2.5 பள்ளு இலக்கியம்

சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்.

2.5.1 பெயர்க் காரணம்

பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் ஆதலால் இதற்குப் பள்ளு என்ற பெயர் ஏற்பட்டது. பள்ளர்கள் என்போர் யாவர்? உழவுத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர்கள் ஆவர். இவர்களில் பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர் என அழைக்கப்படுவர். எனவே, வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனலாம்.

2.5.2 தோற்றமும் வளர்ச்சியும்

இனி, பள்ளு என்ற இலக்கிய வகையின் தோற்றம் குறித்துச் சிறிது காண்போம்.

சிலப்பதிகாரத்தில் உழவர் பாடல்கள்

சிலப்பதிகாரம் மருத நில மக்கள் வாழ்க்கையை, அதாவது வயலும் வயலைச் சார்ந்த இடத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கையைக் கூறுவதைக் காணமுடிகின்றது. அப்போது இளங்கோவடிகள் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்பனவற்றைக் குறிப்பிடுகின்றார். (நாடுகாண் காதை, 125 :134- 137)

ஏர்மங்கலம் என்பது யாது? முதன் முதலாக ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். இவ்வாறு, பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம் எனப்படும்.

அடுத்து, முகவைப் பாட்டு என்பது பற்றிப் பார்ப்போம். வயல்களில் நெற் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுப்பர். அவற்றை வீட்டிற்குச் சுமந்து வந்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்படும். எனவே, சிலப்பதிகாரம் காட்டும் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்பன உழவர்களின் வாழ்க்கையையே காட்டுகின்றன எனலாம்.

பள்ளு இலக்கியத்தின் தோற்றம்

இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய வழக்காறுகளும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி செய்திருக்கலாம். பழங்காலத்தில் உழவுத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர், பள்ளியர்களின் வாழ்க்கையை ஒட்டிய கூத்து வகைகள் பாட்டும் தாளமும் பொருந்தச் சாதாரண மக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தன. இந்த ஆட்டங்களையும் பாடல்களையும் கவனித்து மகிழ்ந்த புலவர்கள் அவற்றை இலக்கியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம். அதன் விளைவாகவே பள்ளு இலக்கியம் தோன்றியது என்றும் கருதுவர்.

இவ்வகையில், பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் அமைகின்றது. இந்நூல் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது என்பர். அதன் பின்னர் ஞானப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப்பள்ளு, வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீகாழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, கண்ணுடை அம்மை பள்ளு, திருப்புன வாயிற் பள்ளு, கதிரை மலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, குற்றாலப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு, போரூர்ப் பள்ளு, இருப்புலிப் பள்ளு, திருவிடை மருதூர்ப் பள்ளு, புதுவைப் பள்ளு போன்ற பல நூல்கள் தோன்றின.

2.5.3 இலக்கணம்

பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. ஆனால், நவநீதப் பாட்டியலில் பிற்காலத்தில் சேர்க்கப்பெற்றுள்ள பல பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் நான்கு பாடல்களில் உழத்திப் பாட்டு என்றால் என்ன என்று விளக்கப்படுகின்றது. உழத்திப் பாட்டைக் குறிப்பிட்டுவிட்டு இதைப் பள்ளும் என்பர் எனக் கூறுகின்றன.

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் தொகை அகராதி என்ற பிரிவில் சிற்றிலக்கிய வகைகள் பலவற்றின் விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் உழத்திப் பாட்டு என்பதன் விளக்கமும் உள்ளது.

வேறு பெயர்கள்

பள்ளு என்ற இலக்கிய வகைக்குப் பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளேசல், பள்ளிசை என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்களால் பள்ளு என்ற இலக்கிய வகை நடித்தற்கு உரியது; பாடுவதற்கு உரியது; இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியது என்பன தெரிய வருகின்றன.

2.5.4 செய்திகள்

விவசாயத் தொழில் செய்யும் உழவர்கள், உழத்தியர்கள் ஆகியோரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாக, இனிமையாக, சுவையாகக் கூறுவதே பள்ளு இலக்கியத்தின் நோக்கம் ஆகும். இவ்வகையில் பள்ளு இலக்கியத்தின் செய்திகள் பின்வருமாறு அமைகின்றன.

ஏராளமான நிலங்களைக் கொண்ட ஒரு செல்வனின் பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரை பரம்பரையாக விவசாய வேலை செய்து வருகின்றான். அவனுக்கு இரண்டு மனைவியர். பள்ளன் தன் விவசாய வேலைகளைக் கவனிக்காது இளைய மனைவியிடம் மயங்கிக் கிடக்கின்றான். மூத்த மனைவியைக் கவனிக்கவில்லை. அப்போது நல்ல மழை பெய்கின்றது. ஆற்றில் தண்ணீர் நிரம்ப வருகின்றது. பள்ளனோ விவசாய வேலைகளைச் செய்யாமல் இளைய மனைவியின் வீட்டிலேயே இருக்கின்றான். இதை மூத்த மனைவி பண்ணையிடம் கூறுகின்றாள். பண்ணைக்காரன் கோபம் கொள்கின்றான். இதை அறிந்த பள்ளன் பயந்து போய் பண்ணையிடம் வருகின்றான். பண்ணை பள்ளனிடம் விவசாய வேலைகள் பற்றிக் கேட்கிறான். பள்ளன் கூறுகின்றான். பின், பண்ணையின் ஆணைப்படி வயல்களில் ஆட்டுக் கிடை வைக்க இடையனை அழைத்து வருகின்றான். பின், பள்ளன் இளைய மனைவியின் வீட்டிற்குச் செல்கின்றான். இதை அறிந்த மூத்த மனைவி மீண்டும் பண்ணையிடம் சென்று கூறுகின்றாள். இதை அறிந்த பள்ளன் விவசாய வேலைகளைச் செய்வது போல் நடிக்கின்றான். இதனால், பண்ணை அவனைத் தண்டிக்கும் பொறி ஆகிய தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கின்றான். இதனால் பள்ளன் வருந்துகின்றான். இதைக் கண்ட மூத்த மனைவி மனம் வருந்துகின்றாள். பள்ளனை மீட்கின்றாள். விடுபட்ட பள்ளன் ஒரு நல்ல நாளில் வயல்களை உழச் செல்கின்றான். பள்ளனை ஒரு மாடு முட்டி விடுகின்றது. அதனால் பள்ளன் மயங்கி விழுகின்றான். பின் மயக்கம் நீங்கி வயலை உழுகின்றான். சில நாட்கள் சென்றதும் பயிர் நன்கு விளைகின்றது. அவன் மூத்த மனைவிக்கு உரிய பங்கு நெல்லைச் சரியாகக் கொடுக்கவில்லை என அவள் பள்ளர்களிடம் முறையிடுகின்றாள். இதை இளைய மனைவி கேட்கின்றாள். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் இருவரும் சமாதானம் அடைகின்றனர். பள்ளனுடன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவையே பெரும்பாலான பள்ளு நூல்களின் செய்திகள் ஆகும்.

2.5.5 பண்புகள்

பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்.

சான்றாக, முக்கூடற்பள்ளு என்ற நூலை எடுத்துக் கொள்வோம். இது ஒரு வைணவ சமய நூல். பாட்டுடைத் தலைவன் அழகர். திருமாலின் மற்றொரு பெயர் இது. பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.

சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி என்பது ஆகும்.

இவ்வாறு, பள்ளு என்ற இலக்கியம் திகழக் காணலாம்.