2.4 உலா இலக்கியம்

சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க மற்றோர் இலக்கிய வகையாகிய உலா இலக்கியம் பற்றிப் பார்ப்போம்.

பெயர்க்காரணம்

பாட்டுடைத் தலைவன் உலா (ஊர்வலம்) வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை ஆதலால், இதற்கு உலா இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

2.4.1 இலக்கணம்

உலா இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம் ஆகிய பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. இந்தப் பாட்டியல் நூல்கள் கூறும் விளக்கங்களின் அடிப்படையில் உலா இலக்கியம் பற்றிய விளக்கங்களைக் காண்போம்.

இருநிலைகள்

உலா இலக்கியம் இரு நிலைகளாகப் பாகுபடுத்தப்படும்.

1) முன் எழு நிலை 2) பின் எழு நிலை

உலா இலக்கியப் பாடுபொருள் நீண்டு செல்லும் இயல்பு உடையது. எனவே, இந்த இரு நிலைகளாகப் பகுத்துப் பார்க்கலாம் என்று பன்னிரு பாட்டியல் கூறுகின்றது.

முதல் நிலை அல்லது முன் எழு நிலை என்ற முதல் பகுதியில்; பாட்டுடைத் தலைவனுடைய குடிப்பெருமை, அவன் நீதி செய்யும் முறை, அவனுடைய மரபு, அவன் பிறருக்குக் கொடை வழங்கும் தன்மை, உலாச் செல்வதற்காக விடியல் காலையில் எழுந்து நீராடல், அணிகலன்களை அணிதல், அவனை நகர மக்கள் வரவேற்றல், பாட்டுடைத் தலைவன் நகர வீதிகளில் (தெருக்களில்) உலா வருதல் என்பன இடம்பெறும்.

பின் எழுநிலை என்ற இரண்டாவது பகுதியில், பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது ஏழு வகையான பருவ நிலைகளில் உள்ள பெண்கள் அவனைக் கண்டு காதல் கொண்டு மயங்குதல் கூறப்படும்.

2.4.2 பாட்டுடைத் தலைவன்

பாட்டியல் நூல்கள் கூறும் விளக்கங்கள் மூலம்

1)
மன்னர்கள்
2)
கடவுளர்கள்
3)
சான்றோர்கள் (மக்களில் சிறந்தவர்கள்)
4)
குழந்தைப் பருவம் உடைய தலைமகன் அல்லது இளமைப் பருவம் உடைய தலைமகன்

ஆகியோருள் ஒருவர் உலா வரும் பாட்டுடைத் தலைவராக அமையலாம் என்பது தெரியவருகின்றது.

ஏழு பருவப் பெண்கள்

பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது அவனை ஏழு பருவப் பெண்களும் கண்டு காதல் கொள்வதாகப் பாடப்படும். ஏழு பருவப் பெண்களும் அவர்களுடைய வயதும் பின்வருமாறு அமையும்.

வயது
பேதைப் பருவப் பெண்
5
பெதும்பைப் பருவப் பெண்
7
மங்கைப் பருவப் பெண்
11
மடந்தைப் பருவப் பெண்
13
அரிவைப் பருவப் பெண்
19
தெரிவைப் பருவப் பெண்
25
பேரிளம் பெண்
31

உலா வரும் வாகனம் (ஊர்தி)

உலா வரும் பாட்டுடைத் தலைவன் ஏறி வரும் வாகனமும் பாட்டியல் நூல்களில் சுட்டப்படுகின்றன.

பாட்டுடைத் தலைவன் யானை, குதிரை, தேர், சிவிகை (பல்லக்கு) ஆகிய ஏதேனும் ஓர் ஊர்தியில் ஏறி உலா வருவான்.

2.4.3 தோற்றமும் வளர்ச்சியும்

மற்ற இலக்கிய வகைகளைப் போலவே உலா இலக்கிய வகையின் தோற்றத்திற்குரிய கருக்கள் இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் காணப்படுகின்றன.

தொல்காப்பியத்தில்

தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை இயல் 83-ஆம் நூற்பாவாகிய,

ஊரொடு தோற்றமும் உரித்துஎன மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான

என்பதே உலா இலக்கிய வகையின் இலக்கணம் - கரு என்பர். பாடாண் திணையில் (பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது பாடாண் திணை) ஊரில் உள்ள பெண்கள் தலைவனிடம் காதல் கொண்டதாகப் பாடப்படும் பொருண்மையும் அடங்கும் என்பது தொல்காப்பிய நூற்பா மூலம் தெரியவருகின்றது. இதுவே, கருவாக அமைந்து பிற்காலத்தில் உலா இலக்கிய வகையாக மாறியது என்று எண்ணலாம்.

சிலப்பதிகாரத்தில்

சிலப்பதிகாரத்தில் உலா பற்றிய செய்தி இடம்பெறக் காணலாம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்வதற்குரிய கல்லைக் கொண்டு வருவதற்காக வட நாடு செல்கின்றான். அங்கு, கனகன், விசயன் ஆகிய மன்னர்களுடன் போரிட்டு வெற்றி பெறுகின்றான். பின் தன் நாடு திரும்புகின்றான். அப்போது அவனுடன் அரசு அதிகாரிகள் பலர் வருகின்றனர். யானையின் மீது ஏறி வருகின்றான். மக்கள் எல்லோரும் அவனை வாழ்த்துகின்றனர். இந்த இடத்தில் உலா இலக்கிய வகையின் கூறு இடம் பெறக் காணலாம்.

பக்தி இலக்கியத்தில்

காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், கருவூர்த்தேவர் முதலியோர் இயற்றியுள்ள திருப்பாடல்களில் உலா பற்றிய செய்தி இடம்பெறக் காணலாம். இவர்கள் தெருக்களில் இறைவன் உலா வருவதாகக் காட்டுகின்றனர். சான்றாக,

தேர்கொள் வீதி விழவுஆர் திருப்புன்கூர் (சம்பந்தர், 289)

(விழவு = திருவிழா)

என்ற அடியின் மூலம் இறைவன் தேரில் உலா வரும் செய்தியை அறிய முடிகின்றது.

இவ்வாறு, இலக்கணத்திலும் இலக்கியங்களிலும் காணப்படும் செய்திகளைக் கருவாகக் கொண்டு, உலா என்ற தனியான ஓர் இலக்கியம் தோன்றியது எனலாம்.

முதல் உலா இலக்கிய நூல்

சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான உலா என்ற நூலே முதல் உலா இலக்கிய நூல் ஆகும். இதைத் தொடர்ந்து பல்வேறு உலா நூல்கள் தோன்றியுள்ளன. ஒட்டக்கூத்தரின் மூவருலா இலக்கியச் சிறப்பு மிக்கது. உலா இலக்கியம் தமிழ்மொழிக்கே உரிய ஓர் இலக்கிய வகையாகும்.

2.4.4 இலக்கியச் செய்திகள்

பாட்டுடைத் தலைவன் ஏதேனும் ஒரு நாளில் தனக்குரிய வாகனத்தில் உலா வருவான். உலா வரும் நாள் அன்று காலையில் எழுந்து நீராடி அணிகலன்களை அணிவான். பல்வேறு மக்களும் கருவிகளும் இசைக் கருவிகளும் உடன் வரத் தலைவன் உலா வருவான்.

உலா வரும் தலைவனை ஏழு பருவப் பெண்களும் காண்பர். அவன் அழகில் மயங்குவர். அவரவர் வயதுக்குத் தக்கவாறு தலைவனைக் கண்டு மயங்கிப் புலம்புவர். தலைவன் அழகில் மயங்கி, அவன் யாராக இருக்கும் என ஐயுறுவர். பின் அவன் இவன்தான் என்று சந்தேகம் நீங்கி உறுதியாக எண்ணுவர். நிலவு, தென்றல் போன்றவை காதல் கொண்ட பெண்களை வருத்தும். எனவே, அவர்கள் அவற்றை இகழ்ந்து கூறுவார்கள். தோழியர்கள் காதல் கொண்டு மயங்கும் பெண்களின் மயக்கத்தைப் போக்கப் பல நிலைகளில் முயல்வார்கள். இத்தகைய செய்திகளை உள்ளடக்கியதாக உலா இலக்கியம் காணப்படும். பாட்டுடைத் தலைவனின் இயல்புகளுக்கு ஏற்றவாறு இச் செய்திகள் அமையும்.