|    
                4.4 குறத்தி வருகை  
               இவ்வாறு 
                தூது சென்ற தன் தோழி வராமையால் மதனவல்லி வருந்திக் கொண்டிருக்கும் 
                பொழுது குறத்தி ஒருத்தி வருகின்றாள். இந்த இடத்தில் குறத்தியின் 
                தோற்றம் வருணிக்கப்படுகின்றது. மை பூசிய கண்கள். கச்சு அணிந்த மார்புகள். 
                மென்மையான ஆடை அணிந்துள்ளாள். தோடு என்ற அணி அணிந்துள்ள செவிகள். 
                புலிப்பல் தாலி அணிந்துள்ளாள். வலக்கையில் மாத்திரைக் கோல் வைத்துள்ளாள். 
                இடையில் கூடை வைத்துள்ளாள். நெற்றியில் பொட்டு இட்டுள்ளாள். மன்னன் 
                சரபோஜியைப் போற்றிப் புகழ்ந்து பரிசுகள் பெற்று வருகின்றாள் என்று 
                குறத்தியின் வருகை கூறப்படுகிறது.  
              
              4.4.1 வருகையைத் தோழி அறிவித்தல் 
              குறி கூறும் குறத்தி வருவதைத் 
                தோழி மதனவல்லியிடம். 
               
                
                   
                     குறத்தி வருகின்றாள் அம்மா 
                      - குறி சொல்லும் 
                      குறத்தி வருகின்றாள் அம்மா | 
                   
                 
               
              என்று கூறுகின்றாள். 
              
                
                மதனவல்லி குறத்தியை அழைத்து 
                  வரக் கூறுதல்
              
                
              தோழி குறத்தி வருவதாகக் 
                கூறியதைக் கேட்ட மதனவல்லி குறத்தியை அழைத்து வரும்படி தோழியிடம் 
                கூறுகின்றாள்.  
              
              
                
               குறத்தி வருதல்
              
                
              தோழி குறத்தியை அழைக்கக் 
                குறத்தியும் வருகின்றாள். கூடை கட்ட வேண்டுமா. முறம் கட்ட வேண்டுமா 
                என்று குயிலைப் போல் கூவிக்கொண்டு வருகின்றாள். பெண் அன்னம் போல் 
                நடந்து வருகின்றாள். மயில் போன்று மின்னிக்கொண்டு, பார்த்த ஆடவர்கள் 
                மயக்கத்துடன் நெருங்க வருகின்றாள். இதைப் புலவர்,  
               
                
                   
                     கூடை கட்டலை முறம் கட்டலை (யோ) 
                      என்னக் 
                      குயில் கூவுதல் போலக் கூவிக்கொண்டு அன்னப் 
                      பேடு என்ன நடந்து எழில் மயில் என்ன மின்னப் 
                      பெரு மயலுடன் மகிழ்ந்து ஆடவர் துன்னக்- 
                      குறவஞ்சி வந்தாள் - மோகனக் 
                      குறவஞ்சி வந்தாள். | 
                   
                 
               
              (முறம் = சுளகு; பேடு = பெட்டை; 
                எழில் = அழகு; துன்ன = நெருங்க) என்கிறார். 
              
              4.4.2 குறத்தியின் கூற்று 
              இவ்வாறு வரும் குறத்தியைப் 
                பார்த்து மதனவல்லி நீ யார் என வினவுகின்றாள். அதற்குக் குறத்தி தன் 
                குறவர் குலவளம், மலைவளம் ஆகியவற்றைக் கூறுகின்றாள். பின் மதனவல்லி 
                உன் சொந்த மலை எது என்று கேட்கின்றாள். அதற்குக் குறத்தி 
                தான் வாழும் மலையின் வளம் கூறுகின்றாள். தங்கள் மலை ஆகிய நேரிமலையைப் 
                பலவாறு விளக்குகிறாள். சான்றாக, 
               
                
                   
                     நேரிமலை மேல்குடிசை 
                      நிலைக்கவைத்தோம் அம்மே 
                      நீடும்அது எங்கள்குடி 
                      தழைக்கவைத்தது அம்மே 
                      தாரகைகள் போல முத்தம் 
                      தயங்கும்அதில் அம்மே 
                      சந்தம்உறும் நேரிஎங்கள் 
                      சொந்தமலை அம்மே | 
                   
                 
               
              (நீடும் = நீண்டு ஓங்கிய;  தாரகைகள் 
                = நட்சத்திரங்கள்; முத்தம் = முத்துக்கள்) 
              என்ற பாடலைக் கூறலாம். 
              நேரி மலையில் நாங்கள் 
                வாழ்வதற்குக் குடிசைகள் கட்டினோம். அந்த மலை எங்கள் குடியைப் பெருகச் 
                செய்தது. நட்சத்திரங்கள் போல முத்துக்கள் நிறைந்தன. அந்த நேரி மலையே 
                எங்கள் சொந்த மலை அம்மா. 
              மலை வளம் கூறிய குறத்தி 
                பின் தங்கள் ஊர் வளம், நதி வளம், நாட்டு வளம் ஆகியவற்றையும் கூறுகிறாள். 
              மதனவல்லி குறத்தியிடம் 
                நீ சென்ற இடங்கள் யாவை? யார் யாருக்குக் குறி கூறினாய்? அவர்கள் 
                என்ன பரிசுகள் கொடுத்தார்கள்? எனக் கேட்கிறாள். 
               
                
                   
                     சிலைவளம்கொள் நுதல்அணங்கே என்ன 
                      என்ன 
                      தேசங்கள் சென்றாய் அங்கே 
                      இலகுஎவர்க்குக் குறிஉரைத்தாய் அவர்கள் என்ன 
                      கொடுத்திட்டார் இசைவாய்ச் சொல்லே | 
                   
                 
               
              (சிலை = வில்; நுதல் = நெற்றி; 
                அணங்கு = பெண்; இசைவாய் = ஏற்கும்படி) 
                 
                என்கிறாள். 
              அதற்குக் குறத்தி தான் 
                சென்ற இடங்கள், குறி கூறியவர்கள், அவர்கள் கொடுத்த பரிசுகள், சரபோஜி 
                மன்னர் கொடுத்த பரிசுகள் ஆகியவற்றைக் கூறுகிறாள். 
                
              4.4.3 குறத்தி குறி கூறுதல் 
              மதனவல்லி குறத்தியைப் 
                பார்த்து,  
              
                
                  ...........................................எனது 
                கையும் 
                தகவுபெறப் பார்த்துஉள்ளது உரைப்பாய் என்னின் 
                அலகில்கலை கற்றகுற மாதே உன்தன் 
                அகம்மகிழ வேண்டுபொருள் உதவு வேனே 
                 
               
              (அலகில் = எல்லை இல்லாத; அகம் = 
                மனம்; வேண்டு = வேண்டிய) 
              என்கிறாள். 
              அதாவது என் கையையும் பார்த்துக் 
                குறி கூறினால் நான் உனக்கு வேண்டும் பொருள்களைத் தருவேன் என்கிறாள். 
              குறத்தி தான் குறி கூறுவதற்குச் 
                செய்ய வேண்டியவற்றைக் கூறுகின்றாள். முறத்தைச் சாணத்தால் பூச வேண்டும். 
                அதில் கணபதியை வைத்து அறுகம் புல் இட வேண்டும். பழங்கள், எள், பொரி, 
                தேங்காய் வைக்கவேண்டும். வெற்றிலை, பாக்கு, பொற்காசு வைக்க வேண்டும். 
                பின் தூபம் காட்டித் தான் வேண்டியதை மனத்தில் நினைக்க வேண்டும். 
              குறி சொல்வதற்கு முன் 
                தன் பசி நீங்கக் கஞ்சி தர வேண்டும். தன் பிள்ளையின் தலையில் வைக்கச் 
                சிறிது எண்ணெய் தர வேண்டும். தினைமாவு, நிறை நாழி நெல் தரவேண்டும் 
                என்கிறாள்.  
              பின் மதனவல்லியின் கையைப் 
                பார்த்துக் குறி கூறுகிறாள். குறி கூறும் முன் தன் கடவுளர்களை வேண்டுகின்றாள்.  
               
                
                   
                     தஞ்சைநகர் தனில்வாழ்வோன் 
                      உலகத்தை ஆள்வோன் 
                      சரபோஜி மன்னவனாம் 
                      அன்னவன்பேர் அம்மே 
                      நிறைசெல்வத்து அன்னவன்மேல் 
                      ஆசைகொள்ள நோற்று 
                      நீமுன்பு செய்ததுஒரு 
                      புண்ணியம்காண் பாயே ! 
                      பிறைநுதலாய் இனிஎனக்கு 
                      நீமறைக்க வேண்டா 
                      பெருவுடையார் அருள்அதனால் 
                      அவனைச்சேர் வாயே 
                      நறைமலர்த்தார் உடன்தூது 
                      வந்திடும்இன்று என்ன 
                      நவின்றனள் | 
                   
                 
               
              (அன்னவன் = அத்தகையவன்; நோற்று 
                = விரதம் இருந்து; நுதலாய் = நெற்றியை உடையவளே; நறை 
                = மணமிக்க; தார் = மாலை) 
              அதாவது தஞ்சை நகரில் வாழ்பவன்; உலகை ஆள்பவன்; அவன் பெயர் சரபோஜி. அவனை அடைய நீ முன்பு விரதம் 
                இருந்தாய். உன் மனதில் உள்ளதை என்னிடம் மறைக்க வேண்டாம். தஞ்சைப் 
                பெருவுடையார் இறைவன் அருளால் அவனை நீ அடைவாய். நீ தூது அனுப்பிய 
                தோழி அவன் மாலையுடன் வருவாள் எனக் குறி கூறினாள். இதைக் கேட்டு மகிழ்ந்த 
                மதனவல்லி அணிகலன்கள், ஆடைகள் முதலியவற்றைக் குறத்திக்குக் கொடுக்கிறாள். 
              
              4.4.4 சிங்கன் வருதல் 
              குறவன் ஆகிய சிங்கன் குறத்தி 
                சிங்கியைத் தேடி வருகின்றான். சிங்கியைக் காணாது மனம் வருந்துகின்றான். 
               
                
                   
                     வஞ்சியைக் காணேனே - ஐயே குற 
                      வஞ்சியைக் காணேனே | 
                   
                 
               
              என்று புலம்புகின்றான். அப்போது சிங்கனின் நண்பன் 
                குறவனிடம் குறத்தியின் அடையாளங்களைக் கேட்கிறான். அதற்குச்  சிங்கன் 
                 குறத்தியின் அடையாளங்களைக் கூறுகின்றான். 
                அப்போது ஒருவன் குறத்தி இருக்கும் இடத்தைக் கூறுகின்றான். அதன்படி 
                குறவன் குறத்தியைக் காண்கிறான். மகிழ்ச்சியில் இருவரும் பேசிக் கொள்கின்றனர்.  
              
                
                மங்களம்
              
                
              இறுதியில் நூல் மங்களத்துடன் 
                முடிகின்றது. சரபேந்திரன், தஞ்சை நகர மக்கள், மனம் தூய்மையானவர்கள், 
                சிவ பக்தர்கள், குளிர்ந்த சந்திரன் போன்ற முகம் உடையவர்கள், அறிவுடையவர்கள், 
                செங்கோலர்கள் ஆகியோருக்கு மங்களம் கூறுவதுடன் நூல் நிறைவு பெறுகிறது. 
                |