3.6 உள் உணர்வின் வெளிப்பாடு


அறிவு மட்டுமே நம் வாழ்க்கையையும் உலகையும் வழிநடத்துகிறதா? இந்தக் கேள்விக்குக் கலைஞர்கள் கூறும் விடை ‘இல்லை’ என்பதுதான். உள் உணர்வுதான் வழி நடத்துகிறது என்றுதான் எந்த உயர்ந்த கலைஞனும் சொல்வான். ந.பிச்சமூர்த்தி உயர்ந்த கலைஞர். சிறந்த கவிஞர். நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்ளுணர்வை - மெய் உணர்வை விழிக்க வைக்கக் குரல் எழுப்புவதே இவரது தொழிலாக இருக்கிறது. அந்தக் குரலே இவரது கவிதையாக இருக்கிறது.

காட்டுவாத்து குறுங்காவியம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது -

சுயநலத்தைப் பொதுத்தொண்டு ஆக்கும்
ஜாலக் கண்ணாடி வித்தை
காட்டநான் பாடவில்லை
பழவேதப் படையை ஓட்டி
லோகாயத வேதப் படையின்
தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம்போச்சு
மார்க்ஸ்கால வெள்ளம்போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம்
எக்காலும் வழியாது ஓடும்
இயற்கையின் ஓயாத் தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலுப்பல் இடையே
மலையாக உயர்ந்து நிற்கும்

(பழவேதம் = பழைய வேதங்கள்; லோகாயதம் = உலக வாழ்வியல்; தமுக்கு = வெற்றி முரசு; எக்காலும் = எப்போதும்; தானம் = கொடை, வழங்கல்)

காட்டுவாத்து - பறந்துவரப் பாதை இல்லை, பார்த்துவர வரை படங்கள் இல்லை. பிழைதிருத்த அதற்குப் பகுத்தறிவு இல்லை ; பறக்கும் சாத்திரம் பற்றிய படிப்பு அறிவு இல்லை. சைபீரியாவை விட்டு மூவாயிரம் மைல் தாண்டி வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்துவிட்டுத் திரும்பிப் போகிறது. தன் இனத்தைப் பேணும் உணர்வில்,

நெறியோ நீதியோ
நீண்ட கதைகளோ
கலாச்சார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
இங்குவந்த பறவைச் சத்தம்.....

(மமதை = ‘நான்’ என்னும் அகந்தை; வேடந்தாங்கல் = தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம்)

பிச்சமூர்த்தியின் பாட்டுச் சத்தமும், இந்தப் பறவையின் சிறகுச் சத்தமும் வேறு அல்ல.

‘மெய்யுணர்வை எழுப்பிடும் ‘காட்டு வாத்து’ ஆகிச் சிறகை விரித்துவிட்டால் வாழ்வும் வேடந்தாங்கல் ஆகும்’ என்கிறார் இந்தக் கவிஞானி.

பொங்கல் கவிதையில் இறுதியில் இதே அறிவுரைதான் கூறுகிறார்:

பொங்கல்இடு தன்னலத்தை
பொங்கவிடு உள்உணர்வை


வாழ்வியல் பற்றிய இவரது கவிதைக் கோட்பாடு இதுதான்! நண்பர்களே! ந.பிச்சமூர்த்தி கவிதை தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதை இதுவரை கண்ட சில சான்றுகளால் உணர்ந்திருப்பீர்கள். அவரது கவிதைகளை, முழுதும் ஆழமாக விரித்துரைக்க இப்பாடப் பகுதியில் இடமில்லை. நூல் தேடிப் படித்துச் சுவையுங்கள்.