4.4 நெய்தல் திணையின் இயல்புகள்


வரைவு கடாவுதல் (மணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்), வரைவு நீட்டித்தல், பகற்குறி, இரவுக்குறி போன்ற அகவாழ்க்கை நிகழ்வுகள் குறிஞ்சியில் உள்ளது போல் நெய்தலிலும் உண்டு. அகநிகழ்வு அல்லாத, நெய்தலுக்கே சிறப்பாக உரிய சில நிகழ்வுகளையும் காண முடிகின்றது. அவற்றுள் சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன்கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக நினைத்தல், மடலேறுதல் போன்றவை குறிக்கத்தக்கன. இவை அகவாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்துச் சொல்லப்படுகின்றன.

4.4.1 சிற்றில் கட்டி விளையாடல்

கடற்கரை மணலில் இளம்பெண்கள் வீடு கட்டி விளையாடுவதைச் சிற்றில்கட்டி விளையாடல் என்பர்.

தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றிப் பகலில் மீண்டும் மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். ‘இதனை அன்னை அறிந்தால் தலைவியை வெளியில் அனுப்பாமல் வீட்டில் இருத்தி விடுவாள். எனவே விரைவில் மணந்துகொள்’ என்கிறாள் அகநானூற்றுத் தோழி.

ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளியென

(அகநானூறு - 60 : 9-11, குடவாயிற்கீரத்தனார்)

(ஊதை = வாடைக்காற்று; அடைகரை = நீர்க்கரை; கோதை = மாலை; ஆயம் = தோழியர்கூட்டம்; வண்டல் = சிற்றில்; தைஇ = கட்டி; ஓரை = விளையாட்டு)

ஊதைக் காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த மணற்குன்றை உடையது நீர்க்கரை. அக்கரையில் மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடினாலும் உன் உடம்பின் ஒளி வாடும். அங்குப் போகாதே” என்று சினப்பாள் தாய். அப்படிப்பட்ட தாய் உன் வருகையை அறிந்தால் தலைவியைக் காவலில் வைத்துவிடுவாள்” என்று தோழி கூறுகிறாள்.

அகநானூற்றுப் பாடலொன்று இளம் பெண்கள் விளையாடும் வரிமனையை (சிற்றில் அல்லது மணல்வீட்டை), கடல் அலை வந்து அழிக்கும் என்று குறிக்கிறது.

மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்

(அகநானூறு - 90 : 1-2, மதுரை மருதனிளநாகனார்)

(வெண்தலை = நுரையோடு கூடிய அலைகள்; புணரி = கடல்)

தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து மணல்வீடு கட்டி விளையாடுவது நெய்தல் நில இளம் பெண்களின் உற்சாகமான பொழுதுபோக்கு எனத் தெரிகிறது.

4.4.2 கூடல் இழைத்தல்

மணலில் பெரிதாக வட்டங்கள் வரைந்து, அவை இரட்டைப் படையில் அமைந்தால் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை நெய்தல் நிலப் பெண்களிடம் இருந்தது. மேலும் கண்ணை மூடி வட்டம் இழைக்கும் போது மணல் வட்டம் கூடாமல் போவதுண்டு. கூடாமல் போனாலோ அல்லது வட்டங்கள் ஒற்றைப் படையில் அமைந்தாலோ தலைவனின் வருகை இல்லை என்று நம்பினர்.

கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு.

தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள்.

இக்காட்சியைக் கலித்தொகையில் நல்லந்துவனார் காட்டுகின்றார் (142 : 24-29).

4.4.3 மீன் உணக்கல்

மணற்பரப்பில் மீன்களை வெயிலில் காயப் போடுவதை மீன் உணக்கல் என்று சொல்வதுண்டு. தம் உணவுக்காகவும், விற்றுப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தவும் மீன் உணக்கல் தொழிலைப் பரதவர் செய்வர். பண்டமாற்று = பொருள்மாற்று. அதாவது தன்னிடம் உள்ள ஒரு பொருளை (இங்குக் காய்ந்த மீன் கருவாடு) மற்றவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள வேறு பொருளைத் தன் தேவைக்கு வாங்குவது.

தலைவன் வரைவு நீட்டிக்கிறான். தலைவி இற்செறிப்பில் வைக்கப்பட்டுள்ளாள். ஒருநாள் தலைவியின் வீட்டு வேலிக்கு அப்பால் உள்ள இடத்தில் நிற்கின்றான் தலைவன். அவனிடம், விரைந்து மணம் செய்” என்று வலியுறுத்துகிறாள் நற்றிணைத் தோழி. அலர் (பழி) தூற்றும் தன் ஊரைப் பற்றி அவள் சொல்வது நயமான பகுதி ஆகும்.

உரவுக் கடல்உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவுநாறு விளங்குஇணர் விரிந்துஉடன் கமழும்
அழுங்கல் ஊர்

(நற்றிணை - 63 : 1-5, உலோச்சனார்)

(உரவு = வலிமை; உழந்த = வருந்திய; உணக்கிய = காயவிட்ட; புலவல் = புலவு நாற்றம்; இணர் = பூங்கொத்து; அழுங்கல் = பேரொலி)

“வலிமையுடைய கடலில் சென்று உடல் வருத்திப் பெரிய வலைகளை வீசி மீனைப் பிடிக்கின்றனர் பரதவர். மிகுதியான மீன்களைப் புதிய மணற் பரப்பில் காயப் போடுகின்றனர். ‘கல்’ என்று ஒலிக்கக்கூடிய சேரி முழுதும் புலவு நாற்றம் (மீன் நாற்றம்) வீசுகிறது. அச்சேரியை அடுத்திருக்கும் புன்னை மரங்கள் விழாவிற்குரிய மணமுடைய பூங்கொத்துகளை ஒரு சேர விரிக்கின்றன. புன்னையின் நறுமணம் மீன் உணக்கும் புலவு நாற்றத்தைப் போக்குகின்றது. அத்தகைய ஊரில் மக்கள் பழி தூற்றும் ஒலி மிகுகின்றது”.

பரதவர் மீன் உணக்கும் செய்தி இவ்வாறு உலோச்சனார் பாடலில் அழகான வருணனை ஆகியிருக்கிறது.

4.4.4 மீன்கறி ஆக்கல்

பிற நிலப் பகுதி மக்களை விட, நெய்தல் நிலப் பகுதி மக்களுக்கு அதிக அளவு உணவாவது மீன். மீனைச் சமைத்து உண்பது பற்றி நெய்தல் திணைப் பாடல்களில் செய்திகள் உள்ளன.

போந்தைப் பசலையாரின் அகநானூற்றுப் பாடல், மீன் உணவைப் பற்றிக் கூறுகிறது. (110 - 16-17)

தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். அதாவது தலைவியின் களவுக் காதலை வெளிப்படுத்தும் இடம் இது.

“தாயே ! தலைவியும் நானும் தோழியர் கூட்டத்துடன் சென்று கடலில் ஆடினோம். கடற்கரைச் சோலையில் மணல்வீடு கட்டியும், சிறுசோறு சமைத்தும் விளையாடினோம். சோலையில் சிறிது இளைப்பாறினோம். எம்மிடம் ஒருவன் நெருங்கி வந்தான். நான் மிகவும் இளைத்திருக்கிறேன். இந்த மெல்லிய இலைப் பரப்பில் நீங்கள் சமைத்த சோற்றை விருந்தினனாக உண்பதில் இடையூறு உண்டா?” என்று அவன் கேட்டான். இந்த உணவு உமக்கு ஏற்றது அன்று. இழிந்த கொழுமீனால் ஆன உணவு” எனச் சொன்னோம்”. என்று கடற்கரை நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறாள் தோழி. கொழுமீன் வல்சி என்று வரும் தொடர் மீன் உணவு என்று பொருள்படும்.

குடவாயிற் கீரத்தனாரின் பாடலில் (அகநானூறு - பாடல்60) தோழி தலைவனிடம் கூறும் கூற்றில் மீன் உணவு வகைகள் இடம் பெறுகின்றன.

‘பரதவனின் மகளான தலைவி அவனுக்கு உணவு எடுத்து வருகிறாள். உப்புக்கு விலையாகப் பெற்ற நெல்லினது அரிசியால் ஆன வெண்சோற்றின் மீது அயிலை(ரை) மீனை இட்டுச் சமைத்த அழகிய புளிக்கறியைச் சொரிந்து கொழுவிய மீன் கருவாட்டுப் பொறிக்கறியுடன் தந்தை உண்ண அவள் தருவாள்’.

புளிக்கறி என்பது புளிக்குழம்பைக் குறிக்கின்றது. அயிரை மீன் புளிக் குழம்பும், கொழுமீன் கருவாட்டுப் பொறியலும் பரதவரின் உணவு வகைகள் எனத் தெரிகின்றது.

4.4.5 இயற்கையுடன் உறவு கொள்ளல்

நெய்தல் நில மக்கள் இயற்கைப் பொருள்களையும் உறவாக நினைப்பார்கள். புன்னை மரத்தை உறவாக நினைத்த நெய்தல் மகளிரை நற்றிணைப் பாடலில் காணலாம்.

மணலில் புன்னைக் காயை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுமியர். வெள்ளிய மணலில் விளையாட்டாகப் புன்னைக் காயை அழுத்திப் புதைத்தாள் சிறுமியாய் இருந்த தலைவி. பின்னர் அக்காய் முளைக்க ஆரம்பித்தது கண்டு அச்செடிக்குப் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்தாள். செடியும் மரமாக வளர்ந்தது. தலைவியும் வளர்ந்தாள். தான் வளர்த்த புன்னை மரத்தை அவளது தங்கை என அறிமுகப்படுத்தினாள் அவள் தாய். அம்மரத்தின் கீழ் அவளது காதலன் அவளுடன் உறவாட வந்தான். அவள் நாணம் உறுகிறாள். அதைத் தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே

(நற்றிணை - 172 : 4-7, ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

(நுவ்வை = உன் தங்கை; நகை = சிரித்துவிளையாடல்)

இந்தப் புன்னை உங்களை விடச் சிறந்தது; உங்களுக்குத் தங்கை” என அன்னை கூறினாள். அத்தங்கையின் அருகில் நின்று உன்னோடு பேச நாணுகிறாள் தலைவி. ஆகவே நீ அவளை விரைவில் திருமணம் செய்து கொள் என்ற குறிப்புடன் தோழி பேசுகிறாள்.

இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையை வாழும் மனிதர்கள் இயற்கைப் பொருள்களையும் தம் உறவாக நினைப்பது அவர்தம் மென்மையான பண்புக்கு மிகச் சிறந்த சான்றாகிறது.