5.0 பாட முன்னுரை

நண்பர்களே! சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள் என்ற பாடத்தில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய மடல் இலக்கியம் என்பது பற்றிப் பொதுவாகப் பார்த்தோம். தலைவியிடம் காதல் கொண்ட ஓர் ஆடவன் அவளை அடைவதற்காக மடல் ஏறுவேன் என்று கூறுவதாக அல்லது மடல் ஏறுவதாக அமைத்துப்பாடுவது மடல் இலக்கியம் என்று பார்த்தோம்.

இப்பாடத்தில் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமடல் என்பது பற்றிப் பார்ப்போம். இந்த நூல் இறைவனாகிய திருமால் மேல் காதல்கொண்ட ஒரு பெண், அவனை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவதாகப் பாடப்பட்டது ஆகும். திருநறையூரில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் மீது காதல் கொண்ட பெண்ணின் மனக்கலக்கத்தை வெளிப்படுத்துகிறது. இனி, இந்த நூலில் இடம்பெறும் செய்திகளைப் பார்ப்போம்.