6.5 குறும்பாக்களின் சிறப்புத் தன்மை

 

நண்பர்களே ! இதுவரை அறிந்த செய்திகள் வழியாகக் குறும்பாக்களின் சிறப்பு இயல்புகள் பற்றி உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும்.

பெரும்பாவைப் படைப்பதுதான் திறமையான புலமை என்பது இல்லை. குறும்பா இயற்றுவதிலும் சிறந்த புலமை வெளிப்படுகிறது. உண்மையில் சுருங்கச் சொல்லி விளங்க உணர்த்துவதற்கே மிகுந்த திறமை தேவை, திருவள்ளுவரின் பெருமைக்கு எது காரணம்? எண்ணிப் பாருங்கள்.

குறிப்பாகச் சமூகத்தின் மீது அக்கறையும், பிறர் நலன்களுக்காகப் போராடும் குணமும் கொண்ட கவிஞர்களே குறும்பாவை அதிகம் படைக்கின்றனர்.

குறும்பாவில்,

  1. ‘களுக்’கென்று பொங்கிவரும் சிரிப்பை,
  2. ‘முணுக்’கென்று அரும்பிவிடும் கண்ணீர்த் துளியை,
  3. ‘சுருக்’கென்று மனத்தில் தைக்கும் வலியை,
  4. ‘பளீர்’ என்று மனத்தில் மின்னலாய்த் தோன்றும் எண்ணத்தை,

அப்படியே, ‘பளிச்’ சென்று சொல்லில் வடித்துவிட முடிகிறது.

அதைப் படிப்பவரின் உள்ளத்துக்கு அப்படியே ‘இடமாற்றல்’ செய்துவிட முடிகிறது. எனவே, குறும்பாவைப் புதுக்கவிதைக் ‘குறள்’ என்று குறிப்பிடலாம்.

நாம் மேலே கண்ட கவிஞர்கள் மட்டும் அன்றி வேறு சிலரும் மிகச் சிறந்த குறும்பாக்கள் வடித்துள்ளனர். ஹைக்கூவில் அறிவுமதியும் (புல்லின் நுனியில் பனித்துளி), லிமரிக்கில் த.கோவேந்தனும் (கோவேந்தனின் குறும்பா) நல்ல படைப்பாக்கம் செய்தவர்கள்.

சிறந்த நூல்கள் தேடிச் சிறந்த கவிதைகள் படியுங்கள், நீங்களே நல்ல கவிதைகள் படையுங்கள்.