|   1.2 மொழிபெயர்ப்பின்
 தன்மை 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        மொழிபெயர்ப்பின் உள்ளடக்கம் கலைத்துறை சார்ந்ததாக
இருக்கலாம்; அறிவியல் துறை சார்ந்ததாக இருக்கலாம்.
அப்படியே அதன் செயல்முறையும் கலைத் தன்மை
உடையதாகவும், அறிவியல் பண்பு உடையதாகவும்
விளங்குகிறது. கலைத்தன்மை சம்பந்தப்படாத அறிவியல்
தொடர்புகளோ, அறிவியல் நெறி சம்பந்தப்படாத
கலைத்துறையோ இல்லை. அறிவியல் தொடர்பான
பொருள்களையும், வரையறைகளையும், விதிகளையும், கருத்துப்
படிவங்களையும், 
செயல்முறைகளையும் வெளியிடுவதில்
மொழியின் கலைத்தன்மையைப் பற்பல இடங்களில்
காணமுடியும். உருவகங்களும், சந்தங்களும் அறிவியல்
                மொழிக்கு முற்றிலும் அப்பாற்பட்டவை அல்ல. 
 1.2.1 செயல்முறையும் நிகழ்வும் 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ஒரு மொழியின் அமைப்பையும் அதன்
 செயல்பாட்டையும் அறிவியல் முறையில் -
 ஓர் ஒழுங்குக்கு
உட்பட்ட விதிகளின் அடிப்படையில் 
- விளக்கமுடியும்.
இப்பணியை மொழியியல் ஆய்வு
 செய்கிறது. அவ்வாறு
மொழிபெயர்ப்பு என்பதும் செயல்முறையும் (Process) நிகழ்வும்
 (Phenomenon) என்ற இரு தளங்களில் செயல்படுகிறது.
 இதனை அறிவு அடிப்படையில் முறைப்படுத்தி விதிமுறைகளை
 வகுக்க முடியும். அதே வேளையில் கலைக்கே உரிய உணர்வின்
 ஆட்சி மிகுந்த ஆக்கங்களும் இந்தச் செயல்முறையிலும்
 நிகழ்விலும் இடம்பெற்றிருக்கும். எனவே இத்துறை அறிவியல்
 தன்மையும் கலைத்தன்மையும் ஒருங்கிணைந்த ஒன்றாகும். 
  1.2.2 மொழியாக்கம் 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து இன்னொரு
 மொழிக்கு மாற்றுவது.
 மொழிபெயர்ப்பு (Translation) என்பதற்கும், மொழியாக்கம் (Transcreation) 
 என்பதற்கும்
 திட்டவட்டமான வேறுபாடுகள் உண்டு. இதில் முதலாவது
 கலையல்ல. இரண்டாவது கலையாகும். ஏனென்றால் எல்லாக்
 கலைகளுக்கும் அடிப்படையாக அமைந்த ஆக்கத்தன்மை
 இதில் உள்ளது. அதனால் தான் இதனைத் தமிழில்
 மொழி ஆக்கம் என்கிறோம். இதில் மூலத்தின்
 சாரத்தை
 உணர்ந்து தன்வயப்படுத்திக் கொள்ளும்
 போக்கிற்கு இடம் உண்டு. மொழிபெயர்ப்பின் தன்மையை
 ஆழ்ந்து பார்த்தால் எல்லா மொழிபெயர்ப்புகளும் ஒரு
 வகையில் மொழியாக்கங்களே. ஆக்கம் என்பது அளவிலும்
 தன்மையிலும்
 வேறுபடுகிறதே தவிர ஆக்கம் என்பதே
 இல்லாத மொழிபெயர்ப்பு இல்லை என்று சொல்லலாம்.
 அறிவியல் மொழிபெயர்ப்பும் விதிவிலக்கல்ல. 
  1.2.3 தாய்த்தனிமம் 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         Parent element - தாய்த்தனிமம்
 Daughter element - சேய்த்தனிமம்  
ஆகிய இரண்டு தொடர் மொழிபெயர்ப்புகளை (Phrase level
translations) எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் Parent
என்ற சொல் தாய், தந்தை இருவரையும் உள்ளடக்கிய
பொதுச்சொல் (generic term). தமிழில் தாய் என்பது
பெற்றவளை மட்டும் குறிக்கும் தனிச்சொல். ஆங்கிலத்தில்
daughter என்னும் சொல் மகளை மட்டும் குறிக்கும்
தனிச்சொல். தமிழில் சேய் என்பது மகன், மகள் ஆகிய
இருவரையும் குறிக்கும் பொதுச்சொல். ஆனால்
மொழிபெயர்ப்பில் மூலத்தின் பொதுச்சொல்லுக்குப்
பெறுமொழியின் தனிச்சொல்லையும், மூலத்தின்
தனிச்சொல்லுக்குப் பெறுமொழியின் பொதுச்சொல்லையும்
நிகரனாகப் பயன்படுத்துகிறோம். இதனை மாற்றி, பெற்றோர்
தனிமம், மகள் தனிமம் என்று எழுதினால் மொழிபெயர்ப்பு
சிறக்கவில்லை. மூலத்தைத் தாய் என்றும் அதிலிருந்து
கிளைத்ததைச் சேய் என்றும் வழங்குவது தமிழ் மரபு.
ஆகவே தமிழ் மரபிற்கேற்ப மொழிபெயர்ப்பில் ஆக்கம்
நிகழ்கிறது. 
1.2.4 அறிவியல் மொழிபெயர்ப்பின் சிறப்புக் கூறுகள்  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கலைத்துறை
 மொழிபெயர்ப்புகள் போல் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு
 மொழிபெயர்ப்பது இல்லை. இதில் சொல்லுக்குச் சொல் ஆழ்ந்து
 மொழிபெயர்க்க வேண்டும். அறிவியல் மொழிக்கென்று சில
 சிறப்புக்கூறுகள் உள்ளன. இவற்றை அறிவியல்
 மொழிபெயர்ப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 அவை பின்வருமாறு: 
 
 
 |   | 
 (1) | 
 அறிவியல் செயல்முறைகளின் விளக்கமும்
 செயல்பாடுகளும் இடம்பெறுவதால், அதற்கேற்ற மொழிநடை அறிவியல்
 மொழியில் இடம்பெறுகிறது. | 
  
 
 |   | 
 (2) | 
 வினைமுதலாகிய (Subject) எழுவாய்க்கு முக்கியத்துவம்
 இல்லாததால் செயல்பாட்டு வினை ஆட்சி அதிகம் உண்டு. | 
  
 
 |   | 
 (3) | 
 பெயராக்க நடை (Nominalized style) அதிகம் கையாளப்படுவதால்
 சுருக்கத்திற்கும் எளிமைக்கும் இது உதவுகிறது. | 
  
 
 |   | 
 (4) | 
 செய்முறையைக் கூறுமிடங்களில் கட்டளை வாக்கியங்கள்
 அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. | 
  
 
 |   | 
 (5) | 
 பொருள்களின் பண்புகளைக் கூறும் வாக்கியங்களில் முக்காலத்திற்கும்
 பொதுவான தொடர்கள் வழக்கத்தில் உள்ளன. | 
  
  
   
 1.2.5 கலைத்துறை மொழிபெயர்ப்புகள்  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         கலைத்துறைகளான புனைகதை, நாடகம், கவிதை,
 சொற்பொழிவுகள், கட்டுரைகள், விளம்பரங்கள், சமய வரலாற்று
 இலக்கியங்கள் என அனைத்திலும் கருத்து அடிப்படையிலான
 மொழிபெயர்ப்புப் பின்பற்றப்படுகிறது.  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         அதிலும் புதினம், சிறுகதை ஆகிய புனைவுகளிலும்
 நாடகங்களிலும் வட்டாரவழக்குச் சொற்களைப்
 பயன்படுத்தினால், 
 அவற்றை,
  பெறுமொழியில்
 மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் என்னதான்
 பெறுமொழியை நன்கு உணர்ந்திருந்தாலும் அச்சிக்கல்
 அவருக்குச் சோதனையாக அமைந்து விடுகிறது. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         ஒருமொழியிலேயே வட்டாரவழக்குச் சொற்களில் பல
 விளங்குவதில்லை. இதே போன்று உறவுமுறைச் சொற்களும்
 சிக்கலை ஏற்படுத்துவது உண்டு.
 ஆங்கிலத்தில் Sister என்ற
 சொல்லும் Brother என்ற சொல்லும் Uncle என்ற சொல்லும்
 முறையே தமிழில் அக்கா, தங்கை; அண்ணன், தம்பி; மாமா,
 பெரியப்பா, சித்தப்பா என்று பல உறவுகளைச் சுட்டுவனவாக
 உள்ளன. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சொற்பொழிவுகளை மொழிபெயர்க்கும்போது உடனுக்குடன்
மொழிபெயர்ப்பு தேவைப்படுவதால், சொற்பொழிவாளரின்
உணர்ச்சி நடைக்கேற்ற மொழிபெயர்ப்பு உணர்ச்சிநடை
அமைவது அவசியம். அதில் வரட்டுத்தன்மை இருக்கக்கூடாது. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         விளம்பரங்களில் சுருக்கமும் உணர்த்து முறையில்
 தெளிவும் அவசியம். அதற்கேற்ப மொழிபெயர்ப்பு
 வாசகனை/கேட்போனை எளிதில் சென்று சேர்ந்து
 விற்பனையைப் பெருக்கும்
 முறையில் அமையவேண்டும். 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         சமய வரலாற்று இலக்கியங்களில் 
 காலப்பின்னணி
 அவசியம். அதற்கு ஏற்ற நிகரன்சொற்கள் அமைந்தால் இனிமை
 பயப்பதாக இருக்கும். 
  1.2.6 மொழிபெயர்ப்பில்
 கவனத்தில் கொள்ள 
 வேண்டியவை 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மொழிபெயர்ப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய சில
 கூறுகளை அறிவது அவசியம்.  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மொழிபெயர்ப்புகளில் 
 அடிக்குறிப்புகள் கையாளப்படுவது
 உண்டு. அதற்கு ஒரு வரைமுறை உண்டு. மிகமிகத் தேவை
 என்றால் ஒழிய 
 அடிக்குறிப்புகள் பயன்படுத்தல் கூடாது.
 அடிக்கடி பயன்படுத்தினால் அது ஆராய்ச்சிக் கட்டுரையாகத்
 தோன்றும். 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மொழிபெயர்ப்பு
 கலைத்துறையினதா
 அறிவியல்
 துறையினதா என்ற முடிவுக்குப் பின் கலைச்சொற்களை
 உருவாக்கவேண்டும். அக்கலைச் சொற்களையே 
 இறுதிவரை
 பயன்படுத்தவேண்டும். 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         ஓர் அறிவுத்துறையின் நோக்கம், பயன், விளைவு
 ஆகியவற்றிற்கு ஏற்ப அதை உள்ளடக்கித் தரும் மொழியின்
 இயல்பும் நடையும் வேறுபடுகின்றன. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மூலமொழியின் இயல்புக்கும் நடைக்கும் ஏற்ப
 மொழிபெயர்ப்பு மொழியாகிய பெறுமொழியின் இயல்பும்
 நடையும் அமையும். இதனால் ஓர் இலக்கிய மொழிபெயர்ப்பும்
 அறிவியல் மொழிபெயர்ப்பும் மொழிநடையில் முற்றிலும்
 வேறுபடுகின்றன. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         இலக்கியத்துறைகளிலும் கூட, புதினம், சிறுகதை
 மொழிபெயர்ப்பு ஒருவிதமாகவும்,
 நாடக மொழிபெயர்ப்பு
 ஒருவிதமாகவும், கவிதை 
 மொழிபெயர்ப்பு இன்னொரு
 விதமாகவும் அமைந்துள்ளன. 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         இரு மொழிபெயர்ப்பில் என்னென்ன முக்கியத்துவம்
 வாய்ந்தவை என்பதை அறிந்துகொண்டால் மொழிபெயர்ப்பில்
 சிக்கல் ஏற்படாது. 
  • மூலத்தின் செய்தி எதைப் பற்றியது?
 • யாரைப் பற்றியது?
 • எந்தக்
 காலக்கட்டத்திற்கு உரியது?
 • அதில் இடம்பெறும் இடங்கள் எவை?
 • பொருள்கள் எவை?
 • உயிரிகள் எவை?
 • அது விவரிக்கும் சூழல் (Situation) யாது? 
 என்ற மேற்கண்ட அனைத்தும் மொழிபெயர்ப்பில் முக்கிய
 இடம்பெற வேண்டும். 
 
 
  
 
 |    
 தன் மதிப்பீடு : வினாக்கள் - I   | 
  
 
 | 1. | 
    மொழிபெயர்ப்பின்
 நோக்கம் என்ன?  | 
  விடை | 
  
 
 | 2. | 
    தருமொழி
 என்றால் என்ன?  | 
  விடை | 
  
 
 | 3. | 
    பெறுமொழி
 என்றால் என்ன?  | 
 விடை | 
  
 
 | 4. | 
  வழிமொழி என்றால் என்ன? | 
  விடை
  | 
  
 
 | 5 | 
 நேரடிமொழிபெயர்ப்பு என்றால் என்ன? அது
 எம்மொழிபெயர்ப்பில் அதிகமாகப் பயன்படுகிறது? | 
 விடை | 
  
 
 | 6 | 
 தழுவல் என்றால் என்ன? | 
 விடை | 
  
 
 | 7 | 
 மொழிபெயர்ப்பு எத்தன்மையது? | 
 விடை | 
  
 
 | 8 | 
 மொழி ஆக்கம் என்றால் என்ன? | 
 விடை
					  | 
  
  
				  | 
  
  
			 |