3.1 மொழி பெயர்ப்பாளர்
மொழிபெயர்ப்புப்பணி
யார் செய்ய இயலும்? முற்கால
நிலையில் ஒரே மருத்துவர் எல்லா நோய்களையும் கண்டறிந்து
மருந்து வழங்கி நலமாக்கியும்
வந்தார். ஆனால் இன்று,
இதயநோய், கண்நோய்,
மூட்டுநோய், நரம்பியல் நோய்,
காசநோய், காது - மூக்கு - தொண்டை நோய் - மருத்துவர்
என்று தனித்தனிச் சிறப்பு
மருத்துவர்கள் தனிவல்லுநர்
(Specialists) என்ற பெயரில் ஆல்போல்
தழைத்து
வளர்ந்துள்ளனர். அது போலத் துறைதோறும் மொழி பெயர்ப்புகள்
தோன்றி வரும் தன்மையினை,
அவ்வத்துறைக்குரியோர் செய்வதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
''இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை
அவன்கண் விடல்'' என்ற வள்ளுவர்
வாய்மொழிக்கேற்ப,
இருமொழியும் வல்லார் ஒருவரே
எல்லாத்துறை
மொழிபெயர்ப்பையும் செய்யாமல்,
துறைவாரியாக மொழி
பெயர்ப்புச்
செய்யும் வல்லாண்மை
இன்று சிறந்து
வருதலைக் காணுகின்றோம். கதைகளை மொழிபெயர்க்க
வல்லவர் கதைகளை மொழிபெயர்க்கிறார்கள். அரசு ஆணை,
கணிப்பொறி பற்றிய செய்தி மடல்கள், பொருளியல்
கட்டுரைகள், விளையாட்டுச் செய்திகள் போன்ற ஒவ்வொரு
துறையிலும் ஆழங்கால் பட்டவர்கள் இருமொழி வல்லுநர்களாக
இருந்து மொழிபெயர்ப்புச் செய்யும் போது மிகச்சிறப்பான
பலனை நாம் காண இயலும்.
3.1.1 மொழி பெயர்ப்பு
பண்டைக் காலம் தொட்டே மொழிபெயர்ப்பு நம் நாட்டில்
இருந்து வந்த ஒன்று என்றாலும் இலக்கிய நூல்களே
பெரும்பாலும் மொழி பெயர்க்கப்பட்டு வந்தன. அறிவியலும்
அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளும் வளர்ந்துள்ள
இந்நிலையில் மொழிபெயர்ப்பு இன்றியமையாத ஒன்று என்பது
மறுக்க இயலாத உண்மை. மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்த
மட்டில் அகராதியை மட்டும் வைத்துக்கொண்டு மொழி
பெயர்த்தால் உயிரோட்டம் இல்லாத மொழிபெயர்ப்பாகி விடும்.
மூலமொழியில் உள்ள ஒரு சிறு சொல் தவறாக
மொழிபெயர்க்கப்பட்டாலோ அல்லது எழுதப்பட்டாலோ அது
பெறுமொழிக்கு மாபெரும் தீமையாக அமைந்துவிடும் என்பது
வெளிப்படை. ஆகவே, மூலமொழியில் உள்ள கருத்தைத்
தெளிவாகப் புரிந்து கொண்ட பின், மயக்கம் தராத
சொற்களைக் கொண்டு மொழி பெயர்க்க வேண்டுமென்பது
இதனால் புலனாகிறது.
|