2.4 வெண்பா

இக் காதையின் இறுதியில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. முதல் வெண்பா கண்ணகி கூற்றாகவும், ஏனைய இரண்டும் நிகழ்ச்சியைக் கண்ட ஒருவர் கூற்றாகவும் அமைந்துள்ளன.

2.4.1 கண்ணகி கூற்று

‘தீவினைகளைச் செய்தவர்களை அறக்கடவுளே கூற்றாக நின்று தண்டிக்கும் என்று சான்றோர் கூறிய வாக்கு வாய்மையே ஆகும். பொல்லாத பழிச் செயலைச் செய்த வெற்றி வேந்தனின் தேவியே! தீவினைக்கு ஆளான நான் இனிச் செய்கின்ற செயலையும் காண்பாயாக’ என்று, கண்ணகி தான் அடுத்துச் செய்யவிருந்த செயலைப் பற்றிக் குறிப்பிட்டாள்.

    அல்லவை செய்தார்க்கு அறம்கூற்ற மாம்என்னும்
    பல்லவையோர் சொல்லும் பழுதன்றே - பொல்லா
    வடுவினையே செய்த வயவேந்தன் தேவி
    கடுவினையேன் செய்வதூஉம் காண்
                        (வழக்குரை காதை : வெண்பா எண் : 1)

(அல்லவை = தீயவை; அவையோர் = சான்றோர்; பழுது = பொய்ம்மை; வடு = பழி)


2.4.2 கண்டோர் கூற்று

கண்ணகியின் மலர் போன்ற விழிகளில் இருந்து சொரிகின்ற துன்பக் கண்ணீரையும், அவள் கையிலே ஏந்தி வந்த ஒற்றைச் சிலம்பினையும், உயிர் நீத்த உடம்பு போன்ற அவள் உருவத்தையும், காடு போன்று அடர்ந்து, அவிழ்ந்து சரிந்த அவளது கரிய கூந்தலையும் கண்டு அச்சமுற்று, மதுரை மன்னன் தானே அந்நிலைக்குக் காரணமானதால் உயிர் துறந்து வெற்றுடம்பாய்க் கிடந்தான். தீவினையுடையேன் இந்நிகழ்ச்சியைக் கண்கூடாய்க் கண்டேன்.

கண்ணகியினுடைய உடம்பில் படிந்த புழுதியையும், அவளது விரிந்து கிடந்த கரிய கூந்தலையும், அவளது கையிலேந்திய ஒற்றைச் சிலம்பையும் பார்த்த பொழுதே பாண்டிய நாட்டு மன்னன் வழக்கில் தோற்றான். அக்கண்ணகி வழக்குரைத்த சொற்களைக் கேட்ட அளவிலேயே மன்னன் உயிரையும் துறந்தான்.