|   3.2 
                தமிழ் 
              கண்டசரம், தோள்வளை போன்ற 
                அணிகள் எல்லாம் உன் அலங்காரத்திற்கு (அணி இலக்கணத்திற்கு) ஈடுஆகுமோ? 
                உன்னைச் சொல்லும் தோறும் வளர்வாய். பொன்னோ உரைக்கும் தோறும் தேயும். 
                பிறபொருள்களைக் கன்னக் கோலால் சுவரில் ஓட்டைசெய்து கவர்வர். உன்னைக் 
                கள்வர்களால் கவர முடியாது. மண்ணில் புகழுடன் வாழவும், அவ்வாறு வாழ்ந்து 
                வானுலகம் சென்று தேவர்கள் உருவாக மாறுவதற்கும் தமிழ்ப் பாடல்களைப் 
                பெற்ற கொடை வள்ளல்களுக்கு மட்டுமே முடியும். இவ்வாறு மற்ற செல்வங்களை 
                விடவும் சிறந்த செல்வம் தமிழ்ச் செல்வமே என்று புகழ்கின்றாள். 
              
              3.2.1 கடவுளும் தமிழும் 
              தமிழே! உன் சங்கத்தால் 
                இறைவன் உயர்ந்தாரா? அல்லது சிறப்புமிக்க அவரால் நீ உயர்ந்தாயா? கலைமகளின் 
                கைகளில் சுவடியாக நீ இருக்கின்றாயா? அல்லது உன் மீது கலைமகள் இருக்கின்றாளா? 
                திருமாலை நீ தொடர்ந்தாயா? அல்லது திருமால் பாயுடன் உன்னைத் தொடர்ந்தாரா? 
                அகத்திய முனிவர் கேட்கும்படி முருகப்பெருமான் உன்னைக் கூறினாரா? 
                அவரை நீ கூறினாயா? சிவபெருமான் உனக்குப் பொருளாய் நின்றாரா? நீ அவருக்குப் 
                பொருளாய் வந்தாயா? எனத் தலைவி கேட்பதன் மூலம் தமிழுக்கும் சிவபெருமான், 
                முருகன், திருமால், கலைமகள் ஆகியோருக்கும் உள்ள உறவுகள் வெளிப்படுத்தப் 
                படுகின்றன. 
              தருமிக்குப் பொற்கிழி 
                அளித்தது, நக்கீரருடன் விவாதம் செய்தது, பாணபத்திரருக்குக் கடிதம் 
                கொடுத்தது, அகப்பொருள் இலக்கணம் இயற்றியது. இடைக்காடனாரின் பின்னால் 
                வடமதுரைக்குச் சென்றது, பாணபத்திரர்க்காக விறகு விற்றது, முதலியவற்றைத் 
                தலைவி கூறிச் சோமசுந்தரக் கடவுளுக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள தொடர்புகளை 
                விளக்குகின்றாள். 
              
              3.2.2 பெண்களும் தமிழும் 
              நீ ஆண் பனையைப் பெண் பனை 
                ஆக்கினாய். (திருஞான சம்பந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி). காரைக்கால் 
                அம்மையார், ஒளவையார் என வந்து உதித்தாய். திருநாவுக்கரசரின் தமக்கை 
                ஆகிய திலகவதியாருடன் பிறந்தாய். பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாருக்கு 
                ஆசிரியராய்ப் பிறந்தாய். இசைஞானியாருக்கு மகவாக (சுந்தரராக)த் தோன்றினாய். 
                சிங்கடியார்க்கும் வனப் பகையார்க்கும் தந்தையாக விளங்கினாய். (சுந்தரர் 
                தம் தேவாரத்தில் இவ்விரு பெண்களின் தந்தையாகத் தம்மைக் குறிப்பிடுகிறார்). 
                இவ்வாறு பெண்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவைத் தலைவி போற்றுகின்றாள். 
               
              
              3.2.3 தலைவியும் தமிழும்  
              பிற பொருட்கள் தூது அனுப்ப 
                ஏற்றவை அல்ல எனக் கூறும் தலைவி தமிழிடம் வேண்டுகின்றாள். 
              என்னுடைய துன்பங்களை நீ 
                கண்டு இரங்குவது நீதி. அதை விட்டு உன் பெருமைகளை நானோ கூறுவேன் !கற்க கசடறக் கற்பவை 
                கற்றபின் 
                நிற்க அதற்குத் தக 
              என்று எல்லாருக்கும் அறிவுரை கூறி அவர்களைக் கரையேற்றும் வல்லமை 
                படைத்த உன்னிடம் கூறுவதற்கு நான் வல்லமை படைத்தவளோ? சிவபெருமானைப் 
                பரவை நாச்சியாரிடம் சுந்தரருக்காகத் தூது அனுப்பி வைத்தாய். எனினும் 
                உன்னிடம் தூது சொல்லி வா என்பேன் என்று தலைவி தன் எண்ணத்தைக் கூறுகின்றாள்.  
              பெண்கள் எல்லாரும் வாழப் 
                பிறந்த நீ என் மனத்தின் துன்பங்களை எல்லாம் அகற்ற வழி செய்வாயாக 
                என வேண்டுகின்றாள். 
              பெண்கள்எல் லாம்வாழப் பிறந்தமையால் என்மனத்தில் 
                புண்கள்எல் லாம்ஆறப் புரிகண்டாய் 
                 (கண்ணி, 
                106) 
              என்கிறாள். 
              19291 என்ற எண்ணிக்கையைக் 
                கொண்ட செய்யுள் தொடைகளை உடைய நீ, சொக்க நாதரிடம் இருந்து எனக்கு 
                ஒரு மாலை வாங்கி வந்து உதவ மாட்டாயோ? என்று தன் எண்ணத்தைத் தமிழிடம் 
                வெளிப்படுத்துகின்றாள்.  
              பண்ணியபத் தொன்பதி 
                னாயிரத்து இருநூற்று 
                எண்ணியதொண் ணூற்றுஒன்று எனும்தொடையாய் - நண்ணி 
                ஒருதொடை வாங்கி உதவாயோ...... 
                 (கண்ணி, 113-114)   
              (தொடை 
                = செய்யுள்தொடை, மாலை) 
              என்கிறாள்.  
              திருக்கொள்ளம் பூதூர் 
                வெள்ளத்தை நீ கடந்தாய். உன்னை நான் வணங்கினேன். நான் என் காமம் ஆகிய 
                வெள்ளத்தைக் கடக்கும்படி நீ செய்யமாட்டாயா? (திருக்கொள்ளம் பூதூரில் 
                வெள்ளத்தைக் கடந்த நிகழ்ச்சி ஞானசம்பந்தர் வாழ்க்கையில் இடம் பெற்றது.) 
              சைனர்களைக் கழு ஏறுமாறு நீ செய்தாய். என்னை 
                வருத்தும் மன்மதனையும் அவ்வாறு செய்ய மாட்டாயா?  
              பாண்டிய மன்னனின் கூனை 
                நிமிர்த்தாய். மன்மதனின் கரும்புவில்லின் கூனை (வளைவை) நிமிர்த்த 
                மாட்டாயா?  
              பாண்டிய மன்னனின் வெப்பு 
                நோயை நீக்கினாய். என் காம வெப்பத்தை நீக்கமாட்டாயா? 
              (அப்பர் வாழ்வில்) சமணர்கள் 
                இட்ட நஞ்சை அமுதம் ஆக்கினாய். நீ என் உணவாகிய நஞ்சை அமுதம் ஆக்க 
                மாட்டாயோ? 
              தீயில் இருந்த போதும் 
                வேகாது இருந்தாய்.(பதிகம் எழுதப்பட்ட ஓலை எரியாதிருத்தல்). என்னைக் 
                காமம் ஆகிய தீயில் வேகாமல் காக்கமாட்டாயோ? 
              அப்பரைக் கடலில் மூழ்காதபடி 
                காத்தாய். என்னைக் கடல் வருத்தாமல் இருக்கச் செய்ய மாட்டாயோ? 
              ஆண் பனையைப் பெண் பனை 
                ஆக்கினாய். அந்தப் பனையில் இருந்து என்னை வருத்தும் அன்றில் பறவையை 
                வேறு பறவை ஆக்கமாட்டாயோ? 
              இறந்த பெண்ணின் எலும்பைப் 
                பூம்பாவை ஆக்கினாய். அழகு இழந்த என்னையும் அழகு உடையவளாக மாற்ற மாட்டாயோ? 
                என்று அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியவர்களின் செயல்களை ஒப்பிட்டுத் 
                தலைவி வேண்டுகிறாள். 
              இவ்வாறு, தூது அனுப்பும் 
                தலைவி தூது விடும் பொருளாகிய தமிழ்மொழியின் பெருமைகளைக் கூறுவதாகக் 
                காட்டப்படுகின்றது.  
               
                
                   
                     
                    
                         
                          |    
                              தன் மதிப்பீடு : வினாக்கள் - I    | 
                         
                         
                          | 1. | 
                             
                              தமிழ்விடு தூது நூலில் யாரிடம் தூது அனுப்பப்படுகிறது? 
                              | 
                          விடை | 
                         
                         
                          | 2. | 
                             
                              தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் யார்?   | 
                          விடை | 
                         
                         
                          | 3. | 
                             
                              தமிழ் மொழியின் 12 பருவங்களாக எவை எவை கூறப்படுகின்றன? 
                              | 
                          விடை | 
                         
                         
                          | 4. | 
                             
                              பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பருவங்கள் எத்தனை? 
                              | 
                          விடை | 
                         
                         
                          | 5. | 
                             தமிழ் 
                              மொழியின் பட்டத்துப் பெண்களாகக்
                              கூறப்படுவன யாவை?   | 
                          விடை | 
                         
                         
                          | 6. | 
                             தமிழ் 
                              மொழியின் புரோகிதர்களாகக் கூறப்படுவன யாவை?   | 
                          விடை | 
                         
                        | 
                   
                 
                |