|    
       ‘புன்னகை பூக்கும் பூனைகள்’ - நூலின் முன்னுரையாக, 
      சிற்பி கவிதை பற்றிக் கவிதை எழுதுகிறார்- 
        எழுத்து 
 ஆன்மாவின் ரத்தம்
  
 கவிதைகள் 
 காலத்தின் உதடுகள்
  
 தகிடுதத்தங்களுக்கு 
 நகக்கண் ஊசி
  
 வடக்கும் தெற்கும் 
 மேற்கும் கிழக்கும் 
 பேதமாய்ப் பாரோம் ! 
  
 யாம் திசைகளை விழுங்கும் 
 திகம்பர கவிகள்
   
 (ஆன்மா = உயிர்; தகிடுதத்தம் = பொய்புரட்டுகள்; திகம்பர
 கவிகள் = திசைகளையே ஆடையாக உடுத்த கவிகள் - இந்தப் பெயருடன் தெலுங்கில் 
 தோன்றிய புரட்சிக் கவிதை இயக்கம்)
  
       கவிதை கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக (ரத்தமாக) 
      இயங்க வேண்டும்; காலத்தின் மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; காலத்தின் 
      தேவைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டும்; பொய் புரட்டுகளின் நகக்கண்களில் ஊசியாய் 
      ஏறித் தண்டிக்க வேண்டும். இனம், மொழி, தேச எல்லைகள் தாண்டிப் பொது மானிடத்தை 
      மேம்படுத்த வேண்டும். இவையே கவிதையின் பணி என்கிறார் சிற்பி. 
       மேலே குறிப்பிட்ட வழியில் சிற்பியின் இலக்கியப் படைப்புக் 
      கொள்கை அமைந்துள்ளது. இதனால் இவரது கவிதைகள் தம் மண்ணின் மணத்தைக் கொண்டு உள்ளன. 
      தம் மக்களின் பண்பாட்டையும், மரபு சார்ந்த கலைச் செழிப்பையும் முழுமையாக ஏந்திப் 
      பிறக்கின்றன. அதே வேளையில் உலகின் எல்லாத் திசைகளில் இருந்தும் புறப்பட்டு 
      வரும் புதுமைகளை ஏற்கின்றன. உலகப் புதுமையோடு, தமிழ்ப் புலமை கைகோத்து நடக்கிறது. 
      இதுவே சிற்பியின் படைப்புவழி. 
       வயிற்றுப் பிழைப்புக்காகத் தெருவில் நடக்கும் ‘சின்ன 
      சர்க்கஸில்’ - தன் மீது ஏறி நிற்கும் தன் தந்தையின் சுமையைத் தாங்கிக் கிடக்கிறான் 
      ஒரு சின்னஞ் சிறுவன். இவனும் சிற்பியின் கவிதையில் நாயகன் - பாடுபொருள் - ஆகிறான். 
      கணினி யுகத்தின் கண்டு பிடிப்பான, கண்ணீர் வடிக்கத் தெரியாத, இயந்திர மனிதனும் 
      (ரோபோ) கவிதைப் பொருள் ஆகிறான். 
       சிற்பி மண்ணில் நின்று நிலவைப் பாடும் பழங்கவிஞராகவும் 
      இருக்கிறார்; அப்பாட்டிலும் புதுமை சிரிக்கிறது. நிலவில் ஏறி நின்று மண்ணைப் 
      பார்க்கும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார்; அந்தப் பார்வையில் என்றும் மாறாத 
      மனிதப் பண்பின் மரபுப் பழமை வேரோடி இருக்கிறது. அதில் தமிழனின் வழிவழி வந்த 
      பண்பாட்டு மரபு தனித்தன்மையோடு மலர்ந்து மணக்கிறது.   |