2.5 பெருவாழ்வு

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டா?” என்று பாடினார் பாரதிதாசன். அவரும் இறவாத புகழுடன் இன்றும் வாழ்கிறார். பாரதிதாசனைத் தம் தந்தை, ‘தமிழர் தந்தை’ என்று பாடியவர் முடியரசன். அவரையும், திரு.வி.க.வையும், கா. அப்பாதுரை யாரையும், ‘விதவை மறுமணக் கழகம்’ நிறுவிய தமிழ்த் தொண்டர் முருகப்பாவையும், கலைவாணரையும் தம் கவிதைகளால் இறவாத சொல் ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார் முடியரசன்.

பழங்காலத்தில் கவிஞர்கள், ‘வள்ளல்கள்’ என்று அரசரைப் புகழ்ந்துள்ளனர். ஆனால் இங்கு, ஓர் அரசன் - முடியரசன் ஒரு கவிஞரை ‘வள்ளல்’ என்று புகழ்ந்திருக்கிறார். கவிமணி தேசிக விநாயகரைக் காரணத்துடன், வள்ளல் என்று பாடுகிறார் முடியரசன், கவிமணி என்னும் கவிதையில் -

செந்தமிழ்க்கு வாழ்வுஅளித்தோன்; சேர்ந்தோர்க்கு
நண்புஅளித்தோன்
சிந்தையினைச் செம்மைக்கே தந்துஉவந்தோன் - உந்திஎழும்
செய்யுளுக்கு வாய்அளித்தோன் தேசிகவி நாயகனை
உய்யவரு வள்ளல்என ஓது

(நண்புஅளித்தோன் = நட்பை வழங்கியவன்; செம்மை = நேர்மை; உந்திஎழும் = பொங்கி எழுகிற; உய்யவரு வள்ளல் = காக்க வரும் வள்ளல்)

இறவாத பெருவாழ்வு பெற்ற தம் முன்னோர்போல் தாமும் சாவதை வரவேற்கிறார் முடியரசன். இறப்பே வா என்ற கவிதையில் சாவை அழைக்கிறார். ஒரு காதலியாய்த் தம்மை வந்து தழுவச் சொல்கிறார் :

உன்னைக்கண்டு அஞ்சுகிறார் கோழை மாந்தர்
உவக்கின்றேன் உனைத்தழுவ வருக மாதே !
பொன்னைப்போல் புழுவைப்போல் வருத்தும் நோய்போல்
பொல்லாத பாம்பினைப்போல் வந்தால் ஏலேன்
தன்னைப்போல் மாந்தர்எல்லாம் எண்ணச் செய்யும்
தனிப்புரட்சி உருவில்வரின் அணைத்துக் கொள்வேன்

(உவக்கின்றேன் = மகிழ்கிறேன்; ஏலேன் = ஏற்கமாட்டேன்; உருவில்வரின் = உருவில் வந்தால்)

முடியரசன் சமஉரிமைக்கான புரட்சியின் விளைவில் தமக்குச் சாவு வர வேண்டும் என்று விரும்புகிறார்