4.3 முப்பொருள் வெளிப்பாடு

நெய்தல் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் பாடல்களில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை இப்பகுதியில் அறியலாம்.
 

4.3.1 முதற்பொருள் வெளிப்பாடு

நெய்தல் திணைக்கு உரிய நிலமான கடலும் கடல் சார்ந்த பகுதியும் பாடல்களில் வெளிப்படும் தன்மையை முதலில் காண்போம்.

முழங்குகடல்

திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
(ஐங்குறுநூறு -105 : 1-2)

(திரை = அலை; தரு = தந்த; இமைக்கும் = ஒளிவிடும்)

ஒலிக்கும் கடல் அலைகள் கொண்டு வந்த முத்துகள் வெண்மையான மணலில் கிடந்து ஒளிவிடும் என்பது இவ்வடிகளின் பொருள்.

கடற்கரை, பெருநீர், அழுவம், பௌவம், போன்ற சொற்களால் நெய்தல் நிலம் குறிக்கப்படுவதைப் பல பாடல்களில் காண முடிகின்றது.
(எ.டு)

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
(ஐங்குறுநூறு - 170 :1)

பெருநீர் அழுவத்து எந்தை தந்த...
(அகநானூறு - 20 : 1, உலோச்சனார்)

தெண்திரைப் பௌவம் பாய்ந்து
(ஐங்குறுநூறு - 121 : 3)

(அழுவம், பௌவம் = கடல்)

கடல் சார்ந்த மணல்பரப்பில் விரிந்திருக்கும் சோலைகள் கானல் எனப்படும்.

என்நலனே
ஆனா நோயொடு கான லஃதே

(குறுந்தொகை - 97 : 1-2, வெண்பூதி)

(ஆனா = குறையாத)

  • பெரும்பொழுது
  • குறுந்தொகை 55-ஆவது பாடலில் (நெய்தற் கார்க்கியர்) ஊதையொடு என்று வரும் சொல் குளிர்காலத்தைக் காட்டுகின்றது. (ஊதை = வாடை)

  • சிறுபொழுது
  • நீலம் கூம்பும்
    மாலை வந்தன்று ...

    (ஐங்குறுநூறு - 116 : 2-3)

    எற்பாடு என்பது சூரியன் மறையும் அந்தி மாலை நேரம். நீலமலர் குவியும் அந்தி மாலை வந்தது என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.
     

    4.3.2 கருப்பொருள் வெளிப்பாடு

    நெய்தல் திணைப் பாடல்களில் சுட்டப்படும் கருப்பொருள்கள் சிலவற்றை இனி அறியலாம்.

  • மக்கள்
  • பரதவர், துறைவன், சேர்ப்பன்

    உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
    (நற்றிணை - 63 : 1, உலோச்சனார்)

    (உரவு = வலிமை; உழந்த = வருந்திய)

    துறைவன் தம்ஊ ரானே
    (குறுந்தொகை - 97 : 3, வெண்பூதி)

    நளிநீர்ச் சேர்ப்ப !
    (ஐங்குறுநூறு - 179 : 1)

    (நளிநீர் = மிகுந்த நீர் (கடல்))

  • பறவை
  • அன்னம்

    துதிக்கால் அன்னம்......
    (ஐங்குறுநூறு - 106 : 2)

    (துதிக்கால் = தோற்பை போன்ற கால்)

  • விலங்கு
  • சுறா

    கோட்சுறா எறிந்தென
    (நற்றிணை - 207 : 8)

    (கோட்சுறா = கொல்லவல்ல சுறாமீன்)

  • ஊர்
  • பாக்கம்

    பெருங்கழிப் பாக்கம் கல்லென
    வருமே தோழி கொண்கன் தேரே

    (நற்றிணை - 111 : 9-10)

    (பெருங்கழி = பெரிய நீர்க் கழிகள் சூழ்ந்த; கல்லென = கல் என்று ஒலிக்க; கொண்கன் = தலைவன்)

    மேற்காட்டிய நற்றிணைப் பாடல்களின் (207, 111) ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை.

  • மரம்
  • புன்னை

    புன்னை
    பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை

    (ஐங்குறுநூறு - 110 : 1-2)

    (பூக்கெழு = பூக்கள் நிறைந்த)

  • பண்

  • செவ்வழிப்பண்

    செவ்வழி யாழ்நரம்பு அன்ன
    (கலித்தொகை - 118 :15)

  • தொழில்

  • உப்பு விற்றல்

    உப்புஒய் உமணர்
    (அகநானூறு - 30 : 5, முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்)

    (ஒய் = உப்பு வண்டியைச் செலுத்தும்; உமணர் = உப்பு வாணிகர்)

    இவை போன்றே பிற கருப்பொருள்களும் ஆங்காங்கே பாடல்களில் வெளிப்படுகின்றன.

    4.3.3 உரிப்பொருள் வெளிப்பாடு

    குடும்பத்திற்குப் பொருளீட்டும் நோக்கத்தில் கடல்வழிப் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவது (இரங்கல்) உண்டு. திருமணத்திற்காகப் பொருள் ஈட்டும் நோக்கத்தில் சென்ற தலைவன் வரைவு (திருமணம் செய்தல்) நீட்டிப்பதால் வருந்தும் தலைவியும் நெய்தலில் உண்டு.

    களவு (திருமணத்திற்கு முற்பட்ட காதல் வாழ்க்கை), கற்பு (திருமணத்திற்குப் பிற்பட்ட குடும்ப வாழ்க்கை) இரு நிலையிலும் நெய்தலின் உரிப்பொருள் ஆகிய இரங்கல் வெளிப்படும்.

  • இரங்கல் - களவுக் காதலில்
  • அன்னை வாழிவேண்டு அன்னை ! - என்தோழி
    சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து

    தண்கடல் படுதிரை கேட்டொறும்
    துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே

    (ஐங்குறுநூறு - 107)

    (நுதல் = நெற்றி; பசப்ப = பசலை நோய் கொள்ள; சாஅய் = துன்புற்று; படர் = வருத்தம்; கேட்டொறும் = கேட்கும் போதெல்லாம்; நோகோ = வருந்துகிறேன்)

    தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பிறப்பது இப்பாடல். தலைவன் வரைவு நீட்டித்தான். தலைவியைப் பசலை நோய் (இளைத்து நிறம் மாறுதல்) பற்றுகிறது. இரவெல்லாம் அவள் தூங்குவதில்லை. காரணம், தலைவனை நினைத்து வருந்துவதே.

    “தாயே ! நான் சொல்வதை விருப்பத்துடன் கேள். என் தோழியின் ஒளியுடைய நெற்றியில் பசலை பற்றிக்கொண்டது. துன்ப மிகுதியால் வருந்தி மெலிந்தாள். குளிர்ந்த கடலின் அலை ஒலி கேட்கும் போதெல்லாம் அவனுடைய தேரின் மணி ஓசை என நினைத்து உறங்காமல் வருந்துகிறாள். அதனால் நானும் வருந்துகிறேன்” என்பது இப்பாடலின் பொருள்.

  • இரங்கல் - கற்பு வாழ்க்கையில்

  • தலைவனின் பிரிவுக் காலம் நீண்டதால் மாலைப் பொழுதிடம் மனம் குமுறி வருந்துகிறாள் கலித்தொகைத் தலைவி.

    மாலை நீ
    எம்கேள்வன் தருதலும் தருகல்லாய் ; துணைஅல்லை
    பிரிந்தவர்க்கு நோய்ஆகிப் புணர்ந்தவர்க்குப்
    புணையாகித்
    திருந்தாத செயின்அல்லால் இல்லையோ நினக்கு !

    (கலித்தொகை - 148 : 16-19)

    (கேள்வன் = கணவன்; தருதலும் தருகல்லாய் = தருதலையும் செய்யாய்; புணர்ந்தவர்க்கு = சேர்ந்தவர்க்கு; புணை = தெப்பம்)

    “மாலையே ! நீ அறிவு மயங்கினை ! என் கணவரை முன்பு போல் இங்கு நீ தரவும் இல்லை. எனவே நீ எனக்குத் துணை இல்லை. கணவனைப் பிரிந்த மகளிருக்குப் பிரிவு நோயின் வடிவமே நீ தான். கணவனைச் சேர்ந்த மகளிருக்கு இன்பத்தின் தெப்பமாக இருப்பதும் நீ தான். இவ்வாறு நன்மையே ஆகாத செயல்களைச் செய்வது அல்லாமல் வேறு நற்செயல்கள் உனக்கு இல்லையோ?” என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.

    இப்பாடல் வேந்தனுக்குத் துணையாகப் போருக்குச் சென்ற தலைவனைப் பற்றியது. நாடு கொள்வதற்குப் பிரிதல் களவு ஒழுக்கத்தில் இல்லை. எனவே இது கற்புக் காலத்துப் பிரிவு ஆகும்.

    இவ்வாறு நெய்தல் திணைப் பாடல்களில் இரங்கல் என்ற வருத்தம் தொடர்பான ஒழுக்கமே நிறைந்துள்ளது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1) ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?
    (விடை)
    2) நெய்தல்கலிப் பாடல்களைப் பாடியவர் யார்?
    (விடை)
    3) நெய்தலுக்குரிய சிறுபொழுது எது?
    (விடை)
    4) நெய்தலுக்குரிய விலங்குகள் யாவை? (விடை)
    5) நெய்தலுக்கு உரிய உரிப்பொருள் யாது? (விடை)
    6)
    பெருநீர் அழுவம் என்பதன் பொருளைத் தருக. (விடை)
    7)
    கொண்கன் என்பது யாரைக் குறிக்கும்? (விடை)
    8)
    'தண்கடல் படுதிரை கேட்டொறும் துஞ்சாள்' - யார்? (விடை)
    9)
    தலைவனின் பிரிவுக் காலம் நீண்டதால் கலித்தொகைத் தலைவி எதனிடம் புலம்புகின்றாள்? (விடை)