1.2 காப்பிய இலக்கணம்

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப் படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

1.2.1 பெருங்காப்பியம்

1) பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றுமோ பெற்றும் காப்பியம் தொடங்கலாம்.

2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.

3) தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

4) மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

5) திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

6) அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

7) சந்தி எனப்படும் கதைப் போக்கு (கதைத் தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை)     வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.

8) அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

9) எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

10) கற்றறிந்த புலவரால் புனையப்பட்டதாக இருத்தல் வேண்டும். நாற்பொருளும் குறையாது வரவேண்டும். இவை தவிரப் பிற உறுப்புகளில் சில குறைந்தும் வரலாம்

பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்

பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப

(தண்டியலங்காரம், நூற்பா - 8)

கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்

(தண்டியலங்காரம், நூற்பா - 9)



1.2.2 சிறுகாப்பியம்

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் குறைந்து வருவது காப்பியமாகும். தண்டியலங்காரம் கூறும் காப்பியம் என்பது சிறுகாப்பியத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அறமுதல் நான்கினுங் குறைபா டுடையது
காப்பியம் என்று கருதப் படுமே

(தண்டியலங்காரம், நூற்பா - 10)

மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும், உரைநடை கலந்தும், பிறமொழி கலந்தும் வரலாம்.

அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே

(தண்டியலங்காரம், நூற்பா - 11)


மேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.

பாவிகம்

காப்பியத்தினுடைய     பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது.

பாவிகம் என்பது காப்பியப் பண்பே
                              (தண்டியலங்காரம், நூற்பா - 91)

காப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.

1.2.3 பிற நூல்களில் காப்பிய இலக்கணம்

வீரசோழியம் புராணத்திற்கும் காப்பியத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லை என்னும் அடிப்படையில், காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது. பன்னிரு பாட்டியல் காப்பியத்தைத் தலை, இடை, கடை என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றது. மாறனலங்காரம், வச்சணந்தி மாலை, நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும்.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.