3.1 இதழியல்

ஆங்கிலேயரின் வருகை என்பது தமிழ்நாட்டில் பல நிலைகளில் புதுமைகளைக் கொண்டு வந்தது. அயல்நாட்டினரின் வருகை இலக்கிய நிலையில் புது வகைகளை உருவாக்கியதோடு, உரைநடை என்ற புதுவகைக்குக் களமாக அமைந்தது. தமிழில் உரைநடை பரமார்த்த குரு கதையிலிருந்து தொடங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ அதே காலத்தில் இதழ்களின் தொடக்கமும் காண்கிறோம். பேசும்போது பயன்படும் உரைநடை வடிவமே எழுதப்படும் போது தொடக்கத்தில் உயிர் ஓட்டமாக இருந்தது. இதழ்களுக்கென ஒருவகை உரைநடை உருவானது. இதழியலில் இன்றும் தொடர்ந்து நிலவும் நடை வழக்கத்திற்கு மாறுபட்டதாகவும், எதிர்பார்ப்பைத் தூண்டும் தன்மையுடையதாகவும் அமைந்துள்ளது.

3.1.1 இதழியலின் தொடக்கக் காலம்

இந்தியாவில் முதல் அச்சகம் 1556இல் கோவாவில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து சுமார் 80 ஆண்டுகள் காலம் ‘ஒ எரால்டோ’ என்ற போர்த்துக்கீசிய நாளிதழ் வெளிவந்தது. அது 1633ஆம் ஆண்டு நின்றுபோனது. அதனை இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே போர்த்துக்கீசிய நாளிதழாகக் கருதினர். பேராசிரியர் அந்தோணி என்ற போர்த்துக்கல் இறையியல் பேராசிரியர் ‘இறையியல் உரைகள்’ (Catechism) என்ற நூலை 1556இல் அச்சிட்டார். அதுவே முதல் நூலாகும். புனித சேவியர் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார். அதனை மொழிபெயர்த்துத் தமிழில் தந்தவர் அண்டிறிக் பாதிரியார் ஆவார். இவரைத் ‘தமிழச்சுத் தந்தை’ என்பர். இதுதான் முதல் தமிழ் நூலாகவும் கருதப்படுகிறது. அக்காலத்து இறையியல் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்ததால் இவரைத் “தமிழ் மொழிபெயர்ப்புத் தந்தை” என்றும் போற்றுவர். 1779இல் பெப்ரிசியஸ் பாதிரியார் எழுதிய “தமிழும் ஆங்கிலேசுமாயிருக்கிற அகராதி’ (A Malabar and English Dictionary) என்ற நூல் வெளியானது. இது தமிழ் ஆங்கில அகராதிகளின் முன்னோடி எனலாம்.

முதல் இதழ் எனக் கருதப்பட்ட ‘தமிழ் மேகசின்’ - இல் (1856) பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன்முதலாக வெளிவரத் தொடங்கின.

• இதழ்களின் நோக்கம்

தகவல் தொடர்புச் சாதனங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமாகிய இதழ்கள் இந்தச் சில நூற்றாண்டுகளில் செய்திகளை வெளியிடுவதனைக் கடமையாகக் கொண்டிருந்தன. அவற்றுடன் அறிவியல் செய்திகளையும் வெளியிடுவது அவற்றின் பணிகளில் ஒன்றாக இருந்தது. சில நேரம் அறிவியல் செய்திகளை மட்டுமே தாங்கிய இதழ்களும் வெளிவந்துள்ளன. இவை, குறிப்பாக மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பலவற்றைக் கொண்டு இருப்பதால், மொழிபெயர்ப்புப் பணியில் இதழ்களும் ஈடுபட்டன என்பதை அறியலாம்.

3.1.2 பிற துறை இதழ்கள்

தமிழில் இலக்கியம், சமூகம், தவிர்த்த பிற துறைகளான மருத்துவம், சட்டம், வணிகம், தொழில், சோதிடம், கல்வி, அறிவியல், கிராம நலம், வெளிநாட்டுத் தகவல், உள்நாட்டு வளர்ச்சி, திரைப்படம் போன்ற துறைகளிலும் பெருவாரியான இதழ்கள் வெளிவந்துள்ளன.

• மருத்துவ இதழ்கள்

இவற்றில் ‘அகத்தியர் வர்த்தமானி’ (1870) -யைத் தொடர்ந்து ‘சுகசீவனி’ (1887) என்ற பெயரில் பெங்களூரிலிருந்து வெளிவந்தது. இதில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஆங்கிலத்தில் அமைந்த கட்டுரைகளும் இடம்பெற்றன. 1891இல் ‘சுகாதார போதினி’ என்ற இதழில் பொதுச்சுகாதாரம் பற்றிய செய்திகள் வெளியாயின.

• சட்ட இதழ்கள்

சட்டத்துறை சார்ந்த செய்திகளைத் தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்ட இதழ்களைக் காணலாம். சித்தார்த்த சங்கிரகம் (1887) என்ற இதழ் முதல் இதழாகக் காணக் கிடைக்கிறது. அத்துடன் மாதாந்தர சட்டப் பத்திரிகை (1893), வக்கீல் குமாஸ்தா ஜர்னல் (1914), ஹைக்கோர்ட்டுத் தீர்மானங்கள் (1914), பத்திர லேகரி (1922), வக்கீல் (1944), லாயர் போன்ற இதழ்களும் வெளியாகியுள்ளன.

• வணிகம் பற்றிய இதழ்கள்

வணிகச் செய்திகள், வணிக வரிச் செய்திகள் எனப் பல செய்திகளை வெளியிட்ட இதழ்களாகப் பின்வரும் இதழ்களைக் காணமுடிகிறது. வர்த்தகமித்திரன், தனவணிகன் (1930), வர்த்தக ஊழியன் (1932), வியாபாரக்குரல் (1954), வர்த்தகக் குரல் (1964), வணிகச் செய்தி (1949), விற்பனைவரித் தகவல் (1964), வர்த்தக உலகம் (1967).

• தொழில்

விவசாய தீபிகை (1904), விவசாய வர்த்தினி (1907), கருவிகள் (1909), ஏல விவசாயி (1926). மேழிச் செல்வம் (1943), உழவர் நாடு (1949), விவசாய உலகம் (1916), உரமும் பயிரும் (1962), உழவுத் தொழில், ஏர் முரசு (1967), விவசாய விஞ்ஞானம், டெய்லி திருப்பூர்க் காட்டன் பிரஸ் (1947), டைலர் (1948), நடிகன் குரல் (1954), தையற்கலை, உஷா தையல்கிளப், மோட்டார் (1958), டிரான்சிஸ்டர் மெகானிசம், மோட்டார்த் தொழில் (1966), பனைச்செல்வம், செய்தி மடல் (சக்தி சர்க்கரை ஆலை) எனப் பல்வேறு தொழில் சார்ந்த செய்தி இதழ்கள் வெளிவருகின்றன.

• அறிவியல் மற்றும் திரைப்பட இதழ்கள்

1897ஆம் ஆண்டு, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையால் தொடங்கப்பட்டு 1904வரை வெளிவந்த ‘ஞானபோதினி’ என்ற இதழில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளே அதிகம் இடம்பெற்றன. இதேபோன்று கல்யாண சுந்தர நாடன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழில் சமயம், தத்துவ ஞானம் துறை சார்ந்த கட்டுரைகளுடன் இயற்பியல், வேதியியல் கட்டுரைகளும் இடம்பெற்றன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழ் நூல்கள் கணிசமாக வெளிவந்தன. அதே போன்று இதழ்களும் வெளியாயின. இதில் ''தொழிற்கல்வி'' இதழாக 1914இல் வெளிவந்தது. அதே ஆண்டில் மருத்துவ அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதற்காக ''வைத்தியக்கலாநிதி'' என்ற இதழ் வெளியானது. 1911இல் தமிழர் கல்விச் சங்க வெளியீடாக வந்த ‘தமிழர் நேசன்’ என்ற இதழ் ஒரு தனித்துவமான போக்கில் அறிவியல் செய்திகளையும் குறிப்புகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட முனைந்தது. அறிவியல் செய்திகளை வெளியிடுவதற்கென்றே சில இதழ்கள் வெளிவரத் தொடங்கின. தமிழ்க்கடல் (1933), மணிமாலை (1935), கலைக்கதிர் (1945), தோல் விஞ்ஞானம் (1962), இளம் விஞ்ஞானி (1965), களஞ்சியம் (1979) எனப் பல இதழ்கள் வெளியாயின.

தமிழகத்தில் அறிவியலின் அளவற்ற வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் திரைப்படம் குறித்த இதழ்கள் பலவும் வெளியாகியுள்ளன. முதல் திரைப்பட இதழ் சினிமா உலகம் (1935) ஆகும். கே.சுப்பிரமணியம் ‘பிலிம் மெயில்’ என்ற இதழை வெளியிட்டுள்ளார்.

நாடோடி (1938), பேசும்படம் (1941), சினிமாக் கதிர் (1952), தமிழ் சினிமா (1953), தென்றல் திரை (1953), சினிமா ஸ்டார் (1954), மதி ஒளி (1955), குண்டூசி (1957), நாரதர் (1958) போன்ற இதழ்கள் வெளிவந்துள்ளன.

3.1.3 அறிவியல் இதழ்களும் மொழிபெயர்ப்பும்

அறிவியல் துறையே தமிழ்மொழிக்குப் புதுவரவு என்று கருதும் நிலையில் அறிவியல் இதழ்களும் மொழிபெயர்ப்புப் பணியின் மூலம் தமிழில் பல அறிவியல் செய்திகளைக் கட்டுரைகளாக வெளியிட்டன. பல நூல்களும் மொழிபெயர்ப்பாகத் தமிழில் தரப்பட்டன. அந்த வகையில் அதிக அளவில், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும், தழுவல் என்ற வகையில் மாணவர்களுக்கான கட்டுரையாக வெளிவந்துள்ளவைகளையும் இதழ்கள் வெளியிட்டன. இந்த வகையில் தொடக்கக் கால அறிவியல் இதழ்கள், மருத்துவம், பொது அறிவியல் ஆகிய துறைகளுக்கான அறிமுக நூல்களைக் கட்டுரைகளாகவும் வழங்கி அறிமுகப்படுத்தின, ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவமுறை பற்றிய கட்டுரைகள், குறிப்பாகக் குழந்தை நலம், மற்றும் மருத்துவ முறைகளை விளக்கும் கட்டுரைகள் ''ஆரோக்கியமும் சிசுவின் சுகவாழ்வும்'' என்ற மாத இதழில் வெளிவந்தன.

தமிழக அளவில் மட்டும் அல்லாமல் பன்னாட்டு அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும், பொருட் செறிவுடனும் தமிழில் தர முடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தி நிலைநாட்டிய பெருமை ‘யுனெஸ்கோ கூரியர்’ என்னும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். இவ்விதழ் 34 மொழிகளில் வெளிவருகிறது. இவ்விதம் 1967 ஜூலை முதல் தமிழில் வெளிவரத் தொடங்கியது.

இது கல்வி, அறிவியல், பண்பாடு இதழாக அமைந்திருந்தது. இருப்பினும் மிக அதிக அளவில் இடம் பெறுவது அறிவியல் கட்டுரைகளே ஆகும். அறிவியல் செய்திகளை விளக்குவதற்கு விளக்கப்படங்கள் இன்றியமையாதன ஆகும். பக்கந்தோறும் படங்களும், விளக்கக்குறிப்புகளும் வெளியாகும் இந்தத் திங்கள் இதழில், தற்கால அறிவியல் துறைகள் பலவற்றில் உள்ள தற்போதைய முன்னேற்றங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி அத்துறைகளைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேல்நாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இந்த இதழில் வெளியாகும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படாவண்ணம் மூலக்கட்டுரை போன்ற மொழி அமைப்பில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

இவ்விதழ் வாயிலாகப் புதிய கலைச்சொற்கள், கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் கலைச்சொற்கள், உருவாக்கப்பட்டன.

தமிழ் நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகளை அவ்வப்போது வெளியிடும் நாளேடாகத் தினமணி திகழ்கிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பல்வேறு பிரச்சினைகளை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாக அமைந்து வருகிறது.

அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் வளர்ந்த வளர்ச்சியை மதிப்பிடுவதோடு, அறிவியல் வளர்ச்சிக்காக எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கருத்தரங்குகள் வாயிலாகப் பெற்ற கட்டுரைகளையும் வெளியிடுகிறது.

3.1.4 இதழ்களில் கலைச்சொல்லாக்கம்

தொடக்கக் கால இதழ்களில் அறிவியல் செய்திகளுக்கு நிறைய இடம் அளிக்கப்பட்டது. அதற்காகத் தமிழில் புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன.

1916 இல் இராஜாஜியும், டி.ஜி. வெங்கடசுப்பையாவும் இணைந்து தமிழில் விஞ்ஞானச் சொற்களைப் படைக்க, ''தமிழ் விஞ்ஞானச் சொற் கழகம்'' தொடங்கினார்கள். அதன் சார்பில் ''ர்னல் ஆப் த டமில் சயின்டிபிகல் டெர்ம்ஸ்'' என்ற ஆங்கில இதழை நடத்தினார்கள்.

விவேக போதினி’ (1929) இதழில் அறிவியல் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றில் சில வருமாறு: ஆக்சிஜன் - உயிர்க்காற்று; ஹைட்ரஜன் - நீர்க்காற்று; பிரஸ் - பீலி; பில்டர் பேப்பர் - வடிதாள்; டெஸ்ட் ட்யூப் - ஆய்குழல்; பிளானெட் - கோள்; பவுண்டன்பென் - ஊற்றுக்கோல்; டெசிமல் சிஸ்டம் - பதின்மை ஒழுங்கு, இந்தத் தமிழ்ச் சொற்கள் நடைமுறைக்கு வராமலே போய்விட்டன.

புதிய அறிவியல் செய்திகளைத் தமிழ் இதழ்கள் வழியாகத் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். அவர்கள் பெ.நா. அப்புசாமியும் சுத்தானந்த பாரதியாரும் ஆவர்.

1933இல் சென்னையிலிருந்து வெளிவந்த ''தமிழ்க்கடல்'' ஒரு அறிவியல் மாத இதழாகும். இதன் ஆசிரியர் கா.நமச்சிவாய முதலியார் ஆவார். அதன் முதல் இதழில் ‘பூமி சாத்திரம்’. ‘வான சாத்திரம்’, ‘தாவர சாத்திரம்’ 'இரசாயன சாத்திரம்'. ‘பௌதிக சாத்திரம்’ என்ற கட்டுரைகளை எழுதினார்.