1.5 காப்பியங்கள்
காப்பியங்கள் உலகிலுள்ள பல மொழிகளிலும்
படைக்கப்பட்டு உள்ளன. அவை அந்தந்த நாட்டுப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்து
காணப்படுகின்றன. அக்காப்பியங்கள் பற்றிய செய்திகளைக் கீழே காணலாம்.
1.5.1 உலக மொழிகளில் காப்பியங்கள்
உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று
தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது.
அவற்றுள் சிலவற்றை காணலாம்.
காப்பியத்தின் பெயர் |
ஆசிரியர் |
மொழி / நாடு |
இலியாது, ஒதீஸி |
ஹோமர் |
கிரேக்க மொழி |
ஆர்லண்டோ இன்ன
மராட்டோ
|
பயர்டோ
|
இத்தாலி |
ஷாநாமா |
அபுல்காசிம்
மன்சூர் |
பாரசீகம் |
மே |
மெக்கா |
செக்மொழி |
வாண்டன் ஓஸ்ரெய்னால்ட் |
பிளீமிஷ் |
டச்சு மொழி |
1.5.2 இந்திய மொழிக் காப்பியங்கள்
இந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல்
காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள்
குறிப்பிடத் தக்கவை ஆகும்.
காப்பியத்தின் பெயர்
|
ஆசிரியர்
|
மொழி
|
இராமாயணம் |
வால்மீகி |
வடமொழி |
மகாபாரதம் |
வியாசர் |
வடமொழி |
இராம சரித மானஸ் |
துளசிதாசர் |
ஹிந்தி |
குமார சம்பவம்,
இரகு வம்சம் |
காளிதாசர் |
வடமொழி |
நூர் நாமா |
அமீர் குஸ்ரு |
பாரசீகம் |
சுதாம சரித்திரம் |
பக்தசிரோமணி |
குஜராத்தி |
பத்மாவதி |
ஆலாவுல் |
வங்காளம் |
பிரபுலிங்க லீலை |
சாமரசன் |
கன்னடம் |
குமார சம்பவம் |
நன்னிசோட |
தெலுங்கு |
1.5.3 தமிழில் காப்பியங்கள்
தமிழில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை
இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள்
வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும்
அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத்
தக்கதாகும்.
இதிகாசம்
கடவுளரும் கடவுளின் அம்சம் ஆனவர்களும், மானிடராகப் பிறந்து,
பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப்
பேசுவன இதிகாசங்கள் எனப்படும். (இதிகாசம் என்னும் சொல்லின் பொருள் இவ்வாறு
நடந்தது என்பதாம்.)
புராணம்
கடவுளர் பற்றிய புராணங்களில் தெய்வங்கள்,
தெய்வீக நிலையில் நின்று செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச் செயல்கள்
ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக் கூறும் கதைப்
பாடல்கள் தல புராணங்கள் என்று பெயர் பெறுகின்றன.
காப்பியம்
சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள்,
நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில்
இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே
காப்பியங்கள் எனப்படுகின்றன.
தமிழில் காப்பியப் படைப்பு,
இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப்
போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து
ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது.
அவற்றுள் சில குறிப்பிடத்தக்க காப்பியங்களைச் சுட்டிக் காட்டலாம்.
காப்பியத்தின் பெயர்
|
ஆசிரியர்
|
சமயம்
|
சிலப்பதிகாரம் |
இளங்கோவடிகள் |
சமணம் |
சீவகசிந்தாமணி |
திருத்தக்கதேவர் |
சமணம் |
சூளாமணி |
தோலாமொழித்தேவர் |
சமணம் |
மணிமேகலை |
சீத்தலைச்
சாத்தனார் |
பௌத்தம் |
குண்டலகேசி |
நாதகுத்தனார் |
பௌத்தம் |
இராமாயணம் |
கம்பர் |
வைணவம் |
பாரதம் |
வில்லிப்புத்தூரார் |
வைணவம் |
பெரியபுராணம் |
சேக்கிழார் |
சைவம் |
திருவிளையாடற்புராணம் |
பரஞ்சோதி முனிவர் |
சைவம் |
சீறாப்புராணம் |
உமறுப்புலவர் |
இஸ்லாம் |
தேம்பாவணி |
வீரமாமுனிவர் |
கிறித்துவம் |
இரட்சண்ய
யாத்திரிகம் |
கிருஷ்ணப்பிள்ளை |
கிறித்துவம் |
இதிகாசங்களிலிருந்து
ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும்
இலக்கியத்தை, கண்ட காவியம் என்று வடமொழி அறிஞர் குறிப்பிடுவர். அத்தகைய
முயற்சி தமிழிலும் நிகழ்ந்தது. நைடதம் (அதிவீர ராம பாண்டியர்), நளவெண்பா
(புகழேந்திப்புலவர்), குசேலோபாக்கியானம் (வல்லூர்
தேவராசப் பிள்ளை),
அரிச்சந்திர புராணம் (நல்லூர் வீரைகவிராயர்) முதலியவை இந்த
வகைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின்
எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும்.
தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு
ஓர் எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம் பற்றிய செய்திகளை இங்குக்
காண்போம்.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
இளங்கோவடிகள். மகளிர் காலில் அணியும் அணி சிலம்பு. சிலம்பால் விளைந்த நூல்
ஆதலின் சிலப்பதிகாரம் என்றாயிற்று. கண்ணகியின் சிலம்பும், பாண்டிமாதேவியின்
சிலம்பும் கதைக்கு அடிப்படையானவை. இக்காப்பியம் மூன்று காண்டங்களையும் 30
காதைகளையும் கொண்டது.
சோழ நாட்டில் புகார்
நகரில் பிறந்த கண்ணகி, பாண்டி நாட்டு மதுரையை அடைந்து,
கணவனை இழந்து, சேர நாட்டில் புகுந்து தெய்வமாகியதே கதையாம். இதனைச் சமணக்
காப்பியம் என்பர் அறிஞர்.
1.5.4 இக்காலக் காப்பியங்கள்
பழையன கழிதலையும், புதியன புகுதலையும்
காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில் காணலாம். அவ்வகையில், தமிழ்க் காப்பிய
வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள்
எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது
மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள்
தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக்
காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள். கி.பி.
17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை
அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன.
இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள்
ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம்,
சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன.
இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும், தழுவல் காப்பியங்களாகவும் இருக்கின்றன.
அண்மைக் காலம் வரையிலும் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கீழே பட்டியலிட்டுத்
தரப்பட்டுள்ளன.
பாரதியார் |
-
|
கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம். |
பாரதிதாசன் |
-
|
பாண்டியன் பரிசு, தமிழச்சியின்
கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி. |
கவிமணி |
-
|
மருமக்கள் வழி மான்மியம் |
கண்ணதாசன் |
-
|
ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி,
ஏசு காவியம். |
முடியரசன் |
-
|
பூங்கொடி, வீரகாவியம் |
கவியோகி சுத்தானந்த
பாரதியார் |
-
|
பாரத சக்தி மகா காவியம் |
டாக்டர் சாலை
இளந்திரையன் |
-
|
சிலம்பின் சிறுநகை |
தி. வெங்கட
கிருஷ்ணய்யங்கார் |
-
|
இராகவ காவியம் |
புலவர் குழந்தை |
-
|
இராவண காவியம் |
வாணிதாசன் |
-
|
கொடிமுல்லை |
அண்ணாதாசன் |
-
|
கலைஞர் காவியம் |
தமிழ் ஒளி |
-
|
மாதவி காவியம் |
இக்காலக் காப்பியத்தைப் பற்றிய விளக்கத்தை
ஒரு சான்று கொண்டு நோக்கி உணரலாம்.
பாரதியார் - பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம், பாரதக் கதையின்
ஒரு பகுதியாகத் திகழ்கின்றது. சூதில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். அந்நிலையில்
துச்சாதனன் திரௌபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் சபைக்குக் கொண்டு வருகின்றான்.
நாணழிந்த திரௌபதி, சபையோர் முன்னிலையில் தான் அடைந்த அவமானத்தால் ஆத்திரமடைந்து,
கொடூரமான ஒரு சபதம் செய்கின்றாள். தொடர்ந்து வீமன், அர்ச்சுனன் முதலானோரும்
சபதம் எடுக்கின்றனர். இதுவே இக்கதை பொதி பாடலின் கருவாகும். இக்கதைப் பாடல்
குறியீட்டு நிலையில் இந்திய விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இக்காவியம்
இரண்டு பாகங்களையும் 5 சருக்கங்களையும் 308 பாடல்களையும் கொண்டது.
|