4.2 மேலை இலக்கிய மொழிபெயர்ப்புகள்

மேலை நாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை இப்பகுதி சுட்டிக் காட்ட முயற்சி செய்கிறது.

பண்டைக் காலத்திலிருந்தே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய கிரேக்க ரோமானிய மொழிகள் ஏராளமான கலைச்செல்வங்களையும், இலக்கியச் செல்வங்களையும் உலக மொழிகளுக்கு வழங்கியுள்ளன. தற்காலத்தில் அம்மொழிகள் வழக்கில் இல்லை என்றாலும், ஆங்கில மொழியில் கலந்துள்ள சொற்களின் வாயிலாக அவற்றைப் பற்றிய உண்மைகளை அறிய முடிகிறது.

4.2.1 கிரேக்க ரோமானிய மொழிகள்

கிரேக்க மொழியில் தோன்றிய பிளேட்டோவின் மாபெரும் உரையாடல்கள் எனும் நூல் தொகுதி உலகப் புகழ் வாய்ந்தது. அதில் இரண்டு குறு உரையாடல்கள் (Phaebo, Apology) சிந்தனையாளர் சாக்ரடீசின் கடைசி நாட்கள் சிலவற்றைச் சித்திரிக்கின்றன. அவற்றை முதன்முதல் தமிழாக்கம் செய்து சோக்ரதர் என்ற பெயரில் தமிழுலகிற்கு சி. இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) வழங்கியுள்ளார். மேலும் இவர் ரோமாபுரிப் பேரரசன் மார்க்கஸ் அரேலியஸ் எழுதிய நாட்குறிப்பினை, ஆத்ம சிந்தனை என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். தமிழில் மொழிபெயர்ப்புக் கலையின் முன்னோடியான வெ.சாமிநாத சர்மா அவர்கள் பிளேட்டோவின் குடியரசு (Plato’s Republic) நூலைச் சிறந்த முறையில் தமிழில் தந்துள்ளார். இதே நூலைப் பேராசிரியர் இராமாநுஜாச்சாரியார் மூலம் பிளேட்டோவின் அரசியல் எனும் நூலாகத் தமிழாக்கம் செய்து சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.

சாக்ரடீஸ், பிளேட்டோவைத் தொடர்ந்து அரிஸ்ட்டாட்டிலின் கவிதையியலை (Poetics) அ.அ.மணவாளன் மொழிபெயர்த்து அரிஸ்ட்டாட்டிலின் கவிதையியல் என்ற பெயரில் தந்துள்ளார்.

ஹோமரின் இலியத் என்னும் காப்பியம் தமிழில் முழுமையாகக் கீழ்த்திசைச் சுவடிநூல் நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் போன்று ஹோமரின் ஒடிசி என்ற காப்பியமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸோபோக்ளிஸ் எழுதிய கிரேக்க நாடகம் எடிபஸ் வேந்தன், மன்னன் ஈடிபசு என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

4.2.2 எபிரேய மொழி

எபிரேய மொழியில் உள்ள விவிலியம், சென்ற நூற்றாண்டில் முதன் முதலாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணத்து சைவ சித்தாந்தி ஆறுமுக நாவலருடைய மேற்பார்வையில் இலங்கை கிறித்தவச் சங்கம் தமிழாக்கம் செய்ததாகத் தெரிகிறது. பழைய ஏற்பாட்டில் உள்ள சால்ம்ஸ் (Psalms) என்னும் துதிப்பாடல்களைத் தேவ சங்கீதம் என்ற பெயராலும், சாலமனின் Song of songs என்னும் பெயராலும், தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் முதல் பல கிறித்தவத் தமிழ்ப்புலவர்கள் தமிழாக்கம் செய்துள்ளனர்.

4.2.3 பாரசீக மொழி

தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள் பலர், பாரசீக மொழியில் உள்ள கதைகள், உரையாடல்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றைச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். துத்தி நாமா என்ற கிளிக்கதை, பெரிசிலியன் ஸ்டோரிஸ், மனோரஞ்சிதத் திரட்டு, ஹிகயட் லாடியா போன்ற சிறுகதை நூல்கள் பாரசீகக் கதைகளின் தமிழாக்கமாக விளங்குகின்றன. குலிஸ்தான் என்னும் பாரசீக அறநூல் பூங்காவனம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் வாய்ந்த உமர்கய்யாமின் பாடல்கள், தமிழில் பன்னிரண்டு அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் மொழிபெயர்ப்புச் செய்த அறிஞர்களுக்குப் பாரசீக மொழிப்பயிற்சி இல்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தில் பிட்ஜெரால்டு (Fitzerald) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆங்கில நூலைத் தழுவி, தமிழாக்கம் செய்துள்ளனர். இந்தப் பன்னிரண்டு மொழிபெயர்ப்புகளுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சாமி சிதம்பரனார், ச.து.சு.யோகியார் ஆகிய மூவரும் செய்துள்ள மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு வலிவையும் பொலிவையும் ஊட்டியுள்ளன.

4.2.4 அராபிய மொழி

இஸ்லாமிய சமூகத்தின் புனித மொழி அரபு ஆகும். இம்மொழியில் உள்ள புனித மறையான திருக்குர்ஆனை இதுவரை ஏழு அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் அரபு மொழியில் உள்ள கதைப்பாடல்கள், காவியங்கள், சூபி தத்துவ விளக்க நூல்கள் முதலியன தமிழில் தரப்பட்டு உள்ளன. அரபுக் கதைகள் பல சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளில் வளமிக்க மொழிகள் அரபும் பாரசீகமும் ஆகும். அரபு மொழிகளில் ஏராளமான செய்யுள் இலக்கியங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.

அரபு மொழிக் கதைகள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற அரபுக் கதைத் தொகுப்பை நான்கு தமிழ் அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தொகுப்பு மட்டும் இல்லாமல், அலாவுதீன் அல்லது அற்புதத் தீபம், தாவீது கதை போன்ற அராபியப் புதினங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

இஸ்லாம் சமயக் கவிஞர் இக்பாலுடைய கவிதைகள் இக்பால் கவி அமுதம், இக்பாலின் ஞானோதயம் என்னும் பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கலீல் ஜிப்ரான், ஜலாலுதீன் ரூமி முதலியோரின் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் மக்கள் படித்து அறியக் கூடியனவாக உள்ளன.

அனைத்துத் துறைகளிலும் இயற்றப்பட்ட அரபு மொழி நூல்கள் ஸ்பெயின், சிசிலி, சிரியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புப் பிரதியெடுப்புப் பணிகள் வாயிலாக, 12ஆம் நூற்றாண்டில் இருந்து மறுமலர்ச்சிக் காலத்திற்குள் லத்தீன் மொழியில் வெளிவந்து விட்டன.

மேலை நாடுகளில் அக்காலத்தில் மொழிபெயர்ப்புத் தரமும் அறிவுத் திறனும் குன்றியிருந்த போதிலும் இடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் மேலைநாடுகள் முழுவதிலும் இந்த இலத்தீன் மொழிபெயர்ப்புகள் அறிவு வேட்கையை அதிகப்படுத்தின. உயிரியல் துறையில் பண்டைக் காலத்தவரின் புகழ் மிகு சாதனைகளை அரேபியர் பேணிக் காத்தனர். அதோடு அவர்களே தேடிச் சேர்த்த புதிய விளக்கங்கள் மானுட அறிவை மேலும் வளப்படுத்தின. அனைத்துலகச் சமுதாய நலனுக்காகவும் பணிபுரிந்தன.

கண்நோய் மருத்துவத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய சாதனைகள் பண்டைய கிரேக்கர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது எழுந்தவையே ஆகும். கண்நோய் மருத்துவம் பற்றி தாலமி எழுதிய ஆய்வு நூல் தொடக்க நாளிலேயே அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அரபு பகுதியை அடிப்படையாகக் கொண்ட இலத்தீன் மொழிபெயர்ப்பு ஒன்று 12ஆம் நூற்றாண்டில் சிசிலியில் உருவாக்கப்பட்டது. கிரேக்க மூலமும் அரபு மொழிபெயர்ப்பும் மட்டும் எஞ்சியுள்ளன.

அரபு நூலாசிரியர்கள் சிலர் தங்களுடைய நூல்கள் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டதால் இலத்தீன் வடிவமாக்கப்பட்ட பெயர்களைத் தாங்கியவர்களாகப் புகழ் பெற்றார்கள்.

4.2.5 பிரெஞ்சு மொழி

ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு மொழியும் இத்தாலி மொழியும் இனிமை வாய்ந்தவை ஆகும். இவற்றின் இலக்கிய வளம் உலகப் புகழ் வாய்ந்தது. பிரெஞ்சு மொழியின் கவிதைகள் பெருமளவில் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை. பிரான்ஸின் தேசிய கீதத்தைச் சுப்பிரமணிய பாரதியார் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அது புதுவை மக்களால் பெரிதும் போற்றப்பட்ட நாட்டுப் பாடலாகும். பிரெஞ்சு மொழியின் சிறப்பு வாய்ந்த புதின ஆசிரியர்களான அலெக்சாண்டர் டூமாஸ், எமிலி ஜோலா, மாப்பசான் போன்ற படைப்பாளிகளின் புதினங்கள் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவை யாகும்.

ஏழை படும் பாடு என்ற பெயரால் சுத்தானந்த பாரதியாரும், அம்பலவாணன் அல்லது நாவாய்க் கைதி என்ற பெயரில் பி.எஸ். சுப்பிரமணியனும், விக்டர் யூகோவின் லெஸ் மிசரபிள் என்ற பிரெஞ்சு நாவலைத் தமிழில் தந்துள்ளனர். அலெக்சாண்டர் டூமாசின் லீகாம்டே மாண்டி கிறிஸ்டோ என்ற நாவல், மாண்டி கிறிஸ்டோ பெருமகன் எனவும், அமரசிம்மன் எனவும் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.

அலெக்சாண்டர் டூமாசின் திரி மஸ்கடியர்ஸ் என்ற நாவலை, அன்னியின் காதல் எனவும், மூன்று வீரர்கள் எனவும் மூன்று போராளிகள் எனவும் தமிழ்ப்படுத்தியுள்ளனர். விக்டர் யூகோவின், லோம்கிரி எனும் புதினத்தைச் சுத்தானந்த பாரதியார் இளிச்சவாயன் எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய Toilers of the sea கதையைக் கடல் மறவர் எனவும் கடல் வேட்டை எனவும் மொழிபெயர்த்துள்ளனர்.

வான்வெளிப் பயணத்தைப் பற்றி ஜூல்ஸ் வோர்ன் என்பவர் எழுதிய கற்பனைக் கதைகளை ஆகாசப் பிரயாணம் எனவும் 80 நாளில் உலகம், வானவெளியில் ஐந்து வாரங்கள் எனவும் பலவாறாக மொழிபெயர்த்துள்ளனர்.

எமிலி ஜோலாவின் ஜெர்மினல் எனும் புதினத்தைச் சுரங்கம், தப்பிப் பிறந்தவள் என்ற பெயர்களில் தமிழில் தந்துள்ளனர். அவரது நாநா என்ற புதினத்தை, கசங்கிய மலர் எனவும் தாசியின் மகள் எனவும் பல்வேறு பெயர்களில் தமிழ்ப் புதினங்களாகப் பெயர்த்துள்ளனர். மாப்பசானுடைய கதையும் கருத்தும், காதல் சக்கரம், வாழத் தெரியாதவன் போன்றனவும் புதினங்களாகத் தமிழில் வெளிவந்துள்ளன.

அனதோல் பிரான்ஸ் என்பவரின் ராஜிவாணி என்னும் புதினத்தை, சாது சவானி என்று தமிழாக்கியுள்ளனர். இவை தவிர வேறு பல புதினங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

• நாடகங்கள்

ஐரோப்பிய மொழி நாடகங்களில் பிரெஞ்சு மொழி நாடகங்கள் நடப்பியல் பண்பு வாய்ந்தனவாகப் போற்றப்படுகின்றன. பிரெஞ்சு மொழியை வளப்படுத்திய நாடக ஆசிரியர்களுள் மோலியர் முதன்மையானவர். அவரது நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தைப் பம்மல் சம்பந்த முதலியார் காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவலாக அமைத்துள்ளார்.

இதே நாடகத்தை பி.ஸ்ரீ.ஆச்சார்யா என்பவர், குப்பன் பித்தலாட்டங்கள் எனத் தமிழ்ப்படுத்தியுள்ளார். மோலியரின் சிறப்பு மிக்க நாடகங்கள் இரண்டனை கே.எஸ். வெங்கட்ராமன் என்பவர் இரு நாடகங்கள் என்ற படைப்பாக வெளியிட்டுள்ளார். இரசின் என்னும் நாடக ஆசிரியரின் பிரித்தானிக் குயில் எனும் நாடகத்தை வீழ்ச்சி என்ற பெயரில் ச.கிருஷ்ணராஜா தமிழாக்கம் செய்துள்ளார்.

• கட்டுரைகள்

சிந்தனை வளமும் ஆழமும் வெளிப்படும் வகையில் அமைந்தவை பிரெஞ்சு மொழிக் கட்டுரைகள். பல்வேறு துறைகளின் சிந்தனைக் கருவூலமாக விளங்குகின்ற ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் (The Social contract theory) என்ற நூல் இதற்கு ஒரு சான்றாகும். இந்நூல் சமுதாய ஒப்பந்தம் என்ற பெயராலும் சனநாயகத் தத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பெயராலும், சமூக ஒப்பந்த நெறி என்ற பெயராலும் தமிழில் தரப்பட்டுள்ளது. இவற்றோடு, வால்டேர் முதல் மாப்பசான் வரை என்ற தொகுப்பு நூலில் பிரெஞ்சு அறிஞர்கள் பலருடைய சிறப்பான டி.என்.இராமச்சந்திரன் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற இந்தியச் சிந்தனையாளர்களைப் பற்றி ரொமைன்ட் ரோலண்ட் என்ற பிரெஞ்சு அறிஞர், பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ள நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

பிரெஞ்சு மொழியில் உள்ள வரலாற்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும், சிறுகதைகள் சிலவற்றையும் வாணிதாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.

திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு எமிலி ஜோலா வாழ்க்கை வரலாற்று நூலினை ஆங்கில வழியாக மொழிபெயர்த்து இரு பாகங்களாக 1952ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

எமிலி ஜோலா, அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடித் தண்டனை பெற்றவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அதிகாரத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்; சமூகப் போராளி. இவரைப் பற்றி உணர்ச்சி மயமாக சி.என்.அண்ணாதுரை 1959இல் ஏழை பங்காளன் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

பிரெஞ்சு சிந்தனையாளர்கள் பெரிய அளவில் தமிழில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர். புரட்சி செய்த பேனா வீரர் என்ற பெயரில் ப.கோதண்டராமன் 1946 இல் வெளியிட்டுள்ளார். அதில், பிரெஞ்சுப் புரட்சி என்ற தலைப்பில் வால்டேர், மொந்தெஸ்கியோ, திதெரோ, ஒல்பாக், மப்லி, ரெய்லால், மெர்சியே, ரூசோ ஆகியோரின் புரட்சிகரமான செயற்பாடுகளும் சிந்தனைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அஞ்சா நெஞ்சன் வால்டேர் என்ற நூலினை மா.இளஞ்செழியன் 1958ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

இது தவிர பிரேமா பிரசுரம் சிந்தனையாளர் வரிசையில், பிரெஞ்சு சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் என்ற இரு பெரும் பிரிவுகளுடன் எளிய தமிழில் நூல்களை வெளியிட்டுள்ளது.

கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலக்கியப் படைப்புகள், பிறநாட்டு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய மொழிகளில் வெளியான இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பண்பாட்டு நிலையில் பிரெஞ்சு, ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவ்விருமொழி இலக்கியங்களும் தமிழ் மனோநிலைக்கு நெருங்கிய நிலையில் இருப்பதால் அவை சித்தரிக்கும் உலகு வாசகரிடையே அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது.

பிரெஞ்சு மொழியிலிருந்து பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பெரும்பாலுமான பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் வழியாகவே தமிழாக்கப் பட்டுள்ளன. வெ.ஸ்ரீராம், மதன கல்யாணி மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள் மட்டும் பிரெஞ்சு மொழி மூலத்திலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன. அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய மாண்டி கிறிஸ்டோ நாவல் அமர சிம்ஹன் என்ற பெயரில் என்.சி.கோபால கிருஷ்ணப்பிள்ளை மொழிபெயர்ப்பில் 1914ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதுவே பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பாகும். ஆல்பர்ட் காம்யூவின் ல ட்ரன்ஞர் என்ற பிரெஞ்சு நாவல் அந்நியன் என்ற பெயரில் வெ.ஸ்ரீராமின் தமிழ் மொழிபெயர்ப்பில் 1980ஆம் ஆண்டு வெளியானது.

எமிலி ஜோலா, அலெக்ஸாண்டர் டூமாஸ், மாப்பசான், பால்சாக், மோலியர், விக்டர் ஹியூகோ முதலியோரின் படைப்புகள் பெருமளவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு நாட்டுச் சிறுகதை மன்னன் மாப்பசானின் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பாகவும், தழுவலாகவும் அமைத்துள்ளது தமிழில் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். பால்சாக்கின் சிறுகதைகள் ஏராளமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் பால்சாக் கதைகள் என்ற தொகுப்பு சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. இவ்வாறே மாப்பசான் கதைகள் பல தொகுதிகளாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சில படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்க படைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

சிறுபத்திரிகைச் சூழலில் பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் எழுபதுகள் தொடங்கி, தொடர்ந்து தமிழாக்கம் பெற்று வெளியிடப்படுகின்றன. இன்று வரை சிறுபத்திரிகைகளில் பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் நேரடியாகவோ ஆங்கிலம் வழியாகவோ தமிழில் வெளியிடப்பட்டு வருகின்றன.