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று
வருகின்ற அதுவந்து சேரும்

                 (நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 19)

என்று தமிழ்மொழியின் பெருமையை உணர்ந்து பாடுகின்றார்.

5.3.1 தமிழ்மொழியின் பெருமை

நமது தமிழ்மொழியைத் தமது உயிராக எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு தமிழுணர்வைப் பாடியவர் நாமக்கல் கவிஞர் என்று சொல்லலாம்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதி கூறியதைப்போல,

எந்தெந்த நாட்டின்கண் எது நல்லதென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம்

              (நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 21)

என்று தமிழ் என்ற சொல்லின் பெருமையைப் பாடுகின்றார்.

5.3.2 தமிழனின் பெருமை

நாமக்கல் கவிஞரின் பாடல்களில் தமிழுணர்வு எவ்வளவு அதிகம் இருந்ததோ அதே அளவு தமிழன் பற்றிய உணர்வு இருந்தது என்பதை இனிக் காணலாமா?

பக்தியும் அன்பும் அறமும் தமிழனின் பண்புகளில் குறிப்பிடத்தக்கவை என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிடுகின்றார். அதற்கு ஒரு பாடலைச் சான்றாகப் பார்க்கலாம்.

தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடை ழியாகும்

காப்பிய நூல்களை எழுதிய பெருமையும், திருக்குறள் யாத்த சிறப்பும், பக்திப்பாடல்களின் புகழும், புதுமையாய்க் கவிதை யாத்த பாரதியின் பாக்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடம் சூட்டக் கூடியவை எனத் தமிழனின் சிறப்புகளில் சிறந்தனவற்றைப் பட்டியலிடுகிறார் கவிஞர். மதங்களின் பெருமைகளைப் பேணிக் காத்தவன் தமிழன். எம்மதமும் சம்மதம். கடவுள் வழிபாடு அவசியம். எல்லா மதத்திற்கும் முக்கியத்துவம் தருதல் ஆகியன தமிழனைத் தனித்த குணமுடையவன் என்பதைக் காட்டுகின்றன அல்லவா?