இது, போர் பற்றிக் கூறும் புறப்பொருள் நூலாகும். இதில்
புறத்திணையில் உள்ள துறைகளாகிய தும்பை ஆடுதல் (624), வஞ்சி ஆடுதல் (231), வாகை
ஆடுதல் (800), உழபுலவஞ்சி (62), பேராண்முல்லை (728), படைவழக்கு (629) ஆகியவை
இடம் பெறுகின்றன. அவற்றில் இரண்டை இங்குக் காணலாம்.
போருக்குச் செல்லும் போது, வீரர்கள் வெற்றி உண்டாக
வேண்டும் என்று தும்பைப் பூ மாலையைச் சூடிப் போருக்குச் செல்லுவர். இதைப்புறப்பொருள்
வெண்பாமாலை என்ற புறப்பொருள் இலக்கண நூல்செங்களத்து மறங்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று - (புறப். வெண்பா-127) (செங்களம் = சிவப்பு நிறமான போர்க்களம்; மறம்
= வீரம்; பைந்தும்பை = பசுமையான தும்பைப் பூ;தலைமலைந்தன்று
= தலையில் சூடுவது)
என்று கூறுகிறது. அதுபோலவே வீரபத்திரக் கடவுள் தக்கனுடன் போர் புரியச் செல்லும்போது
போர்க்கோலம் கொள்ளும் காட்சியைக் காளிக்குக் கூளி கூறுகிறது. அதில்
பொதியில்
வாழ் முனிபுங்கவன் திருவாய் மலர்ந்த புராணநூல்
விதியினால் வரும் தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே (624)
(பொதிய மலையில் வாழும் முனிவராகிய அகத்தியர்
எழுதிய பழமையான நூல் கூறியுள்ளவாறு வானம் மறையும் அளவு வீரபத்திரர் தும்பை
மாலையைத் தலையில் சூடிக் கொண்டார்.)
என்று வீரபத்திரர் போருக்குப்போகும் போது தும்பை
மாலையைச் சூடிச் சென்றார் என்று ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.
அரசர்கள் வீரர்களுக்குப் படைக்கலங்களை வழங்குவது
படைவழக்கு எனப்படும். (புறப்பொருள் வெண்பாமாலை - 64) இந்நூலில் வீரபத்திரர்
போர்க்கோலம் பூண்டு புறப்படும் போது அவர் கையில் அம்புகொடுக்கப்படுகிறது.
எனவே இது படைவழக்கு என்ற புறத்துறையைச் சேர்ந்தது ஆகும்.
புரங்கொல் அம்புகொல், வந்து வந்து இடை
போனபேர் புராணர் பொற்
சிரம்கொல் அம்புகொல் என்கொல் ஒன்று
வலத்திருக்கை திரிக்கவே
(புரம் = திரிபுரம்; புராணர் = பழையோர்;
சிரம் = தலை)
வீரபத்திரருக்குப் போர்க்கோலம் செய்யும் போது ஓர்
அம்பை அவரது வலக்கையில் கொடுத்தனர். அந்த அம்பு சிவபெருமான் திரிபுரம் எரித்த
போது தொடுத்த அம்போ என்று கூறத்தக்க வகையில் இருந்தது. தக்கனின் படையில்
உள்ள தேவர்கள் எல்லாம் இறந்து பின் பிழைத்து, தேவர்களாக ஆகியவர்கள். அதனால்
அவர்கள் இறந்தாலும் பிழைத்து விடுவர் என்பதால், மறுபடியும் பிழைக்க முடியாமல்
தலையைக் கொல்ல ஆராய்ந்து எடுத்துக் கொடுத்த அம்போ என்று கூறத்தக்க வகையில்
ஓர் அம்பு வீரபத்திரர் கையில் கொடுக்கப்பட்டது. இது படைவழக்கு என்ற துறை
இந்நூலில் இடம் பெறுவதைச் சுட்டுகிறது.
|