3.0 பாட முன்னுரை

காலந்தோறும் இலக்கியங்கள் பெருகி வருவது இயல்பே. சங்க காலத்தில் தனிநிலைச் செய்யுள்கள் புலவர்கள் பலராலும் பாடப்பட்டன. அதன் பின்னர் இலக்கிய வளர்ச்சியின் ஒரு குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியாகத் தொடர்நிலைச் செய்யுள் வடிவில் நூல்கள் தோன்றின. அவை கதை கூறும் நிலையில் பல இலக்கியக் கூறுகளைக் கொண்டவையாகத் தோன்றின. அவ்வாறு தோன்றிய நூல்களைக் காப்பியங்கள் என்றனர். காப்பியங்களைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகைப்படுத்தினர். பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்றாகத் திகழ்வது மணிமேகலை.

மணிமேகலை என்னும் பெருங்காப்பியத்தின் முதல் காதையாக இடம் பெறுவது விழாவறை காதையாகும். புகார் நகரில் இந்திர விழா நடத்தும் மரபு தோன்றிய வரலாறும், அதனை நடத்த ஆன்றோர்கள் எடுத்த முடிவும், அதனை முரசறைந்து வள்ளுவன் தெரிவித்த முறையும் பற்றி இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.