6.0 பாட முன்னுரை

மொழிபெயர்ப்பு, ஒன்றை மற்றொன்றில் நகல் படுத்துகிறது. அதாவது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழியில் தருகிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பதற்கும் மொழியாக்கம் (Transcreation) என்பதற்கும் திட்டவட்டமான வேறுபாடுகள் உண்டு. இதில் முதலாவதைப் படைப்புக் கலையென்று கொள்ள வாய்ப்புக் குறைவு. ஆனால் இரண்டாவது ஒரு சிறந்த படைப்புக் கலையாகும். ஏனெனில் இரண்டாவதாக வரும் மொழி ஆக்கத்தில் ஒரு ஆக்கம் (படைப்பு) இருக்கிறது. எனவே தான் பொதுவாகத் தமிழில் மொழியாக்கம் எனப் பெருவாரியாகச் சொல்லுகிறோம். இது மூலத்தின் சாரத்தை உணர்ந்து தன்வயப்படுத்திக் கொள்ளும் போக்கிற்கு இடமளிக்கிறது.

''20ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பியல் துறையில் மாபெரும் மாற்றத்தைக் கண்டது. செய்தித் தொடர்பியல் துறை மொழிபெயர்ப்பால் வானளாவ வளர்ந்தது என்பதும் கருதுதற்குரிய உண்மையே. சொற்பொருளியலாளர்களும், உளவியலாளர்களும் தகவலைச் சரிவரத் தெரிவிக்காத செய்தித் தொடர்பு எதுவும் பயனற்றது'' என்று கருதுகின்றனர். இந்நிலையில் மொழிபெயர்ப்பியல் நிலையில் 5 வகை வளர்ச்சிகள் ஏற்பட்டு மொழிபெயர்ப்புக் கொள்கையிலும் நடைமுறையிலும் சில குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தின.

(1) அமைப்பு வகையிலான மொழியியல் பெருமளவில் விரிவுபடுத்தப் பட்டது.

(2) மொழிபெயர்ப்பின் தனித்த சிக்கல்களைக் களைவதற்கு அமைப்பு மாநாடு நடத்தி விவிலிய மொழிபெயர்ப்புக்கான காலாண்டு ஏட்டினைத் தொடங்கினர். இந்நோக்கிற்காக அவர்கள் மொழியியலோடு நெருங்கிய தொடர்புடையோர் ஆயினர்.

(3) ஒருங்கிணைந்த விவிலிய சமயிகள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு மாநாடு தொடங்கினர். இந்நோக்கிற்காக அவர்கள் மொழிபெயர்ப்பாளரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆனார்கள்.

(4) யுனெசுகோ குழு மூலம் ''போபல்'' வெளியீடான மொழி பெயர்ப்புக்குரிய ஏட்டில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புத் துறையின் தற்காலக் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றி அறிவதற்கு வழிவகுத்தன.

(5) இயந்திர மொழிபெயர்ப்பில் பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வளர்ச்சி பலகட்டங்களில் நிறைவேறியது. ''கணிப்பொறி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்புக்குத் தேவைப்படும் மொழிபெயர்ப்பு நடைமுறைகளை ஆய்வு நடத்தியுள்ளது'' என்று முனைவர் வீ. சந்திரன் வகைப்படுத்திக் காட்டுகிறார்.

மொழிபெயர்ப்பில் இலக்கியத் தரம் வாய்ந்த சொற்கள், இலக்கண அமைப்புகள் ஆகியவை தாம் இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பு சமூகத்தின் எந்தப் பிரிவினருக்காக உருவாகிறதோ அந்த வாசகரை மனத்தில் வைத்து, அவர்கள் புரிந்து கொள்ளும் சொற்களையும் இலக்கண அமைப்புகளையும் தாங்கி வெளிவர வேண்டும். நீண்ட இலக்கிய மரபு உள்ள மொழிகளில் வாசகர்களின் தேவைக்கேற்ப மூன்றுவித மொழிபெயர்ப்புகள் தேவைப்படும் என்பார் நைடா.

(1) பண்டை இலக்கியப் புலமையுடையோரும் சுவைக்கும் வண்ணம் இலக்கியமொழி நடையில் பெயர்த்தல்.

(2) தற்கால இலக்கியத்தில் பயிற்சியுள்ள இன்றைய நடுத்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மொழிபெயர்த்தல்.

(3) பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய பேச்சு மொழியில்பெயர்த்தல்.

இலக்கியப் பாரம்பரியமற்ற மொழிகளில் சாதாரண மக்களின் பேச்சு மொழியே மொழிபெயர்ப்பில் இடம் பெறுகிறது என்று டாக்டர்.சேதுமணி மணியன் குறிப்பிடுகிறார்.