5.3 தலைவியின் நிலை

தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி தன் நிலையைக் கூறி மடல் ஏறப் போவதாகக் கூறுகிறாள். தலைவியின் நிலை பின்வருமாறு காட்டப்படுகிறது.

5.3.1 திருமாலைப் பார்த்தல்

தலைவி தன் காதலன் ஆகிய திருமாலைப் பார்த்ததைக் கூறுகின்றாள். பெரிய சோலைகள் நிறைந்ததும் அந்தணர்கள் வாழ்வதும் ஆகிய ஊர் திருநறையூர். அங்குள்ள கோவில் பொன்னால் ஆகிய மலை போன்று உள்ளது. அந்தக் கோவிலின் கதவைத் தாண்டி உள்ளே சென்று என் கண்கள் மகிழும்படி திருமாலைக் கண்டேன். அங்கே உள்ள இறைவனின் புன்சிரிப்புத் தவழும் வாயையும், திருமகள் தங்கும் மார்பையும், இரண்டு பாதங்களையும், கைகளையும், கண்களையும் கண்டேன் என்கிறாள். இதை,

............................................... இரும் பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்
பொன்இயலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும்
பன்னு கரதலமும் கண்களும் ..........................
(அடிகள் : 144-150)

(இரும்பொழில் = பெரிய சோலைகள்; மறையோர் = அந்தணர்; இயலும் = போன்ற; கவாடம் = கதவு; புக்கு = புகுந்து; நோக்குதலும் = பார்த்ததும்; கரதலம் = கைகள்)

என்கிறாள்.

5.3.2 தலைவன் அழகில் மயங்குதல்

திருமாலைக் கண்ட தலைவி, அவன் பக்கத்தில் திருமகள் நிற்பதைக் கூடக் காணவில்லை. திருமாலின் அழகில் மயங்கினாள். அவள் மனமும் அறிவும் திருமாலிடம் சென்றன. அவள் கை வளையல்களும் மேகலை என்ற அணிகலனும் கழன்று வீழ்ந்தன. இதை

என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்
பொன்இயலும் மேகலையும் ஆங்குஒழியப் போந்தேற்கு
(அடிகள் : 160-161)

(இயலும் = செய்த; ஒழிய = நீங்க)

என்கிறாள்.

காதல் நோய்

தலைவனின் அழகில் மயங்கிய தலைவி காதல் துன்பத்தால் வருந்துகின்றாள். கடல் அலைகளின் ஒலி துன்பம் விளைத்தது. சந்திரனின் ஒளி வெப்பத்தை வீசியது. தென்றல் காற்று நெருப்பை அள்ளி வீசியது. பெண் அன்றில் பறவை தன் ஆண் அன்றிலுடன் கூடிக் குலவும் போது உண்டாக்கும் ஓசை நெஞ்சைப் பிளந்தது. மன்மதன் தாக்கினான்.

5.3.3 தலைவி புலம்புதல்

காதல் துன்பத்தால் வருந்தும் தலைவி பலவாறு புலம்புகின்றாள். காட்டில் பூத்த பூக்கள் யாருக்கும் பயன்படாது வீணாக உதிர்ந்துவிடும். அதுபோல் என் பெண்மையும் மார்புகளும் திருமாலுக்குப் பயன்படாது போயிற்றே.

என் மார்புகள் அவன் மார்பில் தோயவில்லை. எனவே என் மார்புகள் எனக்குப் பாரம் ஆக உள்ளனவே ! அதனால் பயன் இல்லையே ! என்று பலவாறு புலம்புவதாகக் காட்டுகின்றார்.

கல்நவிலும் காட்டுஅகத்து ஓர்வல்லிக் கடிமலரின்
நல்நறும் வாசம்மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறுநிலத்து வாளாங்கு உகுத்ததுபோல்
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்
மன்னும் மலர்மங்கை மைந்தன் கணபுரத்துப்
பொன்மலைபோல் நின்றவன்தன் பொன்அகலம்
தோயாவேல்
என்இவைதான் வாளா? எனக்கே பொறைஆகி
முன்இருந்து மூக்கின்று - மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே?
(அடிகள் : 171-178)

(கல்நவிலும் = கல் என்ற ஓசை உண்டாகும்; காட்டகத்து = காட்டில்; கடி = மணம் மிக்க; ஆரானும் = ஒருவராலும்; வறுநிலம் = வெற்றுநிலம்; வாளாங்கு = வீணாக; உகுத்தது = உதிர்ந்தது; நலனும் = அழகும்; அகலம் = மார்பு; தோயாவேல் = படியாவிடில்; மூக்கின்று = மூப்பு அடைகின்றது)

என் இளமை இவ்வாறு பயனின்றி மூப்பு அடைவதைத் தடுக்க உங்களுக்கு மருந்து ஏதும் தெரியவில்லையே என வருந்துகிறாள்.