|  | 3.4 திணையும் துறைகளும் | 
  
 |  |  தொல்காப்பியர் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் ஆகிய போர்ச் செயல்களில் கவர்பவர், அதனை எதிர்ப்பவர் ஆகியோரின் செயல்களை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய திணைகளில் விளக்குகிறார். கவர்தல், எதிர்த்தல் என்ற இரு செயல்களுக்கும் தனித் திணைகளை உருவாக்கி ஐயனாரிதனார்  புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சி - கரந்தை, வஞ்சி - காஞ்சி, உழிஞை - நொச்சி எனப்பகுத்துக் காட்டுகிறார். கரந்தையும் நொச்சியும் முறையே ஆநிரையை மீட்டலையும் கோட்டையை மீட்டலையும் குறிப்பன. இவை தொல்காப்பியரால்  வெட்சியிலும் உழிஞையிலும்
 சுட்டப்பட்டிருக்கின்றன. பல்வேறு நிலையாமைகள் பற்றிக் கூறும்
 பகுதிக்குத் தொல்காப்பியர் காஞ்சித் திணை எனப் பெயரிட்டிருக்க, ஐயனாரிதனார் அதனை மண் மீட்டலைக் குறிக்கும் திணையாகக் காட்டியிருப்பது மிகப்பெரிய மாற்றமாகும். தொல்காப்பியர் சுட்டிய
 புறத்திணைகளின் உரிப்பொருளையும் அவற்றின் துறைகள்
 குறித்த செய்திகளையும் இப்பகுதியில் காண்போம். திணை என்பது
 முழுச்செயலைக் குறிப்பது. துறை என்பது முழுச்செயலுக்குள்
 இருக்கும் சிறுசிறு நிகழ்வுகளைக் குறிப்பது.
 | 
 
 |  |  | 
 
 |  | 3.4.1 வெட்சித் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
  
 |  | 
  பகைவர் நாட்டின்மேல் போர் தொடுக்க எண்ணும் அரசன்
 போர் தொடங்கும் முன், அறவோர், பிணியாளர், பெண்டிர் முதலியவர்களைப் போர் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறப் பணிப்பான். தாமே வெளியேற முடியாத பசுக்கூட்டங்களைத் தன்படை வீரர்களைக் கொண்டு கைப்பற்றி வருவான். இது வெட்சிப்
 போர் ஆகும். ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை
 சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர். 
 ஆநிரை கவர்தலைப் போர் தொடங்கு முன் தன் கருத்தைப்
 பகைவர்க்கு அறிவிப்பது போலவும் கொள்ளலாம். தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகள் கூறியுள்ளார். நிரை கவர்தலுக்கும் 
 (வெட்சி) மீட்டலுக்கும் (கரந்தை) இத்துறைகள் பொதுவானவை. | 
 
 |  |  | 
 
 |  | வெட்சியில் கரந்தை | 
 
 |  | 
   வெட்சித் திணையில்  கரந்தை என்ற பகுதியையும் 
 தொல்காப்பியர் கூறுவார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் 
 கொள்ளவில்லை.  புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் ஆநிரை
 கவர்தலை மட்டும் வெட்சிப் படலமென்று பெயரிட்டு 19 துறைகள் 
 வகுத்தார். வெட்சிப் படையினர் தம் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைக்
 கண்டு இடைமறித்துப் போரிடுதலைத் தனித் திணையாக்கிக்
 கரந்தைப் படலம் எனப் பெயரிட்டு ஐயனாரிதனார் 13 துறைகளை 
 வகுத்துள்ளார். | 
 
 |  |  | 
 
 |  | 3.4.2	வஞ்சித் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  |  தன்னை மதியாது தனது நாட்டைக் கைப்பற்றக் கருதிய
 பகைமன்னன் மேல் தான் படையெடுத்துச் செல்வது  வஞ்சித்
 திணையாகும்.
 இதற்குத் தொல்காப்பியர் 13 துறைகளை
 வகுத்துள்ளார். 
 படையெடுத்து வருவோரை எதிர்கொள்வதும்
 வஞ்சித் திணையுள் 
 கூறப்பட்டுள்ளது. வெண்பாமாலை
 ஆசிரியர் நாட்டைக்
 கைப்பற்றுதலை மட்டும் வஞ்சிப் படலம்
  என்று கூறி அதற்கு 20 
 துறைகளை வகுத்தார். படையெடுப்பை
 எதிர்த்தலைக் காஞ்சிப்
 படலம்  எனப் பிரித்துக் குறிப்பிட்டு
 அதற்கு 21 துறைகளை 
 வகுத்துள்ளார். தொல்காப்பியர் காஞ்சி
 என்பதற்கு வேறுபொருள் 
 கொண்டார். | 
 
 |  |  | 
 
 |  | 3.4.3	உழிஞைத் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  |  பகைவர் மதிலை அழித்துக் கோட்டைக்குள் உழிஞை
 மன்னன் புகுதலைக் கூறுவது உழிஞை ஆகும். தொல்காப்பியர் 
 படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன்
 அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே
 உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார். | 
 
 |  |  | 
 
 |  | உழிஞையில் நொச்சி | 
 
 |  | 
 நொச்சித் திணையைத் தொல்காப்பியர் தனித்திணையாகக் 
 கொள்ளவில்லை. உழிஞையில் இணைத்தே கூறுகிறார்.
 கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணையாகும். மதில் காப்போர்
 நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். ஐயனாரிதனார் மதிலை
 வளைத்தலை மட்டும் உழிஞைப் படலம் என்று கூறி அதற்கு 
 28 துறைகளை வகுத்தார். மதில் காத்தலை  நொச்சிப் படலம்
 என்று தனியாகப் பிரித்து அதற்கு 8 துறைகள் வகுத்தார். | 
 
 |  |  | 
 
 |  | 3.4.4	தும்பைத் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  | பகை அரசர் இருவர் ஓர் இடத்தைத் தேர்வு செய்து,
 அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத்திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவர். இத்திணை 12 துறைகளை உடையது. ஐயனாரிதனார் 
 இதற்குத்  தும்பைப் படலம் என்று பெயரிட்டு 23 துறைகளை
 வகுத்தார். | 
 
 |  |  | 
 
 |  | 3.4.5 வாகைத் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  |  தன் பகை அரசனை வென்று வெற்றி பெறுதல்  வாகைத்திணையாகும். வென்ற மன்னன் வாகைப்பூச் சூடி வருவான். வெற்றி
 பெற்றதும், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதும் வாகைத்
 திணையின் பாற்படும். வாகையின் துறைகள் 18 ஆகும். அரசர்கள்
 மட்டுமன்றி மற்றவர்களும் அவரவர் துறையில் வெற்றி பெறுதலும் 
 வாகையுள் அடங்கும். புறப்பொருள் வெண்பா மாலை இதனை 
 வாகைப் படலம் எனப் பெயரிட்டு 32 துறைகள் வகுத்துள்ளது. | 
 
 |  |  | 
 
 |  | 3.4.6 காஞ்சித் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  | நிலைபேறு இல்லாத உலக இயற்கையைப் பற்றி எடுத்துரைப்பது காஞ்சித் திணையாகும். இதற்கு 20 துறைகள் கூறப்பட்டுள்ளன.
 வெண்பாமாலை  காஞ்சி என்பதற்கு வேறு பொருள் கொண்டு
 பகைவரைத் தன்நாட்டின் எல்லையைத் தாண்ட விடாமல் தடுத்தல் காஞ்சிப் படலம் என்கிறது. இவர்கள் காஞ்சிப் பூவைச்
 சூடியிருப்பர். இதற்கு 21 துறைகளைப்  புறப்பொருள்
 வெண்பாமாலை காட்டுகிறது. | 
 
 |  |  | 
 
 |  | 3.4.7 பாடாண் திணையும் துறைகளும் | 
 
 |  |  | 
 
 |  | 
  வெற்றி பெற்ற அரசனின் வீரம், புகழ், கொடை
 முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுதல்  பாடாண்
 திணையாகும். இத்திணையில் 25 துறைகள் உள்ளன. புறப்பொருள்வெண்பா மாலை இதனைப் பாடாண் படலம் என்று கூறி 48துறைகளைக் காட்டுகிறது.    திணைகள், துறைகள் ஆகியவற்றின் விரிவும் விளக்கமும் 
 புறப்பொருள் வெண்பா மாலை பற்றிய பாடங்களில் படிக்கலாம். |