1.4 தமிழில் மொழிபெயர்ப்பு

தொல்காப்பியர் காலத்திலேயே மொழிபெயர்ப்பு என்ற தொடர் மரபியலில் பயன்படுத்தப் பட்டுள்ளமையை அறிகிறோம். தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் எனப்படுகின்ற களப்பிரர் ஆட்சியில் 'பெருங்கதை’ தமிழில் முதல் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மலர்வதைக் காண்கிறோம். ‘பிருகத்கதா’ என்ற வடமொழி உதயணன் கதையின் தமிழாக்கமே கொங்குவேளின் ‘பெருங்கதை’ என்று அறிகிறோம். பைபிளும், இலக்கியங்களுள் திருக்குறளுமே உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே

                       (தொல் : பொருள் : மரபியல் :98)

என்ற நூற்பாவில் ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்ற தொடரை எடுத்துக் கொண்டால் வேற்று மொழிப் படைப்பினைத் தமிழுக்கு ஆக்குதல் என்று பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு. திசைச் சொல், வடசொல் என்பனவற்றிற்கான இலக்கணம் சொல்லும் நிலையிலும் தமிழ்ப் படுத்தும் நிலை பற்றித் தொல்காப்பியர் பேசுகிறார். இவ்வடிப்படையில் நோக்குங்கால் மொழிபெயர்ப்பு என்ற தொடரை முதன்முதலில் கையாண்டவர் தொல்காப்பியர் என்பது புலனாகும். நிகண்டுகள், வடமொழி மாற்றம் என்பதற்கான சான்றுகளும் நமக்கு உண்டு. சங்க நூல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் சில வடமொழிக் கதைக்குறிப்புகள் சுட்டப்படும் நிலையைக் காண்கிறோம்.

1.4.1 இடைக்காலம்

சமஸ்கிருதத்திலிருந்து பல நூல்கள், குறிப்பாகத் தண்டியலங்காரம், பாரதம் போன்றன மொழியாக்கம் பெற்றன.

‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்’

என்று வரும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகள் மொழிபெயர்ப்புப் பற்றிச் சுட்டும் குறிப்புகளே. பகவத் கீதையை மொழிபெயர்த்த நிலை குறித்ததோர், அருமையான பட்டியலை ‘மொழிபெயர்ப்புக் கலை’ எனும் தமது நூலில் வளர்மதி விளக்குதலைக் காணலாம். நளவெண்பா போன்ற நூல்களும் தமிழாக்கச் சுவடுடைய நூல்களாக இருப்பதனை அறியலாம்.

1.4.2 ஐரோப்பியர் காலம்

ஐரோப்பியர் வரவால் ஏற்பட்ட ஒரு புதுநிலை மேலை நாட்டுக் கல்வி. அக்கல்வியின் தாக்கத்தால் உலகக் கண்ணோட்டத்துடன் கூடியதோர் அகன்ற பார்வை இந்திய மண்ணைத் தழுவியது. இந்தப் பின்னணியில் தமிழுக்கு மேனாட்டுக் கதை வரவுகள் பெருகின. பன்மொழி அகராதித் தோற்றங்களும் இக்கால மொழிபெயர்ப்புப் போக்கிற்கோர் எடுத்துக் காட்டாக அமைதலைக் காணலாம்.

அன்டிரிக் அடிகளார், போத்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழ் நூல் ‘த கேற்றகிசா’ (ஞானோபதேசம்) என்ற நூல் ஒரு தனித்தன்மை வகிக்கிறது. வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலை இலத்தீனில் மொழிபெயர்க்க முனைந்ததும், டாக்டர்.ஜி.யு.போப் திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சான்றாக அமையும்.