4.1 சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் பெயர்க்காரணம், ஆசிரியர், பாட்டுடைத்தலைவர், நூலின் அமைப்பு, நூலில் கூறப்படும் செய்திகள் என்பன பற்றி இனிக் காணலாம்.

 • பெயர்க்காரணம்
 • தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று தஞ்சாவூர், தஞ்சாவூரை முன்பு பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுள் சரபோஜி மன்னர் என்பவரும் ஒருவர். இந்த சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட குறவஞ்சி நூல் ஆகையால் இதற்குச் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.

  4.1.1 நூலாசிரியர்

  சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் ஆவார். கொட்டையூர் தமிழ்நாட்டில் கும்பகோணம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இந்த ஊருக்கு ஏரண்ட புரி என்ற வேறு பெயரும் உண்டு. ஏரண்டம் என்பதற்கு ஆமணக்கு என்ற கொடியின் கொட்டை என்பதும் பொருள் ஆகும். ஆசிரியரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். இவர் சிறந்த சிவபக்தர் கொட்டையூருக்குத் தெற்கில் உள்ள ஊர் சத்திமுற்றம். அங்குள்ள இறைவன் பெயர் சிவக்கொழுந்து, இந்த இறைவன் பெயரையே தன் மகனுக்கும் இட்டார்.

  சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார். இவர் அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார். அங்கு இவர் பல மருத்துவ நூல்களையும் கவிதை வடிவில் இயற்றினார்.

  கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய இலக்கிய நூல்கள்

  1)
  கொட்டையூர் உலா
  2)
  திருவிடைமருதூர்ப் புராணம்
  3)
  திருமண நல்லூர்ப் புராணம்
  4)
  சரசக் கழிநெடில்
  5)
  கோடீச்சுரக் கோவை
  6)
  தஞ்சைப் பெருவுடையார் உலா
  7)
  ஸ்ரீ சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்.

  இவ்வாறு, பல சிறப்புகளை உடைய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்களில் ஒன்றே சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும்.

  4.1.2 பாட்டுடைத் தலைவர்

  இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சரபோஜி மன்னர். இவரைப் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.

 • வரலாறு
 • முகலாய மன்னர்களின் ஆதிக்க ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் சிவாஜி என்ற மராட்டிய மன்னர். சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி. இவர் ஏகோஜி என்றும் அழைக்கப்பட்டார். ஏகோஜி தஞ்சாவூரில் 1674-ஆம் ஆண்டில் மராட்டிய அரசை நிறுவியவர் ஆவார். அன்று முதல் 180 ஆண்டுகளில் 14 மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டு வந்துள்ளனர்.

  மராட்டிய மன்னர்களுள் ஒருவர் துளஜாஜி. இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ஓர் ஆண் குழந்தையை மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்குத் தன் விருப்பக் கடவுளின் பெயரை இட்டார். விருப்பக் கடவுள் திரிபுவனம் சரபேசர். இதைச் சரபோஜி என்று அந்தக் குழந்தைக்கு இட்டார். ஆனால், இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் மூன்று மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே இவர் நான்காம் சரபோஜி ஆவார்.

  மராட்டியர் குலம் போன்ஸ்லே அல்லது போஸ்லே என்று அழைக்கப்படும். இது தமிழில் போசல குலம் என்று வழங்கப்படும். சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், இவருக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. கலைகளில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. எனவே, ஆங்கிலக் கம்பெனியாருடன் உடன்பாடு செய்துகொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.

 • புலமை
 • சரபோஜி மன்னர் தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன், வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளை நன்கு கற்றார். தன் தாய்மொழி ஆகிய மராட்டிய மொழியிலும் சிறந்த திறமை உடையவராக விளங்கினார்.

 • பணிகள்
 • தஞ்சாவூரில் சரசுவதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உடையவராகச் சரபோஜி மன்னர் திகழ்ந்தார். இவரே, இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் ஆவார்.

  4.1.3 நூலின் - அமைப்பு

  இனி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் அமைப்பைப் பார்ப்போம்.

  நூலின் முதற் பகுதியில் சிறப்புப் பாயிரம், காப்புச் செய்யுள், கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை ஆகியன இடம்பெறுகின்றன.

  பின்னர், பாட்டுடைத் தலைவராகிய சரபேந்திரர் உலா வருகின்றார். அவ்வுலாவைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த மதனவல்லி என்ற பெண் பார்க்கிறாள். தலைவர் மேல் காதல் கொள்கிறாள். உலா மதனவல்லியைக் கடந்து செல்கின்றது. மதனவல்லி காதல் துன்பத்தால் வருந்துகின்றாள். தன் காதலைத் தெரிவித்துத் தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகின்றாள். அப்போது குறத்தி வருகின்றாள். குறத்தியை அழைத்துத் தலைவி குறி கேட்கின்றாள். அப்போது குறத்தியைத் தேடி அவள் கணவன் ஆகிய சிங்கன் என்பவன் வருகின்றான். அவன் குறத்தியைக் காணாது வருந்துகின்றான். இறுதியில் குறத்தியைத் தேடிக் கண்டுபிடிக்கின்றான். மகிழ்ச்சி அடைகின்றான். இறுதியில் மங்களம் என்ற பகுதி இடம்பெறுகின்றது.