6.2 திருக்காவலூர்க் கலம்பக உறுப்புகள்

இனி, இந்த நூலில் இடம்பெறும் கலம்பக உறுப்புகளையும் அவற்றுள் கூறப்படும் செய்திகளையும் சிறிது காணலாம். உறுப்புகளை அகத்திணைக்கு உரியவை என்றும் பொதுவானவை என்றும் பிரித்துக் காணலாம்.

6.2.1 பொதுவானவை

திருக்காவலூர்க் கலம்பகத்தில் இடம் பெற்றுள்ள கலம்பக உறுப்புகளில் பொதுவாகச் சொல்லப்படும் கருத்துகளைக் கொண்டவைகளாகச் சில உள்ளன. அவற்றைப் பற்றிக் கற்போம்.

• புயவகுப்பு

புயம் என்றால் தோள் என்று பொருள். பாட்டுடைத் தலைவனின் தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பு இது. இந்த நூலின் பாட்டுடைத் தலைவி அடைக்கல அன்னை. எனவே, அடைக்கல அன்னையின் மகனாகிய இயேசுவின் தோள்களின் பெருமைகளை ஆசிரியர் புகழ்கின்றார்.

இயேசுவின் தோள்கள் வானம், பூமி மற்றும் அனைத்து உலகிலும் உள்ள பொருள்கள் அனைத்தையும் உருவாக்கின. மனித இனம் மட்டும் அன்றிப் பிற உயிர்களையும் படைத்தன. பாவங்களை நீக்கின. இஸ்ரவேலர்கள் நடந்து செல்லுமாறு செங்கடல் பிளந்து, இரண்டு பக்கங்களிலும் உள்ள நீர் மதில் சுவர்களைப் போல் எழுந்து நிற்குமாறு செய்தன. யோர்தான் என்ற நதியின் ஓட்டத்தைத் தடுத்தன. எரிகோ நகரத்தை இடித்தன. சூரியனை வானத்தில் இயக்கின. இரண்டு கல் பலகைகளில் பத்துக் கட்டளைகளை எழுதின என்றெல்லாம் ஆசிரியர் புகழ்ந்து பாடுகின்றார்.

• தவம்

உடலைப் பாதுகாத்தல், உறுப்புகளை அடக்குதல், தம்மை வருத்தி இறைவனையே நினைத்திருத்தல் என்பனவற்றைத் தவம் என்று கூறலாம். இவ்வாறு செய்யும் தவத்தின் பயனை அடைக்கல அன்னையை வணங்கினால் எளிதாகப் பெறலாம் என்று இப்பகுதியில் ஆசிரியர் கூறுகின்றார். சான்றாக,

உயிர்ஆம் தயையாளை ஓம்புஅனந்தத் தாளை
அயிரா மறைமொழி யாளை - பயிர்ஆரும்
சிந்துசேர் காவலூர்ச் சேர்ந்தாளைப் பாடினேன்
இந்துசேர் தாள்சேர யான்

(தயை = அருள்; ஓம்பு = பாதுகாக்கின்ற; அனந்தத்தாள் = முடிவு இல்லாதவள்; அயிரா = சந்தேகத்திற்கு இடம் இல்லாத; ஆரும் = நிறைந்த; இந்து = நிலவு)

என்ற பாடலைப் பார்ப்போம்.

மக்களுக்கு அருள் செய்பவள்; முடிவு இல்லாதவள்; வேதத்தை உடையவள்; கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருக்காவலூரில் நிலை கொண்டவள் ஆகிய பெருமைகளை உடையவள் அடைக்கல அன்னை. நிலவு அடைக்கலமாக அடைந்த அன்னையின் திருவடிகளை நான் அடைவதற்காகப் பாடி வணங்குகிறேன் என்கின்றார்.

• மறம்

ஓர் அரசன் ஒரு மறவனின் மகளைத் திருமணம் செய்ய எண்ணுகின்றான். இதனை ஒரு தூதுவனிடம் கூறி மறவனிடம் சென்று பெண் கேட்குமாறு கூறுகின்றான். மறவன் இதனை மறுக்கிறான். தூது அனுப்பிய மன்னனை இகழ்கின்றான். இதனைப் பாடுவது மறம் என்ற உறுப்பு ஆகும்.

வீரம் மிக்கவர்கள் வேட்டுவர்கள். அந்த வேட்டுவக் குலப் பெண்ணைத் திருமணம் பேசி எங்களை இகழ்ந்து வந்தாய். நீ யார்? அடைக்கல அன்னை ஆகிய தெய்வீக மான் ஒரு சிங்கத்தைத் தன் கருவில் தாங்கியது. அப்போது அடைக்கல அன்னை எங்கள் குடியை வந்து அடைந்தாள். அவள் திருவடிகளை வைத்த எங்கள் முன்றில் (முற்றம்) தாமரை பூத்த காட்டைப் போன்றது ஆகும். அவள் புகுந்த சிறிய வீடு, பூ தேன் நீங்கிய பின்னும் வாடாமல் இருப்பது போல் இன்னமும் அழியாமல் உள்ளது.

இவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்து, அடைக்கல அன்னையை வணங்கி வாழ்த்துவதற்காக நீ திருக்காவலூரை அடைவாயாக என, மறவன் பெண் கேட்டு வந்த தூதுவனிடம் கூறுவதாகப் பாடுகின்றார்.

• அம்மானை

அம்மானை என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் கூடி இருப்பார்கள். பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாடுவாள். மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினாக் கேட்பாள். மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி அதை முடிப்பாள். இவ்வாறு பாடுவதாக அமைவது அம்மானை ஆகும்.

அம்மானை உறுப்பில் அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம். (32:1)

சீர்த்ததிருக் காவல்நல்லூர்த் தேவஅணங்கு தாள்கமலம்
நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனகாண் அம்மானை
நீர்த்ததிருத் திங்கள்மேல் நின்றனஎன்று ஆம்ஆகில்
ஆர்த்ததிரு வண்டுஉவப்ப ஆங்குஅலரா அம்மானை
போர்த்ததிருச் சோதிஇன்புஅப் போதுஅலரும் அம்மானை

(சீர்த்த = பெருமை மிக்க; காவல் = திருக்காவலூர்; தாள் = திருவடி; நீர்த்த = குளிர்ந்த; திரு = அழகிய; காண் = பார்ப்பாயாக; ஆம் ஆகில் = உண்மை ஆனால்; ஆர்த்த = ஒலிக்கின்ற; ஆங்கு = அவ்விடத்தில்; அலரா = மலரமாட்டா; போர்த்த = உடுத்தி உள்ள; சோதி = சூரியன்; இன்பு = இன்பம்; அப்போது = அந்தத் தாமரை மலர்கள்; அலரும் = மலரும்)

முதல் பெண் கூறுவது:

பெருமை மிக்க செல்வம் உடைய திருக்காவலூரின் தெய்வப் பெண் அடைக்கல அன்னை. அவள் திருவடிகள் ஆகிய தாமரை மலர்கள் குளிர்ந்த நிலவின் மீது பொருந்தி உள்ள அதிசயத்தைப் பார்.

இரண்டாம் பெண் வினாவுதல்:

அன்னையின் திருவடிகளில் நிலவு பொருந்தி உள்ளது என நீ கூறுகின்றாய். அது உண்மை. ஆனால் நிலவு உள்ள இடத்தில் தாமரை மலர்கள் மலருமா?

மூன்றாம் பெண் முடித்தல்:

அன்னை தன் உடம்பில் உடுத்தியுள்ள சூரியனின் இன்பத்தில் தாமரைகள் மலர்ந்துள்ளன என்று முடிக்கின்றாள்.

• சமூக உல்லாசம்

சமூகம் என்பது மக்கள் சேர்ந்து வாழும் அமைப்பு. அதாவது மக்கள் கூட்டம். உல்லாசம் என்பது மகிழ்ச்சி. எனவே சமூக உல்லாசம் என்பது மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சி என்று பொருள்படும். அடைக்கல அன்னையின் முன்னால் பக்தர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காட்டுவதாக இப்பகுதி அமைகின்றது.

இப்பகுதியில் கொடிகளை ஏந்தி வரும் மக்கள். கவிதைகளை ஏந்திவரும் மக்கள். சாமரங்கள் (விசிறிகள்) ஏந்திவரும் மக்கள். அன்னையின் அருளைப் பாடிவரும் மக்கள். செபமாலை ஏந்திவரும் மக்கள் எனப் பல்வேறு மக்கள் கூட்டங்கள். இவர்கள் அனைவரும் தம் துன்பங்கள் தீர அடைக்கல அன்னையை வணங்கிப் போற்ற வேண்டும் என்கிறார், ஆசிரியர்.

• சித்து

இரும்பைப் பொன் ஆக்குவோர் இரசவாதிகள் எனப்படுவர். இந்த இரசவாதிகள் தம் திறமைகளைத் தலைவிக்கு எடுத்துக் கூறுவதுபோல் பாடப்படும் உறுப்பு சித்து ஆகும். இந்நூலில் திருக்காவலூர் இரசவாதி தன் திறமைக்கு அடைக்கல அன்னையின் அருளே காரணம் என்கிறான்.

அந்தம்இலா அன்னம்இலா ஆடைஇலா நல்குரவு உற்று
அழல்நைந் தீர்காள்
சுந்தரன்நி ழல்காவ லூர்இருக்கும் அரும்சித்தன்
தொழிலைக் கேண்மின்
இந்துஅதின்வெண் கலம்ஊன்றும் செம்பொன்தும்
இரண்டும்சேர்த்து
இக்கஞ் சம்தாள்
சந்ததம்வெண் பித்தளையும் செம்பொன்னும்
பைம்பொன்ஆக்கித்
தருவன் கண்டீர் (பாடல். 50)

(அந்தம் = தண்ணீர்; இலா = இல்லாத; அன்னம் = சோறு; நல்குரவு = வறுமை; அழல் = அழுகையில்; நைந்தீர்காள் = துன்பம் அடைந்தவர்களே; சுந்தரன் = அழகன்; கேண்மின் = கேட்பீர்களாக; இந்து = சந்திரன்; வெண்கலம் = வெண்மை ஆகிய அணிகலன்; தும் = ஒளிவீசக் கூடியது; சந்ததம் = எப்போதும்)

என்பது சித்து என்ற உறுப்பில் அமைந்த பாடல் ஆகும்.

தண்ணீர், சோறு, ஆடை இல்லாமல் வறுமை அடைந்து வருந்துபவர்களே! நான் திருக்காவலூரில் வாழும் சித்துக்கள் செய்பவன். அடைக்கல அன்னையின் பாதங்களில் பித்தளையையும் இரும்பையும் வைத்து, அவற்றைப் பொன் ஆக்கித் தருவேன் என்கின்றான்.

• சம்பிரதம்

வித்தைக்காரன் தான் கற்ற மாய வித்தைகளைச் செய்து காட்டுவதாக அமையும் உறுப்பு சம்பிரதம். இந்த நூலில் வீரமாமுனிவர் ஒரு மாய வித்தைக்காரன் அடைக்கல அன்னையின் அருளால் மாய வித்தைகளைச் செய்து காட்டுவதாகக் கூறுகின்றார்.

முதலில் வெட்டிப் பார்த்தால் ஈயம் என்ற உலோகமாக இருக்கும். பின் அதையே வெட்டிப் பார்த்தால் வெள்ளியாக மாறும். வெள்ளைப் பித்தளையைப் பொன் ஆக்குவேன். இவை போன்ற மாயவித்தைகளுக்காக நான் திருக்காவலூர் அடைக்கல அன்னையின் அருளை இரந்து பெறுவேன் எனக் கூறுவதாகக் காட்டுகின்றார். (பாடல். 51)

• ஊசல்

இது பெண்களின் விளையாட்டுகளில் ஒன்று. பெண்கள் ஊஞ்சலில் இருந்து விளையாடிக் கொண்டு தலைவனின் அவயவங்களைப் புகழ்ந்து பாடுவதாக அமையும் உறுப்பு இது. பாடல்களின் இறுதியில், ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல், ஆடுக ஊசல் என்பனவற்றில் ஒன்று இடம்பெறும்.

இந்த நூலில் வீரமாமுனிவர் அடைக்கல அன்னையின் குழந்தை ஆகிய இயேசுவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுங்கள் என வேண்டுவதாகப் பாடியுள்ளார்.

பெண்களுக்குள் அருள் செல்வி எனப் போற்றப்படுபவள் அடைக்கல அன்னை. அவள் இறைவனுக்கும் அன்னை. கன்னித்தன்மை உடையவள். அத்தகைய அன்னையின் புகழைப் புகழ்ந்து ஊசல் ஆட்டுங்கள் என்கிறார்.

தவம் ஆகிய வீட்டின், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களாகிய கதவை அடையுங்கள். ஒழுக்கம் ஆகிய தாழ்ப்பாளைப் பூட்டுங்கள். இறையருள் என்ற மெத்தை விரிக்கப்பட்ட, உள்ளம் என்ற ஊஞ்சல் பலகையை, அன்பு ஆகிய கயிறு தாங்கி உள்ளது. அக்கயிற்றைக் கட்டி ஊஞ்சலை ஆட்டுங்கள் என வேண்டுவதாகப் பாடி உள்ளார்.

6.2.2 அகத்திணைக்கு உரியவை

தலைவன் தலைவியரிடையே வெளிப்படும் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்துள்ள அகத்திணைக்குரிய உறுப்புகளைப் பற்றி இனிப் பார்ப்போம்.

• காலம்

தலைவன் பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச் செல்கின்றான். இதனால் தலைவியைப் பிரிகின்றான். தலைவியைப் பிரிந்ததால் தலைவன் துன்பம் அடைகின்றான். இந்தத் துன்பங்களைப் பாடுவது காலம் என்ற உறுப்பு ஆகும்.

இந்த நூலில் தலைவன் ஆன்மா. தலைவி அடைக்கல அன்னை. பொருள் உலகப்பற்று என்று உருவகம் செய்து பாடப்பட்டுள்ளது.

வீரமா முனிவர் திருக்காவலூர்க் கலம்பகத்தில் மக்களின் வாழ்க்கையில் காணப்படும் ஆறு நிலைகளை ஆறு காலங்களாகக் காட்டுகின்றார்.

அதாவது, காமவெறி கடந்து, விரகதாபம் தாங்காது அழுது, நரக பயத்தால் மெலிந்து, பாவம் செய்து, நோயால் வருந்தி, பின் அடைக்கல அன்னைக்குத் தொண்டு செய்தல் என்ற ஆறு நிலைகள் காட்டப்படுகின்றன.

கைக்கிளை

ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவரிடம் மட்டும் காமம் காணப்பட்டால் அது கைக்கிளை எனப்படும். இந்த நூலில் காமநோய் கண்ட ஒருவன் திருக்காவலூருக்கு வந்து நோய் நீங்கப் பெற்றான் என்பது இந்த உறுப்பில் கூறப்படுகின்றது.

பொதுவாகக் காதல் நோய் உடையவர்களுக்கு நிலவு சுடும். ஆனால் திருக்காவலூர் அன்னையின் அன்பர்கள் சிற்றின்பத்திலிருந்து விடுபட்டுப் பேரின்ப வழியில் செல்கின்றனர். எனவே, நிலவு சுடுவது இல்லை என்கிறார். இந்த உறுப்பில் அமைந்த பாடலைப் பார்ப்போம். (பாடல்-21)

ஒருவாதிங் காள்குளிர் பூம்தாள் அணிந்தாள்
ஒருகலையாய்த்
திருவாய்மு கம்ஒத்தாய் ஆழ்ந்த கலையாய்ச்
செகம்குளிர்க்கும்
தருவாய் நிழல்காவ லூர்வதிந் தாய்இனித் தான்சுடவோ
மருவாதுஎக் காலமும் இங்குஇலை கைக்கிளை மாலைஅதே

(ஒருவா = நீங்காமல்; தாள் = திருவடி; கலை = பிறைச்சந்திரன்; திருவாய் = அழகு பொருந்திய; ஆழ்ந்த = வளர்ச்சிபெற்ற; செகம் = உலகம்; குளிர்க்கும் = குளிரச் செய்யும்; தரு = மரம்; வதிந்தாய் = வாழ்ந்து வருகின்றாய்; மருவாது = பொருந்தாது; மாலை = மயக்கம்)

நிலவு அடைக்கல அன்னையின் திருவடிகளில் நீங்காது காணப்படுகின்றது. அந்த நிலவைப் பார்த்து, நிலவே! நீ குளிர்ந்த பிறையாய் இருக்கும் போது அடைக்கல அன்னை தன் கால் அடிகளில் உன்னை அணிந்து கொண்டாள். நீ முழு நிலவு ஆனதும் அன்னையின் முகத்திற்கு ஒப்பு ஆனாய். நீ அடைக்கல அன்னையின் ஊரில் வாழ்ந்து வருகின்றாய். எனவே, நீ எவரையும் சுட மாட்டாய். எனவே, திருக்காவலூரில் ஒரு பக்கக் காமம் இல்லை. அதனால் எவரிடமும் மயக்கமும் இல்லை என்கிறார்.

• வண்டு

வண்டை அழைத்துக் கூறுவதாக அமையும் உறுப்பு இது. இப்பகுதியில் அமைந்த பாடல் ஒன்றில் (23) அடைக்கல அன்னையின் கைகள் காந்தள் பூக்களை ஒத்துள்ளன. திருவடிகள் தாமரை மலரை ஒத்துள்ளன. கண்கள் நீல மலர்களை ஒத்துள்ளன. வாய் சிவந்த அல்லிப் பூவை ஒத்துள்ளது. இத்தகைய சிறப்புகளை உடைய அடைக்கல அன்னை கொடுத்த தேனை உண்ணும் வண்டுகளே! இந்த உலகில் உள்ள பூக்கள் தரும் தேன் இதற்கு ஒப்பு ஆகுமோ எனக் கேட்கின்றார். இதோ அந்தப் பாடல்,

காந்தள்கை கஞ்சம்தாள் காவிக்கண் ஆம்பல்வாய்
வேய்ந்துஅலர்ந்த காவலூர் மென்கொடியே - ஈந்தமது
உண்ணிகாள் சொல்மின்நீர் ஒத்துஉளதோ பூஉலகில்
பண்அணிபூம் தீம்தேன் பனித்து

(கஞ்சம் = தாமரை; காவி = நீலமலர்; வேய்ந்து = பின்னி; அலர்ந்த = மலர்ந்த; மது = தேன்; உண்ணி = உண்ணும் வண்டுகள்; சொல்மின் = சொல்லுங்கள்; பனித்து = சொரிந்து)

• குறம்

தலைவி தலைவனைப் பிரிந்து வருந்துகின்றாள். அப்போது ஒரு குறத்தி வருகின்றாள். தலைவன் வருவதைத் தலைவிக்குக் குறி மூலம் கூறுகின்றாள். இவ்வாறு அமைவதே குறம் என்ற உறுப்பு ஆகும்.

இவ்வாறு அமைந்த ஒரு பாடலின் கருத்தைப் பார்ப்போம். (பாடல் - 25)

தலைவியே! குறத்தி ஆகிய நான் கூறும் குறிகளைக் கேள். வளையல்கள் அணிந்த உன் உள்ளங் கையில் உள்ள கோடுகளைப் பார்த்தேன். இந்தக் கைகள் பிறைச் சந்திரனை அணிந்த அன்னையின் திருவடிகளை வணங்குவன. நாக்கு அவளைப் புகழும் அளவும் தலை அவளை வணங்கும் அளவும் நீ இந்தப் பிறப்பில் சிறந்த செல்வங்களைப் பெறுவாய். மறு பிறப்பில் முழுமையான வாழ்வைப் பெறுவாய் என்று குறி கூறுகின்றாள்.

• இரங்கல்

இரங்கல் என்றால் வருந்துதல் என்பது பொருள். தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துகின்றாள். அப்போது தலைவி கடல் ஓரங்களில் உள்ள பொருள்களைப் பார்த்துத்தன் நிலையைக் கூறி வருந்துவதாக அமையும் உறுப்பு இது.

வினை ஆகிய கடலில் ஆன்மாக்கள் விழுந்து துன்பம் அடைகின்றன. ஆன்மாக்கள் இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகின்றன. அதற்காக அன்னையின் அருள் என்ற தெப்பத்தில் ஏறுகின்றன. மறை என்ற கலங்கரை விளக்கின் ஒளியைத் துணையாகக் கொள்கின்றன. இதனால் ஆசை என்ற இருளைக் கடக்கின்றன. இறுதியில் திருக்காவலூர்க் கரையைச் சென்று அடைகின்றன என்கிறார். (பாடல் 30)

• தழை

தலைவன் பூக்களையும் இலைகளையும் கலந்து செய்த உடையைத் தலைவியிடம் கொடுக்குமாறு தோழியிடம் வேண்டுகின்றான். அவ்வாறே, தோழி அதைத் தலைவியிடம் கொடுத்து, அதன் சிறப்புகளைக் கூறுகின்றாள். தலைவியிடம் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றாள். தலைவியும் ஏற்றுக் கொள்கிறாள். தோழி தலைவனிடம் சென்று இதைக் கூறுகின்றாள். தழையை ஏற்றுக் கொண்டால் தலைவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள் என்று குறிப்பாகப் பொருள்தரும். இது அகத்திணையில் ஒரு துறை ஆகும். இதுவே கலம்பகத்தில் தழை என்ற உறுப்பு ஆகும்.

சிவந்த கதிர்களை உடைய சூரியனை, பொன்னால் ஆகிய இலை உடையாக அடைக்கல அன்னை அணிந்திருக்கின்றாள். நட்சத்திரங்கள் ஆகிய தோகையைக் கொண்ட மயிலாகக் காட்சி அளிக்கின்றாள். திருவடிகளில் சந்திரனைக் கொண்டுள்ளாள். இத்தகைய அடைக்கல அன்னை ஆட்சி செய்யும் திருக்காவலூர் சிறப்பு உடையது என்கிறார். (பாடல். 31)

• பாண்

தலைவன் பரத்தையிடம் உறவு கொண்டான். எனவே, தலைவியைப் பிரிந்தான். சில நாட்கள் சென்றன. தலைவியை மீண்டும் அடைய எண்ணினான். எனவே, தலைவன் பாணனைத் தலைவியிடம் தூது அனுப்பினான். பாணன் தலைவியிடம் சென்றான். தலைவனைப் பற்றிக் கூறினான். தலைவியின் கோபத்தை நீக்க முயன்றான். கோபம் நீங்காத தலைவி பாணனிடம் கூறுவதைக் காட்டுவது பாண் என்னும் உறுப்பு ஆகும்.

இந்நூலில் வீரமாமுனிவர் பாணினியை அழைத்து, இயேசு செய்த அரிய செயல்களை அவள் பாடுவதற்கு ஏற்றவாறு கூறுகின்றார்.