5.0 பாட முன்னுரை

மொழியின் வழியாகப் பரிமாற்றமாகும் கருத்தியல், பெறுமொழி படிப்பவரின் வாழ்வியல் போக்குகளில் பெரும் ஆளுமை செலுத்துகிறது. இனம், சமயம், நிறம், மொழி போன்ற அடிப்படைகளில் பிளவுண்டு உள்ள மக்களிடையே ஒருங்கிணைந்த சமூகத் தொடர்புகளை ஏற்படுத்துவதில் மொழிபெயர்ப்பு மிக முக்கியமான செயலாற்றுகிறது.

தமிழ்மொழிச் சூழலில், சங்க காலம் முதற்கொண்டு தமிழர்கள் கடல் கடந்து உலகமெங்கும் வணிக, அரசியல், பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலிருந்து படைப்புகள் தமிழில் தழுவி எழுதப்பட்டன. தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களின் கருத்தியல் தாக்கம் காரணமாகத் தமிழரின் சிந்தனைப் போக்குகள் மாற்றம் அடைந்து வருகின்றன. தற்கால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள் தோன்றுவதற்கு உரிய களத்தினை மொழிபெயர்ப்புகள் வடிவமைத்துத் தந்துள்ளன.

திராவிட மொழிகள் தங்களுக்குள் மொழிபெயர்ப்பினால் ஏற்படுத்திய விளைவுகளையும், பிற மொழிகள் தமிழில் ஏற்படுத்திய விளைவுகளையும் இந்தப் பாடம் வெளிப்படுத்த முற்படுகிறது.