5.3 மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும்
மூலமொழிக் கருத்துக்கு மிக நெருங்கிய இணையினை
மாற்று மொழியிலும் ஆக்கித் தரும் மொழிபெயர்ப்பே
உயிரோட்டமுள்ள மொழிபெயர்ப்பாகக்
கருதப்படும். இதில்
பொருள் முதன்மையிடமும் நடை இரண்டாவது இடமும்
பெறும். இது சில அடிப்படைகளில் அமைகிறது. அதாவது,
(1) மொழிபெயர்ப்பில் முறைசார்
நிகர்மையைக் காட்டிலும்
ஆற்றல் மிகு நிகர்மையே முக்கியமானது.
(2) சொல்லுக்குச் சொல்
மொழிபெயர்ப்பைக் காட்டிலும் சூழல்
சார்ந்த மொழிபெயர்ப்பு பொருத்தமானது.
(3) வாசகருக்கு மரபுவழிப்பட்ட சொல் தொடர்களை விடப்
பழக்கமான சொற்கள் பொருத்தமானவை.
(4) புனைகதை, நாடகம் போன்றவற்றில் இடம் பெறும்
உரையாடல்களை மொழிபெயர்ப்பதில் இலக்கிய மொழி
வழக்கைக் காட்டிலும் பேச்சுமொழி வழக்கே
பொருத்தமானது.
5.3.1 மூலமும் மொழிபெயர்ப்பும்
துல்லியமான, நிறைவான மொழிபெயர்ப்பு மூலத்தைப்
பொருளில்தான் மிஞ்சக் கூடாதே தவிர, சொல்லும் விதத்தில்
கெடுபிடியான கட்டுப்பாடு விதிக்க இயலாது. மொழி
ஆழத்திற்கு ஏற்பக் கருத்துப்புனைவு செய்யப்பட வேண்டும்.
மூலமொழியாசிரியரின் கற்பனை, அவரது அனுபவம் போன்ற
வரையறைகளைத் தேர்வு செய்து,
தன் மொழிபெயர்ப்பில்
அவற்றைப் புகுத்த மொழிபெயர்ப்பாளருக்கு
அதிகாரம்
உண்டு. ஆனால் அவர் மூலநூல்
எல்லைக் கோட்டுக்குள்
நின்று மூலநூலாசிரியரின் அனுபவ
வரையறை மிஞ்சாத
வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே
நேரத்தில்,
மொழி பெயர்ப்பாளரின் இலக்கிய
நுகர்வு புலப்படும்
வகையில் சில எழுத்தோட்டங்கள் செல்லும் சூழ்நிலையையும்
கவிதை உணர்வு துளிர்ப்பதையும்
கட்டுப்படுத்த இயலாது.
மூலத்தை விஞ்சுவது கவிதை
மொழிபெயர்ப்பில் ஏற்றுக்
கொள்ளப்படும்; கவிதை அல்லாத மொழிபெயர்ப்புகளில்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மூலத்திலேயே பொருள்
மயக்கம் தரும்
இடங்கள் தோன்றுமானால், அவற்றைப் பிற
பார்வைக் குறிப்புக்களாகிய மேற்கோள்களால்
விரித்து உரைக்க
வேண்டும். எந்தச் சூழலிலும் மூலத்தை
மிஞ்சுதல் அல்லது
கடந்து போய் வேறு செய்திகளை விரித்து உரைத்தல் கூடாது.
• கவிதை மொழிபெயர்த்தல்
கவிதையைக் கவிதையாக மொழிபெயர்ப்பதே சாலச்
சிறந்தது. ஆனால், கவிதையை உரைநடையில்
மொழிபெயர்க்கவே கூடாது என்ற கட்டாயத்திற்கு இடமில்லை.
உணர்ச்சியும், கற்பனையும், சொல்செறிவும் நிறைந்து கவிதைத்
தன்மை செறிந்த கவிநயப் புலப்பாடு இருக்குமேயானால்
அந்த மொழிபெயர்ப்புச் சிறப்புடையதாக ஏற்றுக்
கொள்ளப்படும். மக்கள் விருப்புக்கு ஏற்பவும்,
மொழிபெயர்ப்பாளர் மனநிலைக்கு ஏற்பவும் கவிதையாகவும்,
உரைநடையாகவும் மொழிபெயர்க்கப் படலாம்.
• மொழிபெயர்ப்பின் தன்மை
ஒரு மொழிபெயர்ப்பு என்பது படிப்பதற்கு ஒரு
மொழிபெயர்ப்புப் போல இல்லாதிருப்பதே
சிறப்பானதாகும்.
ஒருமொழி அறிந்த வாசகன் அறிந்திராத மூலமொழிச்
சொல்லாட்சி, தொடர்கள், வாக்கிய அமைப்புகள், பிற
இலக்கணக் கூறுகள், சிறப்பு வழக்குகள், உவம உருவக
வழக்குகள் ஆகியவற்றை அப்படியே பெயர்ப்பு மொழியில் பெயர்ப்பது
வாசகனை மிரளச் செய்வதாய் அமைந்து விடும்.
வாசகனுக்காகத்தான்
மொழிபெயர்ப்பே தவிர
மொழிபெயர்ப்பாளரின் மனமகிழ்ச்சிக்காக அல்ல. ஆகவே
பெறுமொழி வாசகனுக்குப் புரியத்தக்க, பழகிப்போன
மொழி
இயல்புகளுக்கும், தனிச் சிறப்புத் தன்மைகளுக்கும் ஏற்ப
மூலத்தைப் பெயர்ப்பு மொழியில் தருதல் நல்லது.
• கதை மொழிபெயர்ப்பு
பிறமொழிபெயர்ப்புகளோடு
ஒப்புநோக்கும் போது
கதைகளை மொழிபெயர்த்துத் தருவது எளிமையானது.
மூலநூலின் வாக்கியங்கள், தொடர்கள், சொற்கள்
ஆகியவற்றுக்கு இணையான பெறுமொழி இணைகள் மொழிபெயர்ப்பில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்பதில்லை.
கதையின் தொனியும், நிகழ்ச்சிகளும் பிற கதைக் கூறுகளும்
விடுபடாமல் எடுத்தல் (மிகுதல்), படுத்தல் (குறைதல்) மாறாமல்
திருப்பு மையம் போன்ற செய்திகள் மாற்றமடையாமல்
இடம்பெறுமேயானால் அந்த மொழிபெயர்ப்பு மிகச் சிறந்தது
எனக் கொள்ளப்படும்.
|