4.6 இந்திய மொழி இலக்கியங்களின் தமிழாக்கம்

பண்டைக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய இந்திய மொழிகள் வடமொழி, பிராகிருதத்தின் வழிவந்த பாலி போன்றனவாகும். வடமொழி நூல்களின் பரிமாற்றம் பழங்காலத்திலிருந்தே நிகழ்ந்து வந்துள்ளது. இந்த வகையில் வடமொழியான சமஸ்கிருத மொழி தமிழுக்கு வழங்கிய கொடை பற்றி அறிவதும் அவசியமாகிறது.

4.6.1 வடமொழி மொழிபெயர்ப்புகள்

சமஸ்கிருதத்தில் சிறப்புற்று விளங்கிய மகாகவி காளிதாசரின் சாகுந்தல நாடகம், மேகசந்தேசம், ருது சம்ஹாரம், இரகுவம்சம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்க வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் எனவும், கே.சந்தானம் சாகுந்தலம், மேகதூதம் எனவும் தமிழாக்கம் செய்துள்ளனர்.

வடமொழியில் சிறந்து விளங்கிய மிருச்ச கடிகம் என்ற காப்பியத்தை மண்ணியல் சிறுதேர் என்ற பெயரில் மு.கதிரேசன் செட்டியாரும் மிருச்சகடிகம் என்ற பெயரிலேயே வேறு சிலரும் மொழிபெயர்த்தனர். பாணபட்டரின் காதம்பரி என்ற கதைநூலைத் தமிழில் ஆறு அறிஞர்கள் மொழிபெயர்த்து உள்ளனர்.

முத்ரா ராட்சசம், தசகுமார சரிதம் போன்ற நாடகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பர்த்ருஹரி என்ற கவிஞரின் நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் ஆகிய மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வடமொழியில் உள்ள கதா சரித் சாகரம் என்ற கதைத் தொகுப்பின் ஒரு பகுதி கதைக்கடல் என்ற பெயரில் வெ.இராகவன் அவர்களாலும், பஞ்ச தந்திரப் பாடல்கள் என்ற நூல் செய்யுள் வடிவிலும், உரைநடை வடிவிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நான்கு வேதங்களையும் உரைநடை வடிவில் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்தும், நேரடியாக மொழிபெயர்த்தும் தமிழில் வெளியிட்டுள்ளனர்.

4.6.2 பிராகிருத மொழி

பண்டைக்காலத்தில் இந்திய மக்கள் பேசிய மொழிகள் எல்லாவற்றையும் பிராகிருதம் என்று குறிப்பிடுவர். பிராகிருத மொழிகளில் ஒன்றான பைசாச மொழியில் இயற்றப்பட்ட பெருங்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சாதவாகனப் பேரரசன் ஹாலா தொகுப்பித்த காதா சப்த சதி என்ற பிராகிருத மொழிநூல் சிறந்தது. இதனை இரா.மதிவாணன் ஆந்திர நாட்டு அகநானூறு என்னும் தழுவல் நூலாகத் தமிழில் வெளியிட்டுள்ளார்.

இதனை, காதா சப்த சதி என்ற தலைப்பிலேயே பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

பாலி மொழியில் உள்ள தம்மபதமும், புத்த சாதகக் கதைகளும், தேரிக் கதைகளும் சில தொகுப்புகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.