4.0 பாட முன்னுரை

ஒரு மொழியிலுள்ள சொல், சொற்றொடர், வாசகம் ஆகியவற்றின் கருத்தை மற்றொரு மொழியில் தெரிவிப்பதே மொழிபெயர்ப்பாகும். மூலநூலின் விளைவை - பிரதிபலிப்பை - தாக்கத்தை மற்றொரு மொழியில் கூடிய வரையில் உருவாக்கிக் காட்டுவதே மொழி பெயர்ப்பாகும். சொற்களை இட்டு நிரப்புவது மொழிபெயர்ப்பு ஆகாது. மூலத்திலுள்ள உயிர்நாடிக் கருத்துகளை இலக்கண, இலக்கிய மரபுக்கேற்ப மாற்று மொழியில் தருவதே உண்மையான மொழிபெயர்ப்பாகும். மூலநூல் கருத்துகள் ஊன்றிப் பார்க்கப்பட வேண்டுமேயன்றிப் சொல்பிரித்துப் பார்க்கப்படக் கூடாது. மொழிபெயர்க்கின்ற பணியை மொழிமாற்று எனவும், மொழிபெயர்ப்பு எனவும் இருவகையாகப் பிரித்து விளக்குகிறார் திரு.காழி.சிவ. கண்ணுசாமி. ''மொழிமாற்றல் என்பது எடுத்துக்கொண்ட ஒரு தொடரையோ பகுதியையோ அதன் கண்ணுள்ள ஒவ்வொரு சொல் அளவான் எடுத்து ஏற்றதோர் மறுமொழிச்சொல் அமைத்துத் தருதலாகும். இம்முறையினால் எடுத்துக் கொண்ட பொருளின் நுட்பமும் நயமும் கெடாது மொழி மாற்றப்படுதல் அரிதினுமரிதாகும்''. இதற்கு மாறாக மொழி பெயர்ப்பு என்பது எடுத்துக்கொண்ட பொருளினைத் தெள்ளத் தெளிவாக விளக்கிச் சிறிது கூட்டியும் குறைத்தும் விரித்தும் அமைக்கலாம் என்பது பலர் கருத்தாக விளங்குவதைப் பார்க்கலாம் என்று பேராசிரியர் மு.கோவிந்தராசன் தனது மொழித்திறன்களும் சில சிக்கல்களும் என்ற நூலில் கூறுகிறார்.