1.3 சங்க இலக்கியங்கள்

சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தாலும், சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள் சிலவாகத் தான் இருக்க முடியும். பெரும்பாலான பாடல்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். அவை கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பாடப்பட்டவையாக இருக்கலாம்.

சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது ஏராளமான பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர். அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது.

எட்டுத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும், பத்துப் பெரிய பாடல்கள் பத்துப் பாட்டு என்றும் பெயர் பெற்றன.

1.3.1 தொல்காப்பியம்

சங்க இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பிரித்துப் பார்ப்பதற்கும், தமிழ் மொழியின் முழுமையான இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கும் தொல்காப்பியம் துணை நிற்கிறது.

சங்க இலக்கியங்களுக்கு முன்னால் பல நூறு ஆண்டுக்காலத் தமிழிலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். கடல் பெருக்கெடுத்து ஊர்களை அழித்ததாலும், ஓலைச் சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிந்ததாலும் அவ்விலக்கியங்கள் இன்றைக்குக் கிடைக்கவில்லை. அவ்விலக்கியங்களுக்கு அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுதியதாகவும் தமிழ் ஆய்வாளர்கள் இறையனார் களவியல் உரையை அடிப்படையாகக் கொண்டு கூறுகின்றனர்.

தொல்காப்பியர் கி.மு.500 அளவில் வாழ்ந்ததாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமே சங்க இலக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தது.

தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இலக்கண நூலாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன அவை. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்ததிகாரம்,

  1. நூல் மரபு
  2. மொழி மரபு
  3. பிறப்பியல்
  4. புணரியல்
  5. தொகை மரபு
  6. உருபியல்
  7. உயிர் மயங்கியல்
  8. புள்ளி மயங்கியல்
  9. குற்றியலுகரப் புணரியல்

என ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுத்தின் பிறப்பு, தொகை, வகை, பெயர் மயக்கம், சொற்களின் புணர்ச்சி ஆகியவற்றை விளக்குகின்றது. இதில் 483 நூற்பாக்கள் உண்டு.

சொல்லதிகாரம் தமிழ்ச் சொற்றொடர்களின் ஆக்கம், வேற்றுமைகள், பெயர், வினை, இடை, உரி என நால்வகைச் சொற்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. இதில் 463 நூற்பாக்கள் உள்ளன. இது

  1. கிளவியாக்கம்
  2. வேற்றுமையியல்
  3. வேற்றுமை மயங்கியல்
  4. விளிமரபு
  5. பெயரியல்
  6. வினையியல்
  7. இடையியல்
  8. உரியியல்
  9. எச்சவியல்

என்று 9 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளதிகாரம் வாழ்க்கைக்கும், இலக்கியத்திற்கும் இலக்கணம் கூறும் பகுதியாகும். உலகில் எல்லா மொழிகளும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூற, தொல்காப்பியம் தமிழில் வாழும்நெறிக்கு இலக்கணம் கூறுகிறது.

பொருளதிகாரத்தில் 665 நூற்பாக்கள் உள்ளன. தொல்காப்பியர் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதற்கான இலக்கணத்தைக் கூறியுள்ளார். பொருளதிகாரத்தில் அவர்,

  1. அகத்திணையியல்
  2. புறத்திணையியல்
  3. களவியல்
  4. கற்பியல்
  5. பொருளியல்
  6. மெய்ப்பாட்டியல்
  7. உவமவியல்
  8. செய்யுளியல்
  9. மரபியல்

என ஒன்பது இயல்களாகப் பிரித்து விவரித்துள்ளார்.

இந்த இலக்கண நூல்தான் தமிழர் நாகரிகத்தை உலகின் தலைசிறந்த நாகரிகமாக எடுத்து விளக்குவதற்குச் சான்றாக நிற்கின்றது.

மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அதுசரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.
 

1.3.2 எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகையில் உள்ளவை எட்டு, தொகை நூல்களாகும். இவற்றைக் குறிக்கும் பழம் பாடல் ஒன்று உள்ளது. இப்பாடலை மனப்பாடம் செய்து கொண்டால் இந்நூல்களின் பெயர்களை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

இவற்றுள் நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.
 

1.3.3 பத்துப்பாட்டு

சிறிய பாடல்கள் எல்லாம் எட்டுத்தொகையுள் அடங்கிவிட, பத்துப் பெரிய பாடல்களின் தொகுதி பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டது

இப்பத்துப் பாடல்களையும் குறிக்கும் பழம்பாடல் ஒன்று உள்ளது.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

இவ்வெண்பாவில் உள்ள முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும்.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகப்பாடல்களாகும். நெடுநல்வாடை அக இலக்கியமா, புற இலக்கியமா என்ற ஆய்வு இன்னும் நிகழ்ந்து வருகின்றது.

இவற்றுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும். மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

இப்பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இணைந்து பதினெண்மேற்கணக்கு எனவும் பெயர் பெறும்.