நிலப்பிரபுத்துவச் சமூகத்தினால் மக்கள் ஒடுக்கப்படும்
நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது சோசலிச எதார்த்தவாதம்.
நிலப்பிரபுத்துவ அடக்குமுறையை எதிர்க்கும் குரல்தான்
இலக்கியமாகப் பரிணமித்தது.
தமிழ்ச்சூழலில் சோசலிச எதார்த்த வாதத்தை முதலில்
பாடலாக்கியவர் பட்டுக்கோட்டையார். பொறுமையிழந்தனர் மக்களெல்லாம் - மனம்
பொங்கி எழுந்தனர் எரிமலை போல்
உரிமை பறித்த உலுத்தர் எதிர்த்தனர்
ஒருமித்த சனசக்தி வென்றது வென்றது
(வே,பாலசுப்பிரமணியன்,
பட்டுக்கோட்டையார் பாடல்கள்
- ஒரு திறனாய்வு, பக்கம்.189) அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும்; உரிமைகள் பறிக்கப்
படுமானால் பொங்கி எழ வேண்டும்; அடிமைப்பட்டு வாழ்வோர்
அனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றிபெற வேண்டும் என்பது
பட்டுக்கோட்டையாரின் எண்ணமாகும். தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில்
சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் குரல் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
என்பதாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு
தனிமனிதனும் மதிக்கப்பட வேண்டும் என்பதும் பொருள்
எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் பொதுவுடைமை உணர்வாகும்.ஏரோட்டும் ஏழை இதயம் குமுறினால்
போராட்டம் எழுமே - புவியிலே
போராட்டம் எழுமே
கூழுக்குப் பல பேர் வாடவும் - சிற்சிலர்
கொள்ளையடித்தலைச் சகியோம்
(பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின்
பாட்டுத்திறம் - ஒரு சமூகப் பார்வை, பக்கம்.159)
ஏழை x பணக்காரன் என்ற நிலைமாறி எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் ஒரு குலம், அனைவரும் உடைமையாளர்களாக மாற
வேண்டும் என்பதே மேற்குறிப்பிட்ட பொதுவுடைமை உணர்வாகும்.
முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டி
வருகிறது. சுரண்டும் வர்க்கத்தை ஒழிக்கப் பட்டுக்கோட்டையார்
முதலில் திரைப்படம் மூலம் பாடல் எழுதினார். ஏமாற்றும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுகிற கூட்டம் - நாட்டில் மக்கள்
எதிர்த்துக்கிட்டா எடுக்கணும் ஓட்டம்.
(படம்: எல்லாரும் இந்நாட்டு
மன்னர், 1960)
தூங்காது கண் தூங்காது
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை
தூங்காது கண் தூங்காது
(படம்: கற்புக்கரசி, 1957) ஆகிய பாடல்களை எழுதியிருப்பதன் மூலம் சமூக ஒடுக்குமுறையை
எதிர்க்கும் வலிமை படைத்தவர்கள் பாட்டாளி வர்க்கத்தினர்
என்பதை உணர்த்துகிறார். வர்க்கச் சிந்தனை
பட்டுக்கோட்டையாரிடம் வெளிப் பட்டமைக்கு 1940 முதல் 1950
வரை உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டமே காரணமாகும்.
முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை உணர்ந்த கவிஞர், வர்க்க
வேறுபாட்டை எதிர்க்கிறார். அதிகமாக அவர் கவிதைகளில்
வெளிப்பட்டிருப்பது வர்க்க வேறுபாட்டு எதிர்ப்பு உணர்வாகும். |