2.2 வழக்குரை காதை சிலப்பதிகாரத்தின் இரண்டாம் காண்டமான மதுரைக் காண்டத்தில் பத்தாவது காதையாக வழக்குரை காதை இடம்பெற்றுள்ளது. ஆசிரியப் பாவினால் அமைந்த இக்காதையில் சில வெண்பாக்களும் இடம் பெற்றிருக்கின்றன. கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் பொருள் தேட மதுரை செல்கிறான். மதுரையில் மாதரி என்ற ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக இருக்கச் செய்து, கண்ணகி தந்த காற்சிலம்பை விற்று வரக் கருதி மதுரை நகரக் கடைத்தெருவிற்குச் செல்கிறான். அங்கு அரண்மனைச் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன் ஒருவனது சூழ்ச்சிக்கு ஆளாகிறான். அதன் விளைவு கோவலன் திருடன் எனக் கருதப்பட்டு அரசன் ஆணையால் கொலை செய்யப்படுகிறான். கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட கண்ணகி சினந்து எழுந்து பாண்டியன் அரசவைக்குச் சென்று வழக்குரைத்துக் கோவலன் கள்வன் அல்லன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றாள். உண்மை உணர்ந்த பாண்டியன் அக்கணமே தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்துகிறான்.
அரசநீதி பற்றி எழுந்த இந்த வழக்குரை காதை நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
வழக்குரை காதைக் கதை நிகழ்ச்சியில் கோப்பெருந்தேவி, பாண்டிய மன்னன், வாயில் காவலன், கண்ணகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். |