|   3.5 
                தூதும் தலைவியும் 
              தூது அனுப்பும் தலைவி, 
                தூதுப் பொருளிடம் முதலில் தூது செல்லக் கூடிய வழியைச் சொல்கிறாள். 
                அதன் பின்னர் தூதுச் செய்தியை எவ்வாறு கூற வேண்டுமென்று கூறுகிறாள். 
                இறுதியில் தன் துன்ப நிலையையும் கூறித் தூது விடுகிறாள். 
              
              3.5.1 வழிகூறுதல் 
              தூது அனுப்பும் தலைவி 
                தூதுப் பொருள் ஆகிய தமிழிடம் தலைவனாகிய சோம சுந்தரக் கடவுளைக் காண்பதற்குச் 
                செல்லும் வழியைக் கூறுகின்றாள். 
              வையை ஆற்றில் சென்று மூழ்கி 
                நீராட வேண்டும். இலக்கண நூல்களைக் கற்றவர்களைப் போன்ற ஆழமான அகழிகளைக் 
                கடந்து செல்ல வேண்டும். வேதங்களைப் போன்ற வானம் வரை உயர்ந்து காணப்படும் 
                மதில்களைக் கடக்க வேண்டும். பின்பு ஸ்மிருதி (தரும சாத்திரம்), புராணம், 
                கலை போன்று வேறு வேறாகக் காணப்படும் தெருக்களைச் சுற்றி வரவேண்டும். 
                சிவாகமம் போன்று முத்திக்கு வித்தாக விளங்கும் கோயிலின் உள்ளே புகவேண்டும். 
                கோபுரம், மண்டபம் ஆகியவற்றில் தேன் உண்ணும் வண்டைப் போன்று செல்ல 
                வேண்டும். மாளிகைகள், பத்தியறைக் கட்டளைகள் (பத்தி = வரிசை) ஆகியவற்றைப் 
                பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். பின் இறைவனைக் காணவேண்டும் என்று 
                வழி கூறுகின்றாள். இச்செய்திகள் இடம்பெறும் கண்ணிகளைக் காண்போமா?  
              
                பின்போய் எமனோடப் 
                பேர்ந்துஓடும் வையையிலே 
                முன்போய் எதிர்போய் முழுகியே - அன்போடே 
                தாழ்ந்துநீள் சத்தம் தனைக்கற்றார் உள்ளம்போல் 
                ஆழ்ந்த அகழி அகன்றுபோய்ச் - சூழ்ந்துஉலகில் 
                மேன்மேல் உயர்ந்துஓங்கு வேதம்போல் மேலாக 
                வான்போல் உயர்ந்த மதில்கடந்து - போனால் 
                மிருதிபுரா ணம்கலை போல்வேறு வேறாக 
                வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை 
                மோதும்சி வாகமம்போல் முத்திக்கு வித்தாக 
                ஓதும் திருக்கோயில் உள்புகுந்து - நீதென்பால் 
                முன்னே வணங்கி ............... 
                 - வீறு உயர்ந்த 
                கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன்ஒருநாள் 
                மாமேகம் சேர்ந்ததுபோல் மண்டபமும் - பூமேவும் 
                மட்டுஅணையும் வண்டுஎனப்போய் மாளிகைப் பத்தியறைக் 
                கட்டளையும் கண்டு களிகூர்ந்தே (199-207) 
                
              (பேர்ந்து 
                = நீங்கி; சத்தம் 
                = இலக்கண நூல்;  மிருதி = தர்மசாத்திரம்; 
                சூழ்வந்து = சூழ்ந்து வந்து;  
                இருவினை = நல்வினை, தீவினைகள்; வித்தாக 
                = அடிப்படை ஆகிய;  தென்பால் 
                = தெற்குப் பக்கம்; தன் 
                = தன்னை; கூடல் = 
                மதுரை; மா = பெரிய; மட்டு = வண்டு; 
                அணையும் = உண்ணும்; களிகூர்ந்து = மகிழ்ச்சி 
                மிகுந்து) 
              
              3.5.2 செய்தி கூறுதல்  
              தூது செல்லும் தமிழிடம் 
                தலைவி தலைவனாகிய இறைவனிடம் தன் தூதுச் செய்தியைக் கூறவேண்டிய முறையையும் 
                விளக்கிக் கூறுகின்றாள். 
              காலையில் இறைவனின் பள்ளி 
                எழுச்சியில் முன் அழகு உடைய தேவர்கள் வணங்குவர். அவர்களுடன் சேர்ந்து 
                நீயும் போற்றி வணங்க வேண்டும். வேத ஆகமங்களை ஓதுவோரை முன்னே அனுப்பிப் 
                பின் நீ தோன்றி வணங்க வேண்டும். அரிய ஆற்றல் உடைய ஆதி சைவர்களிடம் 
                உரிய பொருட்களைச் சேர்ப்பிக்க வேண்டும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், 
                சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரங்களையும், திருவாசகம், திருவிசைப்பா, 
                திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து கவிகளையும் பாட வேண்டும். 
                பின் செய்தியைக் கூறவேண்டும் என்கிறாள். இது, 
              
                 
                - காலைத் 
                திருஅனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து 
                உருஅனந்த தேவர் உடனே - மருவிஎதிர் 
                போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித் 
                தோற்றரவு செய்து துதித்ததன்பின் - ஆற்றல் 
                அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர் தம்பால் 
                உரிய படையா ஒதுங்கி - அருமையுடன் 
                மூவர் கவியே முதல்ஆம் கவிஐந்தும் 
                மூவர்ஆய் நின்றார்தம் முன்ஓதி 
                (கண்ணி : 243-248) 
                
              திருஅனந்தல் = 
                பள்ளி எழுச்சி; சேவிக்கும் 
                = வணங்கும்;  உரு அனந்த தேவர் 
                = அழகு உடைய தேவர்;  மருவி = 
                நெருங்கி; தோற்றரவு = 
                தோன்றுதல்; உரிய = 
                உரியபொருள்களை; படையா = 
                சேர்ப்பித்து;  ஓதி = 
                பாடி; மூவராய் நின்றார் = 
                பிரமன், திருமால், சிவன் என மூன்று வடிவம் கொண்ட இறைவன்.) 
              எனக் காட்டப்படுகிறது. 
              
              3.5.3 தூது வேண்டுதல் 
              இவ்வாறு, தமிழ்மொழியைப் 
                போற்றிப் புகழ்கிறாள். தலைவி, தூது பெறும் தலைவனாகிய இறைவனின் பெருமைகளைக் 
                கூறுகின்றாள். தூது செல்லும் தமிழ் செய்யக் கூடாதவற்றையும் கூறுகின்றாள். 
                என்ன என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இடுகிறாள். தலைவனைக் காணச் 
                செல்லும் வழியைக் கூறுகின்றாள். இறுதியில் தன் துன்ப நிலைகளை எல்லாம் 
                கூறித் தூது சென்று வருமாறு வேண்டுகின்றாள்: 
               
                
                   
                    அந்தரலோ கத்தின்மே லானதிரு 
                      ஆலவாய்ச் 
                      சுந்தரமீ னவன்நின் சொல்படியே - வந்து 
                      துறவாதே சேர்ந்துசுக ஆனந்தம் நல்க 
                      மறவாதே தூது சொல்லி வா 
                       (கண்ணி 
                        : 267-268)  | 
                   
                 
               
              (அந்தரம் 
                = மேல; லோகம் = உலகம்;  
                சுந்தர மீனவன் = சுந்தர பாண்டியன்;  
                சுகஆனந்தம் = இன்பம், மகிழ்ச்சி; நல்க 
                = தர) 
              மேல் உலகிற்கும் மேலான 
                இறைவன் உன்னுடைய சொல்படி இங்கு வந்து என் துன்பங்களை நீக்கி, இன்பம் 
                தர மறவாதவாறு நீ தூது சொல்லி வரவேண்டும் என்று தலைவி தமிழிடம் வேண்டுகின்றாள். 
                |