பரணி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களில்
ஒன்று.
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப்
புகழ்ந்து பாடுவது பரணி எனப்படும். கடவுள் வாழ்த்து,
கடை திறப்பு முதலிய பலவகையான உறுப்புகளைக்
கொண்டு அவ்வீரனின் போர்ச்சிறப்புப் பரணியில் பாடப்படுகிறது. இது ஒரு
புறப்பொருள் நூல் ஆகும்.
பொதுவாக, நூல்களுக்கு, பாடப்படும் அரசனின் பெயரையோ,
தெய்வத்தின் பெயரையோ வைப்பர். ஆனால் பரணி இலக்கியத்தில் மட்டும் தோற்றவரின்
பெயரே நூலின் பெயராக வைக்கப்படும். (எடுத்துக்காட்டு : தக்கயாகப்
பரணி). அல்லது தோற்றவருடைய நாட்டின் பெயர் அந்த நூலுக்கு வைக்கப்படும்.
(எடுத்துக்காட்டு : கலிங்கத்துப் பரணி)
தமிழில் 11ஆம் நூற்றாண்டு முதல் பரணி இலக்கியங்கள்
காணப்படுகின்றன. கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்
பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப்
பரணி, மோகவதைப் பரணி போன்ற பரணி நூல்கள்
தமிழில் உள்ளன.
இந்தப் பாடத்தில் தக்கயாகப் பரணி
பற்றிய செய்திகள் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளன.
|