|   1.3 சிற்றிலக்கிய 
                வகைகளின் தோற்றம் 
                      சிற்றிலக்கியங்கள் எவ்வாறு 
                தோன்றுகின்றன என்பதையும், அவை தோன்றுவதற்கான காரணங்களையும் இனிக் 
                காணலாம். 
               மூலம்  
                      எந்த ஓர் இலக்கிய வகையும் 
                திடீரெனத் தோன்றி விடாது. அது தோன்றுவதற்குரிய இலக்கிய மூலங்கள் 
                அதற்கு முன்பு உள்ள இலக்கண நூல்களிலும் இலக்கியங்களிலும் காணப்படும். 
                அந்த மூலங்கள் முதலில் தனிப் பாடலாக இருந்து, பின் வளர்ச்சி பெற்றுத் 
                தனி இலக்கிய வகையாக உருவாகின்றன. 
                      இதனை ஒரு சான்று மூலம் 
                விளக்கமாகக் காணலாம். தலைவன் தலைவி ஆகிய இருவரிடையே பிரிவு ஏற்படுவதற்குரிய 
                காரணங்களாகத் தொல்காப்பியர் ஓதல், பகை, தூது ஆகிய மூன்றினைக் கூறுகின்றார். 
                      ஓதல் பகையே தூதுஇவை 
                பிரிவே 
               (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணை இயல், 
                இளம்பூரணர் உரை, நூற்பா. 27) 
                      அதாவது, கல்வி கற்கச் 
                செல்லுதல், போரிடுவதற்காகச் செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய மூன்று 
                காரணங்களுக்காகத் தலைவன், தலைவி ஆகிய இருவரிடையே பிரிவு நிகழும் 
                என்கிறார். இங்குத் தூது செல்லுதல் என்பது சுட்டப்படுகிறது. இது, 
                பிற்காலத்தில் தூது என்ற இலக்கிய வகை தோன்றுவதற்குரிய இலக்கிய மூலம் 
                எனலாம். 
                      மன்னர்களாகிய அதியமான் 
                நெடுமான் அஞ்சிக்கும் தொண்டைமானுக்கும் பகை ஏற்பட்டது. 
                இதனால் போர் நிகழக்கூடிய சூழல் உருவானது. இதைத் தடுக்க ஒளவையார் 
                தொண்டைமானிடம் தூது சென்றதாக ஒரு புறநானூற்றுப் பாடல் (95) 
                காணப்படுகின்றது. இது தூது இலக்கியத்தின் மூல காரணமான தனிப்பாடல். 
                இதை அடிப்படையாகக் கொண்டு பிற்கால வளர்ச்சியில் தூது 
                என்ற தனிச் சிற்றிலக்கியம் தோன்றியது எனலாம். 
              1.3.1 
                சமுதாய மாற்றம் 
                      சமுதாயத்தில் பல்வேறு 
                காரணங்களால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் ஏற்படும்போது 
                இலக்கியத்தின் கருத்துகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இம்மாற்றங்களால் 
                புதிய இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. 
                      சான்றாகப் பள்ளி 
                எழுச்சி என்ற இலக்கிய வகை தோன்றியதைக் கூறலாம். சங்க காலத்தில் 
                மன்னர்களைப் புகழ்ந்து பாடும் நிலை காணப்பட்டது. எனவே, மன்னனை உறக்கத்திலிருந்து 
                எழும்படி வேண்டுவதாகப் பாடப்படும் துயிலெடை நிலை 
                என்ற துறை காணப்பட்டது. பக்திக் காலத்தில் மன்னனின் இடத்தை இறைவன் 
                பெற்றான். எனவே, மன்னனைத் துயில் எழுப்பப்பாடும் நிலை மாறி, இறைவனைத் 
                துயில் எழுப்பப்பாடும் திருப்பள்ளி எழுச்சி  என்ற 
                சிற்றிலக்கிய வகை தோன்றியது எனலாம். 
              1.3.2 
                தனிநூல் ஆக்குதல் 
                      முந்தைய இலக்கியங்களில் 
                ஓர் உறுப்பாக உள்ளதைத் தனி ஓர் இலக்கியமாகப் படைக்க வேண்டும் எனப் 
                புலவர்கள் எண்ணினர். இதன் விளைவாகப் புதிய சிற்றிலக்கிய வகைகள் தோன்றின. 
                      சான்றாக, முந்தைய இலக்கியங்களில் 
                காப்பு என்பது ஓர் உறுப்பாகக் காணப்பட்டது. பாட்டுடைத் தலைவனைக் 
                காக்குமாறு வேண்டிப் பாடுவது காப்பு ஆகும். இதையே பல பாடல்களில் 
                பாடிக் காப்பு மாலை என்ற ஓர் தனி இலக்கிய வகையைப் 
                படைத்துள்ளனர். 
                 
                1.3.3 புதிய இலக்கியம் 
                படைத்தல் 
                      மரபு வழியாக வந்த சில 
                இலக்கியங்களை இணைத்துப் புதிய இலக்கியம் படைக்கும் நோக்கத்தின் காரணமாகவும் 
                பல சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. 
                      சான்றாகப் பரணி 
                என்ற சிற்றிலக்கிய வகையைக் கூறலாம். மன்னனின் போர்க்கள வெற்றியைப் 
                புகழ்ந்து பாடுவது பரணி இலக்கியம் ஆகும். போர்க்களங்களைச் சிறப்பித்துப் 
                பாடும் இலக்கியங்களான களவேள்வி. மறக்கள வழி என்ற 
                இலக்கியங்களை இணைத்துப் பரணி என்ற இலக்கிய வகையைப் படைத்தனர். 
              1.3.4 
                துறைகளை இணைத்துப் பாடுதல்  
                      சங்க இலக்கியத்தில் பல 
                அகப்பொருள் துறைகள் காணப்படுகின்றன. தனித்தனியே உள்ள அவற்றை எல்லாம் 
                இணைத்துப் புதிய இலக்கிய வகையாகப் பாட வேண்டும் என்ற நோக்கில் புதிய 
                சிற்றிலக்கிய வகைகளைப் படைத்துள்ளனர். 
                      சான்றாகக் கோவை 
                இலக்கிய வகையைக் கூறலாம். நானூறு அகப்பொருள் துறைகளை இணைத்துக் கோவையாகப் 
                பாடப்பட்ட சிற்றிலக்கிய வகையே கோவை இலக்கியம் ஆகும். 
              1.3.5 
                கருவியாகக் கொள்ளல் 
                      பக்தி இயக்கம் தோன்றிய 
                காலத்தில் புலவர்கள் மக்களிடையே இறை உணர்வைத் தோற்றுவிக்கவும், இறைவனின் 
                பெருமைகளை எடுத்துக் கூறவும் விரும்பினர். இதற்குரிய பல்வேறு வழி 
                முறைகளில் புதிய சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தலையும் ஒன்றாகக் கொண்டனர். 
                பக்தி இலக்கியம் என்று கூறப்படும் பன்னிரு திருமுறைகளிலும், நாலாயிரத் 
                திவ்வியப் பிரபந்தத்திலும் ஏராளமான சிற்றிலக்கிய வகைகள் புதிதாகத் 
                தோற்றம் பெற்றுள்ளதைச் சான்றாகக் கூறலாம். பின்னர் இப்போக்கு மேலும் 
                வளரத் தொடங்கியது. 
                      சைவ சமயச் சார்பில் திருவருணைக் 
                கலம்பகம் வைணவ சமயம் சார்பாகத் திருவரங்கக் கலம்பகம் 
                ஆகியவற்றை இவ்வளர்ச்சியின் வெளிப்பாடாகக் கூறலாம். 
                      இறைவன் எழுந்தருளியுள்ள 
                தலங்களை அல்லது இடங்களைப் புகழ்ந்து பாடுவதன் மூலமும் மக்களிடையே 
                பக்தி உணர்வை ஏற்படுத்த நினைத்தனர். இதனாலும் பல சிற்றிலக்கியங்கள் 
                தோன்றின. சான்றாகத் தலக்கோவை என்ற சிற்றிலக்கிய 
                வகையைக் கூறலாம். 
                      இறைவனின் அவதாரச் சிறப்புகளை 
                மக்களிடையே கூறி இறைவன் பெருமைகளை விளக்க நினைத்தனர். இதன் விளைவாக 
                உற்பவ மாலை என்ற சிற்றிலக்கிய வகை தோன்றியது. 
            1.3.6 புலமைத்திறனை வெளிப்படுத்தல் 
               
                      புலவர்கள் தம் புலமைத் 
                திறனை அல்லது அறிவு ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிற்றிலக்கிய 
                வகைகளைப் படைத்துள்ளனர். 
                      மரபாக வரும் இலக்கிய உறுப்புகளையும், 
                நாட்டுப்புற இலக்கிய உறுப்புகளையும், பல்வேறு பா வகைகளையும் இணைத்துப் 
                பாட வேண்டும் என்னும் விருப்பத்தில் கலம்பகத்தைப் படைத்துள்ளனர். 
                      பல்வேறு சந்தங்களில் பாட 
                வேண்டும் என்ற விருப்பத்தால் பல்சந்தமாலை தோன்றியது. 
                      வேறு வேறு பாக்களை இணைத்துப் 
                பாட வேண்டும் என்ற விருப்பத்தால் இரண்டு பா வகைகளால் பாடப்படும் 
                இரட்டைமணிமாலை, மூன்று பா வகைகளால் பாடப்படும் 
                மும்மணிமாலை, நான்கு பா வகைகளால் பாடப்படும் நான்மணிமாலை 
                முதலிய இலக்கிய வகைகள் தோன்றின. 
                      ஒரே பொருண்மையில் பல்வேறு 
                இலக்கிய வகைகளைப் படைக்கும் நோக்கத்தாலும் பல இலக்கிய வகைகள் தோன்றின. 
                மன்னனின் பத்து உறுப்புகளைப் பாடும் இலக்கிய வகை தசாங்கம். 
                 இதே பொருண்மையில் தசாங்கப்பத்து, தசாங்கத்தயல், 
                தசாங்க வெண்பா, சின்னப்பூ ஆகிய இலக்கிய வகைகளையும் படைத்துள்ளனர். 
                      இவ்வாறு, பல காரணங்களால் 
                பல்வேறு வகையான சிற்றிலக்கிய வகைகள் தோன்றியுள்ளதை அறிய முடிகிறது. 
               |